Analysis
இயற்கைக்குத் திரும்புதல் - விவசாயிகளின் கதைகள்
Mar 23, 2022
நாங்கள் கடந்த ஏப்ரல் மாதம், முக்கியமான ஐந்து விவசாய மாவட்டங்களுக்கு பயணம் செய்து (எரிபொருட் பற்றாக்குறை தீவிரமடைய முன்) அங்குள்ள விவசாயிகளிடம் உரையாடியிருந்தோம். நீண்ட காலமாக கவனிப்புக்குட்படாது நாடு முழுவதும் பரந்து கிடக்கும் கதைகள் இவை.
  • விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்திற்கு எவ்வாறு மாறுவதென்ற பயிற்சிகளோ அறிவுறுத்தல்களோ கிடைக்கவில்லை.
  • இளையோர்கள் பலர் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு நிலையான இலாபகரமான தொழில்களை நோக்கிச் செல்கின்றனர்.
  • நகர்ப்புற சமூகங்களும் நகர்ப்புற ஏழைகளுமே அதிகளவில் பாதிப்படைவர்.
  • அரசினால் முன்னெடுக்கப்பட்ட உரத்தடை, எரிபொருட் தட்டுப்பாடுடன் ஒன்றிணைந்து தற்போது உணவுத் தட்டுப்பாட்டிற்கு வித்திட்டுள்ளது.
  • \

பயணம்

பொலநறுவைக்கும் மெதிரிகிரியவுக்கும் இடைப்பட்ட நீண்ட வீதிகளில் நெல் காயவிடப்பட்டிருக்கிறது. இந்த பிரதேசங்களில் அறுவடையின் அளவு பாதியாக குறைவடைந்திருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அமுல்படுத்திய திடீர் இரசாயன உரத்தடையால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளின் கதைகளை கேட்க 2022 ஏப்ரல் மாதம் Watchdog குழுவினர் இலங்கை முழுவதும் பயணம் செய்து ஐந்து இடங்களிற்கு சென்றிருந்தோம்.

இவ்விவசாயிகளின் அனுபவங்கள், இக்கொள்கை முடிவு எவ்வளவு குறுகிய பார்வை கொண்டது என்பதையும் அதன் தாக்கத்தின் கனதியையும் உங்களிற்கு புரியவைக்கும். ஓர் ஆண்டு கழிந்த பின் கொள்கை முடிவை திரும்பப் பெற்றதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட இழப்புகளை என்றைக்குமே ஈடு செய்யமுடியாது. இவற்றுக்கு எல்லாம் மேலாக, அவர்களுக்கு வழங்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட இழப்பீடும் இன்றுவரை வழங்கப்படவில்லை.

விவசாயிகளுடன் நாங்கள் உரையாடுவதற்கு எல்லா வகையிலும் ஏற்பாடுகள் செய்து உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள், மிக முக்கியமாக தங்களது பொன்னான நேரத்தையும் நுண்ணறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து இந்தத்தொடர் உருவாகக் காரணமாயிருந்த விவசாயிகளிற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நாம் எங்கு சென்றோம்?

ராஜபக்சக்களின் கோட்டையான அம்பாந்தோட்டை விவசாயிகளின் நிலையை எமது தொடரின் முதல் பகுதியில் பகிர்ந்திருந்தோம். நாடு முழுவதுமுள்ள ஐந்து முக்கிய விவசாய இடங்களை நோக்கிய எமது பயணத்தின் ஆரம்பப்புள்ளி அதுதான். வாருங்கள் எமது வழித்தடத்தை மீண்டும் ஒருமுறை மீட்டிப்பார்த்துக் கொள்வோம்.

சம்மாந்துறை: கிழக்கின் நெற்களஞ்சியத்தில் இப்போதுதான் அறுவடை முடிவடைந்துள்ளது. அம்பாறைக்கும் சிறுநகர் ஒன்றுக்கும் இடைப்பட்ட A31 வீதி நெடுகிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அறுவடை செய்யப்பட்ட வெற்று நெல்வயல்களே தென்படுகின்றன. நாட்டின் முதலாவது நீர்ப்பாசனத் திட்டம் ஆகிய கல்லோயாவின் துணை நதிகள் வயல்களுக்கு நீர் பாய்ச்ச வீதியை குறுக்கறுத்து பாயவேண்டும், ஆனால் அவையோ காய்ந்து கிடக்கின்றன. அதற்கான காரணத்தை பிறகு பார்ப்போம். இரு போகங்களுக்கு இடையில் வெற்று வயல்களில் எஞ்சி கிடப்பதை உண்ண யானைகள் அங்கு உலாவரும். இந்தப் பெருவீதியில் இருந்து மோட்டார் சைக்கிள்களும் உழவு இயந்திரங்களும் செல்லும் ஒரு மண்பாதையில் நீண்ட தூரம் பயணித்து, பிரதேச செயலாளருடனான கூட்டத்துக்காக விவசாயிகள் மதிய உணவு சமைத்துக் கொண்டிருக்கும் பட்டம்பிட்டி அணைக்கட்டை சென்றடைந்தோம்.

வலப்பன: ஊரடங்கு அப்போதுதான் தொடங்கியிருந்தது. நாங்கள் தென்னஹென்வல வயல்களை நோக்கி ஹரகம வீதியில் செங்குத்தாக ஏறிநடக்கத் தொடங்கினோம். உயரத்தில் மலைகள் சூழ நெல்லும் சிறு பாத்திகளில் மரக்கறிகளும் விளைந்து காணப்படுகின்றன. இந்த வயல்கள் மலைகளின் சரிவுகளில் அமைக்கப்பட்டுள்ளதால் இங்கு இயந்திரங்களை கொண்டு வரமுடியாது. நெல் விதைப்பும் அறுவடையும் பாரம்பரிய முறைப்படி கைகளாலேயே செய்யப்படுகின்றன. இப்பிரதேசத்தில் கடந்த பத்து வருடங்களாக வெப்பம் அதிகரித்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிப்பது, காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இங்கும் காலெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளதை நமக்கு உணர்த்துகிறது.

பொலநறுவை: வடமத்திய மாகாணத்தின் நிலப்பரப்பு நெல்வயல்களும், மரக்கறித்தோட்டங்களும் மற்றும் அறுவடையைத் தொடர்ந்து நடாத்த உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனக்குளங்களும் நிறைந்தது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மெதிரிகிரிய மற்றும் ஹிங்குராங்கொட வீதிகளில் காயவிடப்பட்டுக் கிடக்க பல தசாப்தங்களாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்களது ஞாபகங்களை இரை மீட்டுகின்றனர். மகாவலி நீர்ப்பாசனத்தின் வாய்க்கால்களால் வளமூட்டப்படும் இப்பிரதேசம், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் உரத்தடைக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்ட மூலந்தெரியாத நாட்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் அதிகளவில் பதிவாகிய பிரதேசமாக காணப்படுகிறது.

யாழ்ப்பாணம்: தீபகற்பத்தின் வாயிலைத் தாண்டி நாம் உட்செல்ல வெளிறிய கடல் நீலமும் செம்மண்ணுமாக நிறங்கள் மாறுகின்றன. இந்த வளமான மண்ணில் காணும் இடமெல்லாம் பழமரங்களும், நெல்லும் புகையிலையும் விளைந்து காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக விளங்கும் அனைவராலும் விரும்பப்படும் சில பயிர்களை விளைவிக்கும் மருதனார்மடம், இணுவில் மற்றும் கந்தரோடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சிலரை நாம் சந்தித்தோம். வயல்கள் ஒரு புறமும் இராணுவ கண்காணிப்பு கோபுரங்களால் மறு புறமும் நிறைந்த ஒரு சிறிய வீதியொன்றினூடாக நாங்கள் பயணிக்கின்றோம்.

விவசாயிகள் ஏன் முக்கியமானவர்கள்?

நாங்கள் இந்தத் தொடருக்கான கள ஆய்வுகளை செய்து முடித்து ஒரு மாதத்துக்கு பிறகு அதாவது ஒரு வருடப் பேரழிவுக்குப் பிறகு அரசு அசேதன உரத்தடையை திரும்பப்பெற்றது. நடந்த அழிவுகளிற்கு இழப்பீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை. உரங்களின் விலைகள் தற்போது மும்மடங்காகி விட்டபடியால் பல விவசாயிகளுக்கு இன்னும் உரங்கள் கைக்கு எட்டாத் தூரத்திலே தான் காணப்படுகின்றன. எரிபொருட்தட்டுப்பாடும் புதிதாய்ச் சேர விவசாயிகளுக்கு அடிமேல் அடி.

அண்மையில்தான் பணவீக்கத்தை பின்தொடரும் செயலியை நாம் வெளியிட்டிருந்தோம். அதில் காட்டப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் சடுதியான விலையேற்றத்தில் விவசாயிகளின் பங்கு என்ன?

இலங்கையிடம் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலவாணி இல்லை. அதன் பலனாக கடனுதவிகளிலும் உலருணவு உதவிகளிலும் நாம் தங்கியுள்ளோம். இவ்வுதவிகளும் ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கும் விவசாயிகளாலும் நமது மொத்தத் தேவைக்கான உற்பத்தியை மேற்கொள்ள இயலாது. எனவே விலைகள் மென்மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்புண்டு.

ஒட்டுமொத்த ஆற்றலையும் வளங்களையும் இவ்விவசாயிகள் போன்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவுவதில் திருப்புவதுதான் இச்சிக்கலுக்குரிய பொருத்தமான தீர்வாக அமையும். தேசிய மட்டத்தில் இவ்வாறான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படுவதாக இதுவரை தெரியவில்லை.

முன்பெல்லாம் விவசாயிகள் சந்தைகளில் தமது உற்பத்தியை விற்ற பின்னும் அவர்களது குடும்பத்துக்கு தேவையான அளவு உணவு எஞ்சியிருக்கும். கடந்த இருபோகங்களில் அறுவடையில் ஏற்பட்ட இழப்புகளால் இந்த இரண்டில் ஒன்று என்ற முடிவு எடுக்க அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எமது அன்றாட உணவுகளின் பெரும்பங்கு அவர்களின் பங்களிப்பே. அவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடியும் நாம் கொள்வனவு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பலனளிக்காத பயிர்ச்செய்கை

எமது பயணம் நீள நீள நாங்கள் கேட்ட கதைகளிலிருந்த ஒற்றுமையும் அதிகரித்தது. நாடு முழுவதும் உரத்தடையால் ஏற்பட்ட தாக்கத்தால் விவசாயிகள் துவண்டு போயுள்ளனர். பலரால் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட செலவைக்கூட ஈடுகட்ட முடியவில்லை.

நாங்கள் சென்ற அனைத்து இடங்களிலும் நாங்கள் கேட்ட பிரச்சினைகள் இவைதாம்:

  • வரலாறு காணாத அளவிலான அரசின் தலையீடு  - ‘மாற்றங்கள்’ அனைத்தையும் அரசே தீர்மானித்தது.

எமது மீறப்பட்ட வாக்குறுதிகளும் கொள்கை குளறுபடிகளும் கட்டுரையில் கடந்த 80 ஆண்டுகளில் விவசாயத்தில் அரசின் தலையீடுகள் எவ்வாறிருந்தது என பார்த்திருந்தோம். நாங்கள் சந்தித்த விவசாயிகளும் அரசின் ஆணைகளால் பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி கூறியிருந்தனர். அவர்களை பொறுத்தவரை இது, அரசின் முடிவுகளால் ஏற்படுகின்ற இழப்புகளுக்கு அரசே பொறுப்பு என்பதற்கான அத்தாட்சி.

‘‘1962 இல் அசேதன உரங்களையும் கலப்பின விதைகளையும் பயன்படுத்த சொன்னது யார்? அரசுதான்! இப்போது சேதன உரங்களை பயன்படுத்த சொல்வது யார்? அதுவும் அரசேதான்! அவர்கள்தான் விதிமுறைகளை நிர்ணயித்தார்கள், எனவே இதற்கும் அவர்களே பொறுப்பு.’’ - பட்டம்பிட்டி, சம்மாந்துறை

  • அரசின் குறைவான ஆதரவு மற்றும் பயிற்சிகள்

நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் விவசாயிகளுக்கு அரச விவசாய உத்தியோகத்தர்களிடமிருந்து ஆதரவு சொற்ப அளவே கிடைத்ததை அவதானிக்கக் கூடியதாயிருந்தது. இந்நிலை மழையை நம்பிய விவசாயம் நடக்கும் யாழ்ப்பாணம் மற்றும் வலப்பனவில் மட்டுமன்றி முறையே மகாவலி மற்றும் கல்லோயா நீர்ப்பாசனத்தால் விவசாயம் நடக்கும் பொலநறுவை மற்றும் சம்மாந்துறையிலும் காணப்பட்டது. இதன் பொருள், அடிக்கடி இடம்பெற வேண்டிய பயிர்ச்செய்கை தொடர்பான சோதனைகள் இடம்பெறவில்லை, இரசாயன உரத்தடை போன்ற பெரிய மாற்றங்களுக்கு முன் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. பெரும்பாலான விவசாயிகள் தமக்கு கிடைத்த தொழிநுட்ப பயிற்சிகள் ஏட்டுச் சுரைக்காயாய் இருந்தனவே தவிர நடைமுறை பயிற்சிகளாய் இருக்கவில்லை எனக் கூறினர்.

இரசாயன உரத்தடை தொடர்பில் பல விவசாய உத்தியோகத்தர்கள் நாட்டம் காட்டவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். தங்களது கேள்விகளுக்கு பதிலளிப்பதில் உத்தியோகத்தர்கள் ஆர்வம் காட்டவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். சில இடங்களில் அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் வழங்கிய நனோ நைதரசன் திரவ உரத்தை எவ்வாறு, எந்த அளவில், பயிரின் எந்த பருவத்தில் பயன்படுத்துவது என எதுவித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை.

“உத்தியோகத்தர்கள் எங்களுக்கு பயிற்சி அளிக்க வந்தார்கள், ஆனால் நாங்கள் அவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டியதாய் போயிற்று! இந்தப் பயிற்சிகளை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட அந்த அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட சுற்றுநிருபத்திலோ அறிவிப்பிலோ தாம் வாசித்ததை திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருந்தனர். எமது நடைமுறை அனுபங்களிலிருந்து கேள்விகளை நாங்கள் கேட்டபோது அவர்களிடம் அதற்கு பதில்கள் இருக்கவில்லை.” - தென்னஹென்வல, வலப்பன

  • எரிபொருட் சிக்கல்கள்

எமது கள ஆய்வின் போதுதான் எரிபொருள் நெருக்கடி மோசமாகத் தொடங்கியது. இரசாயன உரங்களை வாங்குவதற்கு பெருமளவில் செலவழித்த விவசாயிகள் கூட தமது வேலைகளை இடைநிறுத்த வேண்டியேற்பட்டது. எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதம் அறுவடையைத் தாமதப்படுத்துவதோடு பொருளாதார மத்திய நிலையங்களுக்கு அறுவடையைக் கொண்டு செல்வதிலும் தாமதத்தை ஏற்படுத்தலாம். இதனால் உற்பத்தி சந்தையையோ நுகர்வோரையோ வந்தடைவதே கேள்விக்குறி. அப்படியே வந்தடைந்தாலும் அது நுகரக்கூடிய நிலையில் இருக்குமா என்பது உறுதியில்லை.

அறுவடைக்காக நாங்கள் நாட்கணக்கில் வரிசையில் நின்று சரியான நேரத்தில் டீசலைப் பெற்றுவிட்டோம். ஒரு கட்டத்தில் நெல்லானது அதிகளவில் பழுக்கத் தொடங்கும், அதற்கு பிறகு ஒரு நாள் காத்திருந்தாலும் அதை அறுவடை செய்யவோ நுகர்வுக்காக ஆயத்தப்படுத்தவோ முடியாத நிலையை அது அடைந்துவிடும்.” - வெலன்கஹவெல, அம்பாந்தோட்டை

  • சடுதியாக அதிகரித்த விவசாயத்தின் மீதான இளைஞர்களின் நாட்டக்குறைவு

ஒவ்வொரு வருடமும் அதிகளவான இளைஞர்கள் விவசாயத்திலிருந்து விலகிச் செல்வதாக முதிய விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உரத்தடையின் பின், பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து அவர்களது சிரமங்கள் மோசமானவுடன் இந்த வேகம் இருமடங்காகி விட்டது. மாதாந்த சம்பளம் கிடைக்கும் தொழில்களைத் தேடி இளைஞர்களும் யுவதிகளும் அருகிலுள்ள நகரங்களுக்கோ, கொழும்புக்கோ ஏன் சில சமயம் வெளிநாடுகளுக்கோ கூட செல்கின்றனர்.

இறுதியாக 2013/14 இல் எடுக்கப்பட்ட பொருளாதார மதிப்பீடு மேற்படி கூற்றோடு ஒத்துப்போகிறது. நாங்கள் சென்ற அனைத்து இடங்களிலும் 50 வீதமான விவசாயிகள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். 2013/14 பொருளாதார மதிப்பீடு, யாழ்ப்பாணம் வலிகாமத்தில் இது மேலும் உயர்வாக  66 வீதமாக காணப்படுகிறது.

இளைஞர்கள் விவசாயத்தில் முதலில் கொஞ்சம் ஆர்வம் கொண்டிருந்தனர், உரத்தடையுடன் அந்த ஆர்வமும் இல்லாமல் போயிற்று. அவர்கள் நிலைபேறான ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், விவசாயமோ முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நிலைபேறற்று உள்ளது. பல இளைஞர்களுக்கு அவர்களது கல்வித் தகுதி மற்றும் முதிய குடும்பத்தினரை பராமரிக்க வேண்டியிருத்தல் போன்ற காரணிகளால் விவசாயத்தை விட்டால் சம்பாதிக்க வேறு வழியில்லை. இதனால் இன்னொரு தலைமுறையும் இந்த நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும்.” - கந்தரோடை, யாழ்ப்பாணம்

  • முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இயற்கை வழி விவசாயம் வெற்றி பெற்றிருக்கும்

நாங்கள் சந்தித்த எந்தவொரு விவசாயியும் இயற்கை வழி விவசாயத்துக்கு எதிராக இருக்கவில்லை. ஆனால் இரவோடிரவாக அரசு எடுத்த முடிவில் அவர்கள் மிகுந்த கோபம் கொண்டுள்ளனர்.

இம்மாற்றம் மிதமான கதியில் முன்னெடுக்கப்பட்டிருப்பின் தமக்கு மாறுவதற்கு நேரம் கிடைத்திருப்பதுடன் சடுதியான வருமான இழப்பும் ஏற்பட்டிருக்காது என அவர்கள் எண்ணுகிறார்கள்.

“எங்கள் அனைவருக்குமே தெரியும், இயற்கை முறைகளுக்கு மிதமான கதியில் மாறியிருந்தால் இது வேலை செய்திருக்குமென்று, ஆனால் ஒரு இரவில் நடந்த மாற்றம் எங்களை பாரிய சிக்கலில் தள்ளிவிட்டது - ஒரே வெட்டில் தலை துண்டானது போலாயிற்று.” - மெதிரிகிரிய, பொலநறுவை

இயற்கை விவசாயம்

விவசாயிகளுடைய அனுபவங்களையெல்லாம் கேட்ட பிறகு நிறையக் கேள்விகளே எம்மிடம் எஞ்சியிருந்தன. ஜனாதிபதியின் திட்டமானது முழுமையான சேதன உற்பத்திகளை விளைவிக்குமா என்பதே எம்மிடமிருந்த முதன்மையான கேள்வி.

விவசாயிகள் பயிர்ச்செய்கைக்காக கடந்த அறுபது ஆண்டுகளாக இரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ச்சியான இரசாயனப் பயன்பாடு மண்ணில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி அதற்கேற்றாற் போல் மண்ணை இசைவாக்கமடையச் செய்துவிட்டது. நாம் ஒரு போகத்தில் இரசாயனப் பயன்பாட்டை குறைத்தாலோ தவிர்த்தாலோ கூட மண் இரசாயனத்தை பஞ்சு போல் உறிஞ்சி வைத்திருப்பதால் அதன் தாக்கம் சில போகங்களுக்கு நீடித்திருக்கும். விவசாயிகளிடம் இரசாயனப் பயன்பாட்டை ஒரு இரவில் நிறுத்தச் சொல்லிவிட்டு அறுவடை மட்டும் அதே  அளவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பது மடத்தனம்.

விவசாயிகள் இயற்கை பசளையுடன் உயர் விளைச்சல் தரும் கலப்பின வகைகளை[HYV] பயன்படுத்த நேரிடுகின்றது. நாங்கள் சந்தித்த விவசாயிகள் அனைவரும் இந்த இரண்டும் அடிப்படையிலேயே ஒத்து வராதவை என தங்கள் அனுபவத்தை அடிப்படையாக வைத்து கூறினர்.

“கலப்பின விதைகள் இயற்கை பசளைகளுடன் நல்ல விளைச்சலை தருவதில்லை. பாரம்பரிய விதைகள் இரசாயன உரங்களுடன் நல்ல விளைச்சலை தருவதில்லை. உரத்துடன் ஒத்திசையக்கூடிய விதைகளை அவர்கள் தந்திருந்தால் ஒருவேளை இந்தத் திட்டம் வெற்றியடைந்திருக்கலாம்_.”_ - அம்பாந்தோட்டை

பேராதனைப் பல்கைலைக்கழக பேராசிரியர் புத்தி மாரம்பே உள்ளிட்ட முன்னிலை வேளாண் விஞ்ஞானிகள் இயற்கை விவசாயக்கொள்கையினை நடைமுறைப்படுத்த கூறப்பட்ட காரணத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். இயற்கை விவசாயத்திற்கு திரும்பல் அந்நிய செலவாணியை ஈட்டுவதற்கான ஒரு வழியாக விளங்குகின்ற அதே வேளை, அதற்கு பதிலீடாக நாட்டின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவது முட்டாள்தனம் என எமது வலையொலியான The Doghouse இல் பேராசிரியர் மாரம்பே குறிப்பிட்டிருந்தார்.

செல்லும் இடமெல்லாம் புதுப்புதுக்கதைகள்

மேற்படி ஒற்றுமைகளின் மேலேயே இந்த ஆய்வு கட்டியெழுப்பப்படுகிறது. கோத்தபாய ராஜபக்சவின் இரசாயன உரங்களைத் தடைசெய்யும் முடிவு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் மீது மாபெரும் அழிவை சுமத்தியுள்ளது. இந்தப் பொதுவான பேரழிவில் இடத்துக்கேற்றாற் போல் சின்னஞ்சிறு வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

அடிப்படையான தாக்கத்தில் மாற்றமேதும் இல்லையென்ற போதும், தடையினால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அவர்களது இடம், பயிர்கள் மற்றும் உள்ளூர் அரசியலுக்கேற்றாற் போல மாறுபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை: ‘அபிவிருத்தி’ அரசியல்

வருமானத்தை அதிகரிக்கும் உத்தியாகவோ அல்லது குடும்பத்துக்கு தேவையானதை விளைவிக்கவோ செய்யப்படும் பல்லினப் பயிர்ச்செய்கைக்கு உதாரணமாகத் திகழும் ஒரு சிறிய மரக்கறிப்பாத்தியை சுற்றி விதைக்கப்பட்டிருக்கும் நெல் நிறைந்த வயலினூடு நடந்து செல்கிறோம். தொலை தூரத்தில் நீட்டப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வயல்களை ஊடறுத்து செல்வதை பார்க்கக் கூடியதாகவுள்ளது. இந்தப் பெரிய வெளியை நெடுஞ்சாலை பிளந்ததன் பின் ஏக்கர் கணக்கான பயிர்ச்செய்கை நிறுத்தப்பட்டு விட்டது. நெடுஞ்சாலை திறக்கப்பட்டு இரு ஆண்டுகள் கடந்த பின்னும் பயிர்ச்செய்கை நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட இழப்பீடு இன்னும் வந்து சேரவில்லை. அவர்களது சுற்றுப்புற ஊர்களில் அந்த நட்ட ஈட்டின் சிறியதொரு பகுதியையாவது பெற்றது அவர்களுக்கு தெரிந்து ஒரேயொரு நபர் மட்டுந்தான்.

“நெடுஞ்சாலை வந்த போது நிறைய விவசாய நிலங்களை நாங்கள் இழந்துவிட்டோம். எங்களுக்கு தெரிந்து நட்ட ஈட்டை பெற்ற நபருக்கு கூட அவருக்கு கிடைக்க வேண்டியதில் ஒரு சிறு பங்குதான் கிடைத்துள்ளது. பல விவசாயிகளுக்கு ஒரு சதம் கூட கிடைக்கவில்லை.”

சம்மாந்துறை: நிறுத்தப்பட்ட நீர் வரத்து; நிறுத்த முடியாத யானை வரத்து

சம்மாந்துறையில் பெரும்போக அறுவடை இப்போதுதான் முடிந்துள்ளது, சிறு போகத்துக்கான ஏற்பாடுகள் யாவும் பிந்திப்போயுள்ளன. உழவு இயந்திரத்திற்கான எரிபொருளின் பற்றாக்குறை காரணமாக வயல்களை உழ முடியாததால் நீர் வரத்தை நிறுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்கு விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

சேனாநாயக்க சமுத்திரத்திலிருந்து நீர் வரும் வாய்க்கால்கள் அனைத்தும் வறண்டு போய் கிடக்கின்றன. அவ் வாய்க்கால்களினூடு நீரைச் செலுத்த வேண்டாம் என்று விவசாயிகளே நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் காத்திருக்கும் காலம் அதிகரிக்க அதிகரிக்க பயிர்ச்செய்கைக்கு உகந்த காலநிலை மாறக்கூடும். அது இன்னுமோர் மோசமான அறுவடையைத்தான் தரும்.

“வயல்கள் தயார் இல்லாமல் இருக்கையில் நீரை அனுப்பி என்ன பயன்? இப்போது நீரைத் திறப்பது வீண். முழுப் போகமுமே மாறிவிட்டது. முன்பு காலநிலை மாற்றமும் பயிர் வளர்ச்சியும் சமநிலையில் இருந்தது. இப்போது வளர்ச்சி இருக்குமா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.”

பல இடங்களில் பயிர்ச் சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது. நெற்செய்கை முடிந்தவுடன் வேறுபயிர்களை மற்ற பிரதேசங்களிலுள்ளவர்கள் பயிரிடுவார்கள். யானை நடமாட்டத்தின் காரணமாக சம்மாந்துறை விவசாயிகளால் அவ்வாறு செய்ய முடிவதில்லை.

கிழக்கின் திறந்த வெளி விவசாய நிலங்கள் சுற்றுப்புற காடுகளிலிருக்கும் யானைகளின் உறைவிடமாகும். பல்லாண்டுகள் தொடரும் ஒத்திசைவான வாழ்க்கை காரணமாக பயிரிடும் காலங்கள் பற்றிய அறிவு யானைகளுக்கு இருக்கிறது. நீர் திறக்கப்படுவதற்கு மூன்று மாதங்கள் முன்பாக நாற்றுகள் நடப்படும். நாற்று நடத்தொடங்கிய பின் இப்புத்திசாலி விலங்குகள் வயலுக்குள் காலெடுத்து வைக்க மாட்டா. பெரு சிறு போகங்களுக்கு இடையில் அறுவடைக்குப் பின் எஞ்சியவற்றை உண்ண மட்டுமே அவை அப்பக்கத்தில் உலாவரும்.

பெரு சிறு போகங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் யானைகளின் நடமாட்டம் காரணமாக வேறு பயிர்களை நடுவதில்லை.

யால மற்றும் லுனுகம்வெஹர தேசிய பூங்காக்களை இடைவெட்டும் பிரதான வீதியினுடாக யானை ஒன்று உலாவருகிறது. - ஜூலை, 2020. படம்: நதீம் மஜீத்.

வலப்பன: பெருத்த ஏமாற்றம்

வீட்டிலேயே கூட்டுப்பசளையை உற்பத்தி செய்வதற்காக களு மல்லி போன்ற விவசாயிகள் 650,000 ரூபா பெறுமதியான கூட்டுப்பசளைப் பொறிகளை கொள்வனவு செய்துள்ளனர். கூட்டுப்பசளை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மிக அதிகமாக உள்ளன. அவரது பண்ணையில் இருந்து இலை தழைகள் கிடைக்கின்ற போதிலும் கோழி எரு போன்ற ஏனைய சில சேர்மானங்களை அவர் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக பொறியை இயக்குவதற்குத் தேவையான எரிபொருளையும் அவர் தேட வேண்டியுள்ளது. அவரும் வேறு சில விவசாயிகளும் இந்தப்பொறியை பயன்படுத்த ஆகும் செலவை ஈடுகட்ட தமது தங்கநகைகளை அடகும் வைத்துள்ளனர்.

காட்டில் வளரும் பூவரசு போன்றவற்றின் இலைகளையும் நாங்கள் பயன்படுத்தப்போகிறோம், அத்துடன் பரம்பரை பரம்பரையாக எமக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய பசளை உற்பத்தி முறைகளையும் பயன்படுத்தப்போகிறோம். மூன்று கிலோ சேதனப்பொருட்கள் இருந்தால்தான் ஒரு கிலோ சேதனப்பசளை தயாரிக்க முடியும். இந்த முறைகள் எல்லாம் இரசாயன உரத்துக்கு துணையாக பயன்படுத்தப்பட்டவை, அவை தனித்து விளைச்சலுக்கு உதவமாட்டா.”

அவர் தனக்கு அரசால் வழங்கப்பட்ட சேதன உரம், நெல்லுக்கு மட்டுமே உகந்த நீர்ம சேதன உரமான ‘தியரு பொஹொர’ என்கிறார். தடையின் பின் அதனது விலை 450 ரூபாவிலிருந்து 4500 ரூபாவாக அதிகரித்துள்ளது. வீட்டிலேயே அவர் தயாரிக்கும் பசளையை மட்டும் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கின்ற சிறு விளைச்சலைக் கூட பெறமுடியாதென்பதால் அந்த விலையை ஏற்றுக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

அந்தப்பிரதேசத்தின் மலைகளைச் சுற்றி நடக்கையில், கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பச்சைக்கம்பளம் விரித்தாற் போல் காணப்படும் நெல்வயல்களை கண்டு நாங்கள் வியந்து போனோம். தொடுவானமருகே இருக்கும் மலைகளால் சூழப்பட்ட பச்சைப்பசேலென்ற வயல்வெளிகள், இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் ஏராளமாக விளைந்து கிடக்கின்றன. எமக்கு இடங்களை சுற்றிக்காட்டிக் கொண்டிருந்த விவசாய செனெவியோ எம்மை கூர்ந்து கவனிக்கச் சொன்னார்.

”இந்தக்கட்டத்தில் நெல்லின் உயரம் இதைவிட அதிகமாக எனது இடுப்பளவுக்கு இருக்க வேண்டும். இது பச்சைப்பசேலென்று ஆரோக்கியமாக தென்படுவது என்னவோ உண்மைதான். கூர்ந்து பார்த்து அவற்றில் எத்தனை நாற்றுக்களில் நெல்மணிகள் உள்ளன என்று உங்களால் சொல்ல முடியுமா?”

”இத்தனை பச்சையிலும் நெல் மணிகளைக் கொண்டுள்ள நாற்றுக்களை நீங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். எமக்கு தாமதமாக உரம் கிடைத்தபடியால், பருவமும் மாறிவிட்டது. கடின மழையொன்று பெய்தால் எமது மொத்தப்பயிரையும் இழக்கும் நிலையில்தான் எமது பயிர்கள் உள்ளன. இன்னும் சில நாட்களில் மழை பெய்யப்போவதாக வேறு எனது உள்ளுணர்வு கூறுகிறது.”

பொலநறுவை**: சிறுநீரகக் கோளாறுகளுக்கும் வன்னீருக்கும் உள்ள தொடர்பு**

மூலந்தெரியாத நாட்பட்ட சிறுநீரகக் கோளாறுகளை இரசாயன உரங்களின் தடைக்கு முக்கிய காரணமாக ஜனாதிபதி ராஜபக்ச தெரிவித்திருந்தார். இங்குள்ள விவசாயிகளோ இரசாயன உரப்பயன்பாடு மட்டுமே மூல காரணமில்லை நீரின் தரமும் காரணம் என்கின்றனர். இடத்துக்கிடம், நிலத்தடி நீர்ப்படுகைகளில் வன் உலோகங்கள் மற்றும் தாதுக்களின் இருப்புக்கேற்ப நீரின் தரம் மாறுபடும்.

நீர்ப்படுகை என்பது நிலத்தடி நீரால் நிரம்பிய நுண்துளைகள் கொண்ட பாறை ஆகும். மழைப்பொழிவின் போது நீர் மண்ணினூடு கசிந்து நிலத்தடி நீராக நீர்ப்படுகைகளை அடையும். அது நீர்ப்படுகைகளினூடு நகர்ந்து ஊற்றுகள் வழியாகவும் கிணறுகள் வழியாகவும் மேல்மட்டத்தை மீண்டும் அடையும்.

வன்னீர் சிறுநீரகக்கோளாறுகளினை ஏற்படுத்தியதில் முக்கிய பங்குவகித்ததாக கூறுகிறார்கள். இரசாயன உரப்பயன்பாடுதான் சிறுநீரகக் கோளாறுக்கு காரணமென்றால் தங்கள் அனைவருக்கும் அது ஏற்பட்டிருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

“எமது அரிசியில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. சிறுநீரகக்கோளாறு என்று சொல்லி எங்களை இயற்கை விவசாயம் செய்யச் சொல்லி விட்டு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கிறார்கள். அந்த அரிசியெல்லாம் இயற்கை விவாசயத்தில் உண்டானதா? எமது தந்தைகளும் சிறுநீரகக்கோளாறுகளால் இறந்தனர், ஆனால் அதற்கு உரம் மட்டும் காரணமில்லையென எங்களுக்குத் தெரியும். நாங்கள் பட்டினியாய் கிடந்து இறப்பதைவிட சிறுநீரகக்கோளாறால் இறப்பது எவ்வளவோ மேல்.”

2018 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது மாவட்டத்திலுள்ள அவரது தொகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) பங்களிப்போடு ஓராண்டு இயற்கை விவசாயத்திட்டத்தை முன்னெடுத்திருந்தார். அந்த வருடம் முழுதும் தெரிவு செய்யப்பட்ட சில விவசாயிகள் பயிற்சிகளுக்காக இயற்கை உரத்தயாரிப்பிடங்களுக்கும் பச்சைவீட்டு விவசாய இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இயற்கை விவசாயத்தின் அனைத்து கட்டங்களுக்குமான பயிற்சிகளை அவர்கள் பெற்றனர். சில காலத்தின் பின் ஏனைய மானிய திட்டங்கள் போல இதுவும் இடைநிறுத்தப்பட்டது. ‘‘உரத்தடையின்போது வழங்கப்பட்ட உதவிகளை விட அந்தத்திட்டத்தின் போது வழங்கப்பட்டவை சிறப்பாக இருந்தது.’’ என அவர்கள் கூறினார்கள்.

“அப்பயிற்சியின் பின் நானே எனது விவசாயத்தில் 50% ஐ இயற்கை விவசாயமாக மாற்றிவிட்டேன். எங்களில் சிலர் அவ்வாறு செய்திருந்தோம். பலன்கள் கிடைக்க சில காலங்கள் ஆன போதும், இத்தடையின் போது அது எனக்கு பெரும் உதவியாய் இருந்தது. என்னிடம் விற்கவும் பின்பு வீட்டிற்கு கொண்டு செல்லவும் தேவையான அளவு  விளைபொருட்கள் உள்ளன.”

யாழ்ப்பாணம்: போர், இராணுவமயமாக்கல், மற்றும் உரம்

தீபகற்பத்தினூடாக பயணிக்கையில், திராட்சை, வெங்காயம், புகையிலை, நெல், வாழை, மாங்காய் என  பல்வகைப்பட்ட பயிர்கள் அந்த செம்மண்ணில் வளர்க்கப்படுவதை நாங்கள் அவதானித்தோம்.

மரக்கறிச்செய்கை ஒன்றின் வேலியில் புகையிலை இலைகள் காயவைக்கப்பட்டிருந்தன. இந்தப்படத்தில் உள்ள விவசாயி புதிதாக வெங்காயங்களை நடுகின்றார், ஏனெனில் அவை தற்போது நல்ல விலை போகின்றபடியால் இது அவற்றை விளைவிக்க ‘நல்ல நேரம்’ என அவர் கூறுகின்றார்.

சிறு மரக்கறிப்பாத்திகளுக்கு இடையில் பெரிய புகையிலைப்பாத்தி காணப்படுகிறது. தற்போது நல்ல விலை போவதால் புகையிலையை நிறையப் பேர் பயிரிடுகின்றனர் என அவர் கூறினார். முகவர்கள் ஒரு புகையிலை இலையை 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்கின்றனர். எமது உரையாடலின் மத்தியில் போர்க்காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது அவரது அனுபவம் எப்படி இருக்கிறது எனக்கேட்டோம்.

அவர் சிரித்துக்கொண்டே பின்வருமாறு கூறினார்.

“போர்க்காலத்தில் குறைந்தது தொடர்ச்சியான உரவழங்கலாவது இருந்தது. வவுனியாவில் உள்ள விவசாய நிலையங்கள் எமக்கு தொடர்ச்சியாக உரங்களை அனுப்பிக் கொண்டிருந்ததால் எம்மால் பயிரிட முடிந்தது.”

வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழல் அரசாங்கம் நடந்து கொண்டிருந்த வேளையில் இலங்கை அரசின் பணிமனைகள் அத்தியாவசிய பொருட்களான உரம் போன்றவற்றை வடக்குக்கு வழங்கிக் கொண்டிருந்தன. அங்கு உற்பத்தி செய்யப்பட்டவற்றை விநியோகிக்கும் பணியை புலிகள் கையாண்டு கொண்டிருந்தனர்.

வலிகாமம் மேற்கில் பயிரிடுகின்ற விவசாயிகள் சிலருடன் நாங்கள் உரையாடினோம். அங்கிருந்து சிறிது தூரம் வடக்கு நோக்கி நடந்தால், பலாலி-காங்கேசன்துறை அதியுயர் பாதுகாப்பு வலயத்தை அடைந்துவிடலாம். தீபகற்பத்தின் சில துண்டுக்காணிகள் அதன் உரிமையாளர்களின் பயன்பாட்டுக்கு விடுவிக்கப்பட்ட போதிலும், பெருமளவான பகுதி இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளன. தற்போது இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் பல தமிழ்க்குடும்பங்கள் ஒருகாலத்தில் பயிரிட்டு வந்த நல்ல வளமான நிலங்களின் பெரும்பகுதி அந்த வலயத்தினுள்ளேயே வருகின்றன.

தானே வலிந்து உருவாக்கிய இந்நெருக்கடியில் இருந்து தப்பிக்க வீட்டுத்தோட்டத்தை வலியுறுத்துகிறது அரசு, வடக்கு மாகாணத்தின் நிலையோ வேறாகக் காணப்படுகிறது. தொடர்ச்சியான இராணுவமயமாக்கலின் விளைவாக, இவ் இக்கட்டிலிருந்து தப்பிக்க பலரிடம் நிலையான வீடோ தோட்டங்களோ இல்லை. இது போதாதென்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இராணுவம் தான் ஆக்கிரமித்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறது. விளைபொருட்களை உள்ளூர் சந்தைகளுக்கு இராணுவம் விற்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மாகாணம் முழுதும் உள்ள மக்களிடமிருந்து இவ்வழுகுரல் எழுகிறது. இது நீதிக்கான அழுகுரலும் கூட, பல ஆண்டுகளாக இந்த இடம்பெயர்ந்தோர் தமது சொந்த நிலங்களுக்காக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

“எமது நிலங்களில் நாங்கள் வளர்த்த மரங்களும் உண்டாக்கிய தோட்டங்களும் இராணுவ முகாம்களுக்கு உள்ளே அகப்பட்டுள்ளன. அவற்றில் விளைந்தவற்றை நாங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறோம். அவை எம்மிடமிருந்தால், எமது நிலங்கள் எம்மிடம் திரும்பக் கிடைத்தால் இந்த நெருக்கடியிலிருந்து எம்மால் தப்பிப் பிழைக்க முடியும்.”

சரியான இயற்கை விவசாய நடைமுறை

நாங்கள் பொலநறுவையிலிருந்த போது வாய்க்கால்களோடு இணைந்த சிறு வீதிகளினூடு பயணித்து ஹிங்குராங்கொடவை அடைந்தோம். அங்கு ஜயதிஸ்ஸ மாமா என்றழைக்கப்படும் எம்.கே. ஜயதிஸ்ஸ அவர்களை சந்தித்தோம். பயிர்ச்செய்கை பற்றி பல்லாண்டுகள் அனுபவம் நிறைந்த அவர் ஒரு இயற்கை விவசாயி மற்றும் சமூக அமைப்பாளர் ஆவார். 1960 களில் தனது தந்தைக்கும் அவரது நண்பர்களுக்கும் இரசாயன உரங்கள் மற்றும் உயர் விளைச்சல் தரும் கலப்பின வகை விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டதை உடனிருந்து கண்டதை அவர் இச்சமயத்தில் நினைவு கூர்ந்தார்.

ஜயதிஸ்ஸவும் அவரது மனைவி ராணியும் கடந்த முப்பது ஆண்டுகளாக முழுமையான சேதன விளைபொருட்களை தமது நிலத்திலிருந்து உற்பத்தி செய்து வருகின்றனர். முதன் முதல் அவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறியதிலிருந்து பலன் கிடைக்க சில ஆண்டுகள் ஆகியதாக அவர் கூறினார். தற்போது கூட அதற்கு நீண்ட நேரத்தை அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என்றும் களைகள், மழை மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் ராணி கூறினார். “நான் முதன்முதலில் ஆரம்பித்த போது அனைவரும் என்னை பைத்தியம் என்று நினைத்தார்கள்” என ஜயதிஸ்ஸ கூறினார். இப்போது இந்த சிறு பண்ணையிலிருந்து தேவைக்கு அதிகமாக ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. அவர்கள் இங்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துமிக்க தானியங்கள், மரக்கறிகள், மற்றும் கீரை வகைகளை பயிரிட்டு வருகின்றனர்.

”பருவம் மற்றும் மழை பொழிவுக்கேற்றாற் போல் நாங்கள் பல்வேறு பயிர்களை பயிரிடுவோம். ஆண்டு முழுவதும் குறைந்தது ஏதாவது ஒரு பயிரையாவது நாங்கள் பயிரிட்டுக்கொண்டிருப்போம். எப்போதும் ஏதாவது ஒரு பயிரில்  இருந்து உணவுக்குத் தேவையான விளைபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.”

”நாங்கள் ஐந்து விதமான பாரம்பரிய அரிசி வகைகளை பயிரிட்டு அறுவடை செய்து சேமித்து வருகிறோம். உடல் நலத்திற்கு சிறந்தது என்பதால், சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் உள்ள குடும்பங்கள் இங்கு வந்து எம்மிடம் இந்த அரிசி வகைகளை வாங்கிச் செல்கின்றனர்.”

அவர்கள் உள்ளூர் விதை வகைகளையும்  சேமித்து வைக்கவும் பயிரிடவும் கற்றுக் கொண்டு அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இவை உயர் விளைச்சல் தரும் கலப்பின வகை விதைகள் இல்லை, அவர்கள் செய்வதும் மிகப்பெரிய பயிர்ச்செய்கை இல்லை. அவர்களது பண்ணையின் அளவு சில ஏக்கர்களே. அவர்களது விளைபொருட்கள் அவர்களுக்கும் அவர்களது பிள்ளைகளின் குடும்பத்துக்கும் அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தவருக்கும் பயன்படுகிறது. நாம் தற்போது பார்க்கும் பெரும் பயிர்ச்செய்கைகளினை திருத்தி அமைக்கும் வகையில் அவர்களது பயிர்ச்செய்கை காணப்படுகிறது.

ஜயதிஸ்ஸவும் ராணியும் இலங்கையின் சேதன விவசாய முன்னெடுப்பில் ஓர் அலகுதான். அவர்களது அனுபவங்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது, ஆனால் ஏதாவது ஒரு வகையில் எமது கேள்விகளுக்கு அது பதிலளிக்கும்.

சிறிது அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தால் இத்தடையை எதிர்கொள்ளக்கூடிய அறிவை மேலும் பல விவசாயிகள் பெற்றிருப்பர் என அவர் கூறுகிறார். நீண்ட கால ஓட்டத்தில் அவர்கள் பயிரிடுபவற்றையும் உண்பவற்றையும் அது நிலைபேறான முறையில் பல்வகைமைப்படுத்தியிருக்கும். விவசாயிகளுக்கு எது வித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை எனப்பலர் எம்மிடம் கூறிய அதே கருத்தை அவரும் எதிரொலிக்கிறார்; “எவ்வாறு மக்களை கொல்வது என்பதை இராணுவத்தினருக்கு கற்பிக்க பாடசாலைகள் உள்ள நாட்டில், விவசாயிகளுக்கு அவர்களது அறிவைப் பெருக்கிக்கொள்ள பாடசாலைகள் இல்லை.”

பிற சிக்கல்கள்

  • இழப்பீட்டுச் சிக்கல்கள்

கடந்த போகத்தில் பயிர் சேதத்துக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் ஹெக்டயருக்கு 50,000 ரூபா வீதம் வழங்குவதாக மார்ச் முதலாந்திகதி அரசு அறிவித்தது.

நாங்கள் சந்தித்த எந்தவொரு விவசாயிக்கும் தடையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் தமக்கு வாக்குறுதியளிக்கப்பட்டதில் ஒரு சல்லிக் காசு கூட கிடைக்காதென்பதில் உறுதியாயிருந்தனர் என்பதுதான் இன்னும் மோசம். சிலர் இழப்பீடுகள் தொடர்பில் அறிந்திருந்தனர், சிலர் தாம் அதற்கு தகுதியானவர்களா என்ற ஐயத்தில் இருந்தனர், இன்னும் சிலரோ தம்மிடம் இழப்பீட்டுக்காக தகவல் திரட்டிய அதிகாரிகள் மீது, அவர்கள் அதற்கு பிறகு தலைகாட்டாத போதும் சிறு நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இழப்பீடுகள் தொடர்பில் எழும் சில சிக்கல்களும் உள்ளன. இழப்பீட்டை பெறுவதற்கு கமநல சேவைகள் சங்கத்தில் உறுப்பினராக இருப்பது அவசியம். அவ்வாறு உறுப்பினராக இருப்பதற்கு அவர்கள் பயிரிடும் நிலத்தை அவர்கள் சொந்தமாக வைத்திருப்பது அவசியம்.

சம்மாந்துறையில் ‘அந்த கொவி’ எனும் நடைமுறை பரவலாக இருப்பதை நாங்கள் கண்டோம். அந்நடைமுறையில் நிலத்தின் உரிமையாளர் விவசாயி ஒருவருக்கு தனது நிலத்தில் பயிரிட குத்தகைக்கு வழங்குவார். அந்த போகத்துக்கு பயிரிடும் உரிமையை கடிதம் ஒன்றின் மூலமாகவோ பத்திர பதிவு மூலமாகவோ குறித்த நபருக்கு உரிமையாளர் வழங்குவார். இதன்படி இழப்பீடானது பயிரிடுவோர் எனப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.

நீங்கள் பயிரிடும் நிலம் உங்களுக்கு சொந்தமாகவும் இல்லாமல் இவ்வாறான ஆவணங்களும் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது?

மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் தேயிலை பயிரிடப்படாத இடங்களில் சிலவேளைகளில் மலையகத்தமிழர்கள் சிறு பாத்திகளில் மரக்கறிகளை பயிரிடுவதுண்டு. அவ்வாறு பயிரிடும் விவசாயிகளுக்கு அந்த நிலத்தில் எதுவித உரிமையும் இல்லை. தோட்ட நிர்வாகம் அவ்வாறு பயிரிடுவதை நிறுத்தவும் கோரலாம், ஓரளவுக்கு அவர்களது பயிர்ச்செய்கையை கட்டுப்படுத்தவும் செய்யலாம். தமது பணத்தையும் உழைப்பையும் இட்டு அருகிலுள்ள சந்தைகளுக்கு விளைபொருட்களை வழங்கும் விவசாயிகளான இவர்கள், அரசு வாக்குறுதியளித்த இழப்பீட்டிற்கு தகுதியானவர்களில்லையாம்.

  • வழங்கல் மற்றும் களஞ்சியப்படுத்தல் வலையமைப்பு குறைபாடுகளால் நிகழ்ந்த விரயம்

எரிபொருட் பற்றாக்குறை விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்கும் வீச்சைக் குறைத்து விட்டது. உணவு வழங்கல் வலையமைப்பிலுள்ள இந்த இடைவெளியோ இந்நெருக்கடிகளுக்கெல்லாம் முற்பட்டது. தம்புள்ள பொருளாதார மையத்தில் விசாரித்த போது அருகிலுள்ள இடங்களில் இருந்து அதிகமான உற்பத்திகள் கிடைக்கப் பெறுவதாக அங்குள்ள வியாபாரிகள் கூறினர்.

குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் சந்தையை வந்தடைந்தாலும் களஞ்சியப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் என்பன கேள்விக்குறியாகவே உள்ளன. தம்புள்ள மையத்துக்கு பின்னால் பல களஞ்சியங்கள் அவற்றின் கொள்ளளவு அளவிற்கு முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளன என எமக்கு அறியக்கிடைத்தது. இயற்கை விவசாயியும் சமூக செயற்பாட்டாளருமான விமுக்தி டி சில்வா இந்த ஒரு இடத்தில் மட்டும் வீணாகும் உணவுப் பொருட்களின் அளவு தொடர்பில் கவலை தெரிவித்திருந்தார்.

நபர் ஒருவர் உற்பத்திகள் அடங்கிய சாக்குகள் மற்றும் பெட்டிகளை லொரி ஒன்றில் தம்புள்ளச் சந்தையிலிருந்து வெளிச்சந்தைக்கு கொண்டு செல்ல ஏற்றுகிறார்.

தனது ஊரான ராஜங்கனயவில் வேறு சில விவசாயிகளுடன் டி சில்வாவும் பயிரிடுகின்றார். ஊரின் தேவைகள் முழுமையாகத் தீர்ந்த பின்னும் சந்தை ஒன்றுக்கு கொண்டு செல்ல இயலாமல் போகின்ற உற்பத்தியின் அளவை அவர் அறிவார். இதற்கெல்லாம் அப்பால் தம்புள்ள மற்றும் ஏனைய பொருளாதர மையங்களில் விலை போகாமல் தொன் கணக்கான உற்பத்திகள் எஞ்சுவதையும் அவர் குறிப்பிடுகிறார்.“உரத்தடை நாங்கள் உற்பத்தி செய்யும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான், ஆனால் உற்பத்தி செய்தவற்றை சேர்த்து களஞ்சியப்படுத்தி வழங்க முடியாமல் போவதென்பது நிலைமையை மேலும் மோசமாக்குகின்றது.”

தம்புள்ள பொருளாதார மையத்தில் ஏற்படும் விரயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சி, கொண்டு வரப்பட்ட மொத்த உற்பத்தியில் 30% ஆனவை விரயமாவதாகக் மதிப்பிடுகிறது. போக்குவரத்தின் தரம், பொதியிடல், களஞ்சியத்தின் நிலைகள், தகவல் தொடர்பாடல் குறைபாடுகள் மற்றும் மேலதிக வழங்கல் ஆகியன உற்பத்திகள் விரயமாவதில் பங்களிக்கின்றன.

தம்புள்ள பொருளாதார மையத்தில், விவசாய தகவல் சந்தை ஒன்று இல்லையென்ற குறையைப் போக்குவதற்காக தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் திட்டமொன்று 2008 இல் முன்வைக்கப்பட்டது. விவசாயத்தில் போக்குவரத்து செலவுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் ஒட்டு மொத்த போக்குவரத்து செலவில் 70% ஆனவை தகவல் தொடர்பான செலவுகள், இது மொத்த உற்பத்தி செலவில் 15% விவசாயிகள் உற்பத்தியை விற்பனை மையத்துக்கு கொண்டுவந்ததால் ஏற்பட்டது. இந்த செலவுகளை ஒரு செயலி மூலம் பெருமளவில் குறைக்கலாமென குறித்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

  • நகர்ப்புற சமூகங்களும் நகர்ப்புற ஏழைகளுமே அதிகளவில் பாதிப்படைவர்

‘‘கிராமப்புற மக்கள்தான் பாவம் இதனால் துன்பப்படப்போகிறார்கள்’’ என்று நகர்ப்புற மக்கள் கூறுவதை நாமனைவரும் கேட்டிருப்போம். நாங்கள் சென்ற அனைத்து இடங்களிலும் ‘கிராமப்புற மக்களின்’ கருத்தோ அதற்கு நேர் எதிராக இருந்தது. ‘‘கொழும்பிலுள்ள மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு உணவு இருக்கின்றதா?’’ என அக்கறையுடன் எம்மிடம் அவர்கள் வினவினார்கள்.

உரத்தடை மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மத்தியிலும் கிராமப்புற விவசாயிகள் தங்களால் சிறிய அளவில் தமக்கு தேவையான உணவுப் பொருட்களை விளைய வைத்துக்கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள். கிராமப்புறத்தில் உள்ள மற்ற மக்களும் தம்மைச் சுற்றியுள்ள மரங்கள், வயல்கள், மற்றும் காடுகளில் தம்மால் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஆமோதிக்கிறார்கள்.

“எங்களால் பலா மரத்திலிருந்து பழத்தை பெற முடியும், சுற்றியுள்ள கீரைகளை கஞ்சி காய்ச்ச பயன்படுத்த முடியும் இல்லையென்றால் எஞ்சியுள்ள நெல்லை வைத்து சோறாக்க முடியும். கொங்கிரீட் கட்டிடங்களுக்கு மத்தியில் நகர்ப்புற மக்கள் பயிரிட இடமேயில்லை அல்லவா? - வலப்பன

உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நடாத்தப்படும் சமூக சமையலறைகள் பற்றிய கலந்துரையாடல்களில் இந்தப் பிரச்சினையும் எழுப்பப்படுகிறது. சப்புமல்தென்ன கிராம ஒருங்கிணைப்பாளர்கள் சமையலுக்குத் தேவையான பொருட்கள் அங்குள்ள குடியிருப்பாளர்களால் வழங்கப்படுவதாக கூறுகின்றனர். ஒருவர் மரவள்ளிக்கிழங்கைக் கொண்டு வருவார், இன்னொருவர் வாழைப்பொத்தியைக் கொண்டு வருவார், இவ்வாறாக தங்களிடம் உள்ளதை மக்கள் அளிப்பார்கள். கொம்பனித் தெருவிலுள்ள (Slave Island) சமூகத்தலைவர்கள் விலைகள் அதிகரித்த போதும் அருகிலுள்ள கடைகளிலிருந்து கொண்டுவரப்படும் பொருட்களையே உணவு சமைக்கத் தாம் நம்பியுள்ளதாகத் தெரிவித்தனர்.

முடிவு

இந்தப்பயண இறுதியில் எமது நிலை என்ன?

உரத்தடை ஏற்படுத்திய சலசலப்பு இலங்கையின் உணவுப்பாதுகாப்பை அழிப்பதில் சென்று முடிந்துள்ளது. நாங்கள் சந்தித்த பெருமளவான விவசாயிகளின் பெரும்போக விளைச்சலில் 20% தொடங்கி 90% வரை சரிவு ஏற்பட்டுள்ளது. இரசாயன உரங்களை சேமிப்பிலிருந்து பயன்படுத்தியவர்களும் பெருவிலை கொடுத்து பெற்றுக்கொள்ள முடிந்தவர்களும் மாத்திரமே சிறிய இழப்புகளை சந்தித்தவர்கள்.

தற்போதைய சிறு போகத்தில் நெல் விளைச்சலில் நாடு முழுவதும் 60% வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. பேரா. மாரம்பேயின் கூற்றுப்படி சோள விளைச்சலில் 75% அளவிற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது கால்நடைகளுக்கான உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி அவற்றின் வளர்ப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

விதை நெல்லுக்கு ஏற்படப்போகின்ற பற்றாக்குறையைப் பற்றி நாம் கவனத்தில் எடுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போதைய சிறுபோக விளைச்சலில் தேவையான அளவு விதை நெல் கிடைக்காது விடில் 2022_/23_ பெரும்போகம் பாதிக்கப்படும் என ருகுணு பல்கலைக்கழகப் பேராசிரியர் அனுர குமார எச்சரிக்கிறார்.

இயற்கை விவசாய முறையில் எது வித பிரச்சினையும் இல்லை என்பது மட்டும் நமக்குத் தெளிவாகத் தெரியவருகிறது. ஒரு இரவில் ராஜபக்ச அரசால் எதுவித ஆதரவோ ஏற்பாடுகளோ இல்லாது முன்னெடுக்கப்பட்ட உரத்தடை தான் நாட்டை தற்போது நெருக்கடியில் தள்ளியுள்ளது. நாம் சந்தித்த ஜயதிஸ்ஸ மற்றும் ராணி போன்ற இயற்கை விவசாயிகள் சிறிய அளவிலே பயிரிடுகிறார்கள். இச்சிறு பயிர்ச்செய்கைகள் நாட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யுமளவுக்கு விரிவாக்கப்படக் கூடியனவா என்பதற்கு இதுவரை எம்மிடம் பதிலில்லை என்பதே உண்மை. இது போன்ற எதுவித சிந்தனைகளும் இன்றியே தடை முன்னெடுக்கப்பட்டது.

எமது பயணம் முடிந்து சில மாதங்களில், உரத்தை கொள்வனவு செய்ய வசதியில்லாத நிலையிலிருந்து எரிபொருளை கொஞ்சமேனும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு சென்று விட்டார்கள். இதனால் அவர்களால் தமது பயிர்ச்செய்கையை முன்னெடுத்து விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கனவே பாதிக்கப்பட்டு கிடக்கின்ற இலங்கையின் உணவு வலையமைப்பை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும்.

நாடு முழுவதும் நாங்கள் பதிவு செய்த கதைகள் குறித்த இடங்களில் தொடங்கி உங்களது உணவுத்தட்டில் வந்து முடிகிறது. செய்தியில் உணவுப்பொருள்களின் விலை அதிகரிப்பதைக் காணும் போது இதை நினைவு கூருங்கள். கடைகளுக்கு உணவைக் கொள்வனவு செய்யச் செல்கையில் உணவுப் பொருள்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் அவ்வாறு இருப்பவற்றின் விலையும் உயர்வாக இருப்பதையும் காண நேரிடும் போதும் இதை நினைவு கூருங்கள். விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு செயலும் நம்மையும் பாதிக்கும்.

அடிக்குறிப்பு - சேதனப்பசளை வகைகள்

நம்மிடையே எண்ணிலடங்காத சேதனப்பசளைகள் பயன்பாட்டில் உள்ளன. விலங்குக்கழிவுகள் மற்றும் கூட்டு எரு போன்ற தாவர மற்றும் விலங்குகளின் இயற்கையான செயற்பாடுகளின் துணை விளைவாகவோ அல்லது முதன்மை விளைவாகவோ பெறப்படுகின்ற பொருட்களை சேதனப்பசளைகள் உள்ளடக்கியிருக்கின்றன.

பெருமளவில் பயன்படுத்தப்படும் சில சேதனப்பசளைகள் பின்வருமாறு -

  • எரு - மாட்டுச்சாணத்தை முதன்மையாக உள்ளடக்கிய இலங்கையில் பொதுவாக அதிகளவில் பயன்படுத்தப்படும் சேதனப்பசளை எருவாகும். கால்நடை எருக்கள் பொதுவாக நைதரசன் மற்றும் சேதனக்காபன் நிறைந்தவை. ஆட்டெரு நைதரசன் மற்றும் பொட்டஸ் நிறைந்தது.
  • குவானோ - கடற்பறவைகள் மற்றும் வௌவால்களின் எச்சங்கள் ஆண்டுக்கணக்கில் குவிந்து கிடந்து உருவானவை. கொலம்பிய பரிமாற்றத்துக்கு முன்னால் பழங்குடி அமெரிக்கர்களால் குவானோ பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. குவானோவில் தாவர வளர்ச்சிக்கு அத்தியாவசியமான  நைதரசன், பொஸ்பேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு மிகக் கூடியளவில் உள்ளது. குவானோவின் கண்டுபிடிப்பே இன்றைய தீவிர உள்ளீட்டு விவசாய முறைகளின் அடிப்படையாகும்.
  • கூட்டெரு - பச்சையான மற்றும் காய்ந்த தாவரக்கழிவுகளின் கலவையே கூட்டெரு எனலாம். இலைகள், புல்கள் மற்றும் உணவுக்குப்பைகள் ஆகிய  பச்சையான கழிவுகளில் நைதரசனின் அளவு மிக அதிகம். தண்டுகள், காகிதங்கள், மற்றும் மரச்சீவல்கள் ஆகிய காய்ந்த கழிவுகளில் காபனின் அளவு மிக அதிகம். இந்தக் கலவை உக்கத் தொடங்கும் போது நீர் சேர்க்கப்படும். இச்செயன்முறையானது பல படிகளைக்கொண்டு அனைத்தும் அளவிடப்பட்ட முறையில் கண்காணிக்கப்பட்டும் செய்யப்படலாம்.
  • உயிர்மத் திடப்பொருட்கள் - கழிவகற்றல் செயன்முறையில் பெறப்பட்டு உரமாகப் பயன்படுத்தப்படும் சேதனப்பொருட்கள்.  விலங்கு உரங்கள் கொண்டுள்ள அதே ஊட்டச்சத்துக்களை உயிர்மத்திடப்பொருட்களும் கொண்டுள்ளன. இவை மக்களிடையே நோய்க்கிருமிகள் பரவாதிருக்க முதலில் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படும்.

சேதன விவசாயத்திலும் கூட அசேதனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொஸ்பேற் பாறைகள், லங்பைநைற், பாறைத்தூள் மற்றும் இயற்கையான பதப்படுத்தப்படாத பொட்டாசியம் சல்பேற் ஆகிய தாதுப்பொருட்கள் மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையின் எப்பாவல பொஸ்பேற் பாறைகள் பொஸ்பரசுக்காக  விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றது.

அடிக்குறிப்பு - சேதன விவசாய முறையா? வழமையான விவசாய முறையா?

சேதன விவசாயமுறையா வழமையான விவசாயமுறையா உகந்தது என்ற விவாதம் கடந்த சில ஆண்டுகளாக  உச்சம் பெற்று வருகிறது. இரண்டு பக்கமும் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் சம அளவிலுள்ளனர். சேதன முறையிலுள்ள உடல்நலன் மற்றும் சூழல்நலன்களை பலர் விரும்புகின்ற அதேவேளை பல விஞ்ஞானிகளும் விவசாய நிபுணர்களும் இதனால் விவசாயத்தில் ஏற்படும் வளர்ச்சி குன்றிப்போவதை குறித்து கேள்வியெழுப்புகின்றனர்.

இத்துறையில் நாங்கள் மாதக்கணக்கில் செய்த ஆராய்ச்சியின் பலனாக இந்தக்கேள்விக்கு எளிய பதில்கள் இல்லையென்பது மாத்திரம் உண்மை எனப்புரிந்து கொண்டோம். எமது முன்முடிவுகளை கேள்விக்குட்படுத்தி பல்வேறுபட்டோரின் கருத்துகளை கேட்டறிந்தோம்.

1999 இலிருந்து 2014 வரை உலகளவிலான சேதன உணவு மற்றும் பான வகைகளின் விற்பனை 15.2 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 80 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டது. சேதன உணவுகள் என்றால் என்ன? ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாதிரியும் அமெரிக்காவில் ஒரு மாதிரியும் என சேதன உற்பத்திகளாக சான்றளிக்கப்பட வெவ்வேறு தேவைகள் காணப்படுகின்றன. என்றாலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலையின் படி, ஒரு உற்பத்தி சேதன உற்பத்தியாக ஏற்றுக்கொள்ளப்பட மரபு மாற்றப்பட்ட விதையால் உண்டானதாகவோ செயற்கை உரங்கள் மற்றும்  களை கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதாகவோ இருக்கக் கூடாது. கோத்தபாய ராஜபக்சவின் கொள்கை இந்த பொதுவான தரநிலையைக்கூட கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது.

நாங்கள் சேதன விவசாயத்தைப் பற்றி ஆராய ஆராய, இலங்கையின் சேதனக்கொள்கையில் அதிகாரிகள் எந்தளவுக்கு மெத்தனமாக இருந்துள்ளனர் எனத் தெரியவந்தது. உங்களுக்கு எழுகின்ற கேள்விகளுக்கான பதில்களை தேடி ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து உங்களது நேரத்தை விரயம் செய்யாதிருக்க, கீழ் வரும் இரு காணொளிகளையும் பார்க்குமாறு உங்களைப் பரிந்துரைக்கின்றோம்.

தரவுகள்

DSC Paddy Data - 2020_2021Maha_Metric (2).pdf 60118

2013_14 Economic Census - JaffnaSH2Report.pdf 3525163

2013_14 Economic Census - PolonnaruwaSH2Report.pdf 3745358

2013_14 Economic Census - NuwaraEliyaSH2Report.pdf 1827542

2013_14 Economic Census - AmparaSH2Report.pdf 3539063