Analysis
ஓட்டமாவடி இறந்தும் இல்லை நிம்மதி
Aug 28, 2022
அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடும்போக்கு தேசியவாதம் மற்றும் இனவாதம் தவிர்ந்த வேறெதுவித அடிப்படைக் காரணங்களுமின்றி, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக எரிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை வெளியிட்டிருந்தது. மாதக்கணக்கில் நீடித்த பரப்புரைகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பின்பு இந்த கட்டாய தகனக் கொள்கையானது அரசினால் மீளப்பெறப்பட்டது. மேலும்,  அரச கொரோனா சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியான ‘செய்கடமை’ (இட்டுகம) நிதியில் பல பில்லியன்கள் பணம் சேர்ந்திருந்த போதும், குடும்பத்தினர் உயிரிழந்தவர்களை தமது சொந்த செலவில் கிழக்கு மாகாணத்தில் நெடுந்தொலைவிலுள்ள கிராமம் ஒன்றில் அடக்கம் செய்ய வேண்டியிருந்தது.

கொடுந்தீ

மாண்டவர் பூமி

இறுதிக்கணக்கு

மையவாடிக்குள்ளே ஒரு பயணம்

  • கட்டாய எரியூட்டல்களுக்கு பிறகு, மார்ச் 2021 இலிருந்து மார்ச் 2022 வரையான காலப்பகுதியில் 3600க்கு மேற்பட்டோர் (பெரும்பாலும் முஸ்லிம்கள்) ஓட்டமாவடியில் கொத்துக்கொத்தாக அடக்கம் செய்யப்பட்டனர்.
  • மையவாடியை உருக்குவதற்காக 21.5 ஏக்கர்கள் நிலத்தினை அக்கிராம மக்கள் இழக்கவேண்டியிருந்தது. ஒதுக்கப்பட்ட இடத்தில் 10 ஏக்கர்கள் மாத்திரம் மையவாடிக்காகவும் மீதி நிலம் ‘தடுப்பு வலயமாகவும்’ பயன்படுத்தப்படுகின்றது.
  • கொரோனா துயர் துடைப்பு நிதியில் தேவையானளவு பணமிருந்த போதிலும், இழப்பீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அரசு எதுவித இழப்பீடுகளையும் வழங்கவோ செலவுகளில் பங்களிப்புச் செய்யவோ முயற்சி செய்யக்கூட இல்லையென உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொடுந்தீ

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை இறக்கிவிட்டு வெள்ளைநிற பாரவூர்தியொன்று மெதுவாக நகரத்தொடங்குகிறது. ஓட்டமாவடி, மஜ்மா நகரின் பரந்த நிலப்பரப்பின் ஆழ்ந்த அமைதிக்கு மத்தியில், புதிதாக தோண்டப்பட்ட குழிகளில் இடப்பட்ட உடல்களை பெக்கோ இயந்திரம் மெதுவாக மணலைக் கொண்டு மூடும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது.

நாங்கள் ஏன் இங்கு வந்திருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள, இலங்கையில் நடந்த கட்டாயப்படுத்தப்பட்ட எரியூட்டல்களின் கொடூரத்தை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

2020 ஏப்ரல் மாதம், கொரோனாவால் இறந்தவர்கள் கட்டாயம் எரிக்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானியை இலங்கை அரசு வெளியிட்டிருந்தது.

முஸ்லிம் மக்களே கொரோனாவைப் பரப்புகின்றனர்’ எனும் வதந்தியின் பின்னணியிலேயே அரசின் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இக்கொள்கை முடிவு அறிவிக்கப்பட முன்பு, அரச மருத்துவ ஊழியர்கள் சங்கமும் (GMOA) இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகமும் (ICTA) இணைந்து ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிடம் கொரோனாவுக்கான மூலோபாய முன்மொழிவொன்றை முன்வைத்திருந்தன. அவை அம்முன்மொழிவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பரவலுக்கு அதிகம் பங்களிக்கக்கூடிய மக்கள் கூட்டமாக முஸ்லிம்களை குறித்திருந்தன.

இக் குற்றச்சாட்டு பின்னர் மீளப்பெறப்பட்ட போதிலும், இலங்கை சுகாதார அதிகாரிகள் நிலத்தடி நீரூடாக வைரஸ் பரவுவதால், கொரோனாவால் இறந்தவர்களை எரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். முஸ்லிம்களின் சமய கடமை இறந்தோரின் உடலை புதைத்து இறுதிக்கடமைகளை முடிக்க அறிவுறுத்துவதால் இம்முடிவு இலங்கை முஸ்லிம்களை பெரிதும் பாதித்தது.

தொற்றுநோயியல் மருத்துவ நிபுணர் மாலிக் பீரிஸ் உட்பட புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள், இறந்த உடல்கள் மூலம் கொரோனா பரவுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்; உலக சுகாதார அமைப்பின் (WHO) இடைக்கால வழிகாட்டல் கொரோனாவால் உயிரிழந்தவர்களை குடும்ப மற்றும் பாரம்பரிய சடங்குகளுடன் எரிக்கவோ புதைக்கவோ முடியும் என தெரிவிப்பதுடன் அதில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எது எவ்வாறாயினும், சட்ட மருத்துவ ஆலோசகரும் தடயவியல் மருத்துவ நிபுணரும் கொரோனா இறப்புகள் முகாமைக்குழுவின் தலைவருமான மருத்துவர் சன்ன பெரேராவினால்   சரியான நடவடிக்கை எனக்கூறப்படும், அரசின் இம்முடிவு மற்றுமொரு இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையாகவே தோன்றுகிறது. ‘இவ்வைரஸ் எவ்வாறு தொழிற்படும் எனத்தெரியாதபடியால்,’ ‘மக்களை பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகளை’ எடுக்க வேண்டியிருந்ததாக பெரேரா கூறுகிறார். அரச தலைமை தொற்றுநோயியல் மருத்துவ நிபுணர் சுகத் சமரவீர பிபிசி ஊடகத்துக்கு, ‘உடல்களை புதைப்பது நிலத்தடி நீரை மாசடையச் செய்யலாம்’ என்பதால் ‘நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைப்படி’ அரசு செயற்படுகிறது எனக்கருத்து தெரிவித்து இந்த அச்சத்தை மேலும் அதிகரித்தார்.

குழந்தைகள் தொடங்கி முதியவர்களை வரை இறந்தவர்களது உடல்கள் அனைத்தும் கட்டாயப்படுத்தி எரியூட்டப்பட்டன. இறந்த சிலரது உடல்களை அவர்களது குடும்பத்தினரைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை; சில வேளைகளில் தேவைப்பட்ட போது மாத்திரம் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களுக்கு ‘வழங்கப்பட்ட ஆணைகளை மட்டும் பின்பற்றி’ அலட்சியமாக செயற்பட்டதாலும், தகவல்கள் குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கப்படாததாலும், குடும்பங்கள் மன உளைச்சலும் கோபமும் அடைந்தனர்.

கிட்டத்தட்ட ஓராண்டு நீடித்த பரப்புரைகள் மற்றும் சர்வதேச மட்டத்திலான வேண்டுகோள்களுக்குப் பின், அரசு உடல்களை பொதுச்சுகாதார சேவைகள் பரிசோதகரின் வழிகாட்டுதல்களுக்கு அமைய மையவாடியொன்றிலோ அல்லது தொடர்புடைய அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட இடமொன்றிலோ அவ்வதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானியை அரசு வெளியிட்டது.

மாதக்கணக்கில் நீடித்த சுகாதார அமைச்சினுடைய தொழிநுட்பக்குழுவின் கலந்துரையாடல்களுக்கு பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் கொரோனாவுக்கான ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

‘‘நாடு முழுவதும் கொரோனாவால் இறந்தவர்களை தமக்கு அண்மையில் உள்ள மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு பலர் அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இவ்விடயம் 2021 டிசம்பர் மாதத்திலிருந்தே தொழிநுட்பக்குழுவின் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு 2022 மார்ச் ஐந்தாம் திகதி அடக்கம் செய்ய அனுமதி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.’’ என அவர் தெரிவித்திருந்தார்.

தொழிநுட்ப பரிசீலனை மாத்திரமன்றி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்களும் கட்டாயப்படுத்தப்பட்ட எரியூட்டுதல்கள் நிறுத்தப்படக் காரணமாயிருந்தது, என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

நீண்ட தேடலுக்குப் பிறகு, இராணுவமும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கொழும்பிலிருந்து 290 கிலோமீற்றர்கள் தொலைவில் மட்டக்களப்பிலுள்ள மஜ்மா நகரின் ஓட்டமாவடிப் பிரதேசத்திலுள்ள குப்பைக்கிடங்கொன்றுக்கு செல்லும் வீதியொன்றின் குறுக்கேயுள்ள காணித்துண்டொன்றினை கொரோனா சடலங்களை அடக்கும் மையவாடியாக பயன்படுத்த தெரிவு செய்தனர்.

இறந்தவர்கள் வேறெந்த இடத்திலும் அடக்கம் செய்யப்பட முடியாதென்பதால் குப்பை மேட்டுக்கு அருகேயுள்ள இத்தனிமையான இடத்திற்கு உடல்கள் கொத்து கொத்தாக வந்து சேரத்தொடங்கின. 2021 மார்ச்சில் தொடங்கி 2022 மார்ச் வரை ஒட்டு மொத்தமாக 3,634 பேர் இங்கு அடக்கம் செய்யப்பட்டனர்.

முழுக்குடும்பத்தினரும் தமது பிரியமானவர்களின் உடல்களோடு ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் தூரம் பயணம் செய்து வந்த போதிலும், கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள திருப்பத்துக்கு அப்பால் அவர்களில் இருவர் மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் கூகிள் வரைபடத்தில் ‘ஓட்டமாவடி ஜனாஸா முனை’ எனக்குறிக்கப்பட்டுள்ள இடத்தில் இறங்கி சிறிய தகரக்கொட்டில் ஒன்றில் தேவையான வழிபாடுகளை செய்து விட்டு, உடலுடன் சென்றவர்கள் திரும்பும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

குண்டுங்குழியும் நிறைந்த பாதையில் வாகனங்கள் மையவாடியை நோக்கி பயணஞ்செய்கையில், இறுதித் திருப்பத்தில் ஒரு சோதனைச்சாவடியையும் மையவாடியின் வாயிலில் ஒரு சோதனைச்சாவடியையும் கடந்து செல்ல வேண்டும். இந்த இரு சாவடிகளுக்குமிடையில் முன்பு குப்பைக்கிடங்காக இருந்து தற்போது முற்றிலும் வெட்டையாக கிடக்கும் பகுதியினூடாக வாகனங்கள் பயணஞ்செய்ய வேண்டும்.

பொலிஸ் ஒருவரும் இராணுவ வீரர் ஒருவரும் காத்து நிற்கின்ற, ‘அல் நூர் அறக்கட்டளை’ என எழுதப்பட்ட சிறிய தகரக்கொட்டில் ஒன்றில் கொட்டுகின்ற மழையால் பலத்த சத்தம் எழுகிறது.

மஜ்மா நகர் என்பது ஒரு பெரிய மையவாடி மாத்திரமே. அங்குள்ள கல்லறைகளில் பெயர்கள் கூடக் காணப்படவில்லை இலக்கங்கள் மாத்திரமே காணப்படுகின்றன.

மாண்டவர் பூமி

ஓட்டமாவடியில் தொடக்கத்திலிருந்தே சிக்கல்கள் இருந்தன.

முதலாவது சிக்கல் நிலம் தொடர்பானது.

மையவாடிக்கென ஒதுக்கப்பட்ட 21.5 ஏக்கர் நிலத்தில், 10 ஏக்கர் மாத்திரமே பயன்படுத்தப்பட்டது, எஞ்சியது அதைச்சுற்றிய தடுப்பு வலயமாகவே பயன்படுத்தப்படுகிறது.

மாவட்ட செயலரும் இராணுவமும் மையவாடிக்கு பொருத்தமான நிலத்தை அடையாளங் காணுமாறு கேட்டுக்கொண்டதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்தீன் தெரிவிக்கின்றார். பிரதேச சபையால் பரிந்துரை செய்யப்பட்ட நிலமானது தாழ்வாக உள்ளதெனக் குறிப்பிடப்பட்டு  சுகாதார அமைச்சாலும் இராணுவ தொழிநுட்பக் குழுவாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்பு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட நிலமொன்று அடையாளங் காணப்பட்டது. உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நில ஆக்கிரமிப்பும், ஓட்டமாவடிப் பிரதேச மக்களின் கவலையும் அதிகரிக்கத் தொடங்கின.

‘தடுப்பு வலயத்துக்காக’ மக்கள் தமது விவசாய நிலங்களையும் குடியிருப்பு நிலங்களையும் இழக்க நேரிட்டதாக, மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சபையின் தலைவர் சமீம் எம்மிடம் தெரிவித்தார். போரின் போது இடம்பெயர்ந்திருந்த 320 க்கு மேற்பட்ட குடும்பங்கள் அங்கு மீளக்குடியேறியுள்ளதாக குறிப்பிட்ட சமீம், அவர்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் விவசாயத்தை நம்பியே இருப்பதாகவும் தெரிவித்தார்.

‘‘இவ்வூர் மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில், சுத்தமான குடிநீர் இன்மை, குறைவான கழிப்பறை வசதிகள், மற்றும் ஒழுங்கற்ற வீதிகள் எனப்பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் 14 கிராமவாசிகள் கொரோனா மையவாடிக்காக தமது நிலங்களை இழந்ததுடன், அவர்களுக்கு அதற்கான எதுவித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.’’

‘‘இங்கு முஸ்லிம்கள் மட்டும் அடக்கம் செய்யப்படவில்லை, ஏனைய மதத்தைச் சேர்ந்த மக்களும் தமது அன்புக்குரியவர்களை நெருப்பிலிட விரும்பாமல் இங்கு புதைத்துள்ளனர். இத்தேவைக்கு முன்னால் எனது நிலம் ஒன்றுமேயில்லை. எனது மனைவியுடன் கதைத்து அவரது ஒப்புதலையும் பெற்றுக்கொண்டு எமது நிலத்தை உடனடியாகக் கையளித்து விட்டேன்.’’ என, எதுவித எதிர்பார்ப்புகளுமின்றி முதன்முதலில் தனது மூன்று ஏக்கர் நிலத்தை கொடையளித்த ஜௌபர் தெரிவித்தார்.

பல பணக்கார முஸ்லிம்கள் தனக்கு பணம் கொடுக்க விரும்பியதாகவும் அதைத்தான் மறுத்து விட்டதாகவும் ஜௌபர் எம்மிடம் தெரிவித்தார். எவ்வாறாயினும், அரசு வேறேதாவது மாற்று நிலத்தை வழங்குமாயின் தனது விவசாயத்தை தொடர்வதற்காக அதை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லோருடைய நிலையும் அவருடையதைப் போன்று இருக்கவில்லை. அவரது நிலத்துக்கு அருகிலுள்ள நிலங்கள் அதற்குச் சொந்தமான 13 பேரிடமிருந்து ஒப்புதல் பெறாமலே எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டன. இவர்களுள் விவசாயி முஹைதீனும் (49) ஒருவர். ‘‘எமது நிலம் எடுக்கப்பட்டு 10 நாட்களுக்குள் மாற்று நிலம் வழங்கப்படுமென, மாவட்ட செயலர் எம்மை வரவழைத்துக் கூறினார். ஒரு ஆண்டு கடந்தும், இதுவரை எமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.’’ என அவர் சோகமாகக் கூறினார்.

சுகாதார அமைச்சுக்கு பலமுறை இது தொடர்பில் பிரதேச சபை கடிதம் எழுதியிருந்தது, கிழக்கு மாகாணத்தின் இராணுவத்தளபதியையும் சந்தித்திருந்தது. உள்ளூர் மையவாடிகளில் உடல்களை புதைக்க அரசு அனுமதித்த, 2022 பெப்ரவரி வரை இதற்கு எதுவித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

இரண்டாவது சிக்கல் அரசின் ஆதரவின்மை

கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் கீழேயே உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் மக்களே சடலங்களை அடக்குவதிலும், அவ்விடத்தைப் பராமரிப்பதிலும் ஈடுபட வேண்டியதாயிற்று.

ஆண்டு முழுவதும் இடம்பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடக்கங்களுக்கு அரசு எதுவித பொருளாதார உதவிகளையும் செய்யவில்லை என ஓட்டமாவடிப் பிரதேச சபையின் தலைவர் நௌபர் தெரிவித்தார். பிரதேச சபை மையவாடிக்காக பெக்கோ இயந்திரம் ஒன்றை ஒதுக்கியதுடன், அதற்குரிய எரிபொருள் மற்றும் திருத்தச் செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

‘‘இப்பெருந்தொற்றுக்காலத்தில் இதுவரை மூன்றுமுறை முழுமையான முடக்கத்தில் இருந்துள்ளோம். இவ்வாறனதொரு காலகட்டத்தில் இம்மாதிரியானதொரு செயலுக்கு ஒரு ரூபாயைக்கூட அரசு ஒதுக்காதது மிகவும் கவலைக்குரியது.’’ என நௌபர் தெரிவித்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்தீன், இச்செலவுகளில் பெரும்பாலானவை பெருந்தன்மை மிக்க நன்கொடையாளர்களின் உதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

‘‘11 பேர் உடல்களை அடக்கஞ் செய்வதில் தொண்டர்களாக இருந்தனர். அவர்களுக்கு சிறியதொரு தொகையை கொடுப்பனவாக வழங்கினோம். இது கூட கொழும்பிலிருந்த சில முஸ்லிம் தனவந்தர்களின் பங்களிப்பாலேயே சாத்தியமானது. அடையாளக்கற்களாக இங்கு நாட்டப்பட்டுள்ளவை கூட சில முஸ்லிம் தனவந்தர்களினால் நன்கொடையாக வழங்கப்பட்டவையே.’’ எனவும் அவர் தெரிவித்தார்.

இறந்தவர்களின் குடும்பத்திடமிருந்து எது வித பணமும் மேற்படி சேவைகளுக்காக அறவிடப்படவில்லை எனத்தெரிவித்த அவர், ‘‘இதை நாங்கள் இலவசமாக ஒரு பொதுச்சேவையாகவே செய்தோம்.’’ என்றார்.

தன்னார்வலர்களான ஜிப்ரி மற்றும் ரபீக் ஆகியோர், ‘‘அடக்கங்களை மேற்கொள்ள ஒருவரும் தயாராக இருக்கவில்லை, எமக்கு உதவ யாருமேயில்லை.’’ என்றனர். ‘‘இராணுவத்தினர் உடல்களை இங்கு கொண்டு வந்து மட்டுமே தருவோம் மீதியை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என எங்களிடம் (பிரதேச சபை) தெரிவித்தனர். நிறைய இறப்புகள் நடந்திருந்ததால், மக்கள் தொற்றையெண்ணி அஞ்சினர். அடக்கங்களை மேற்கொள்ளத் தொடங்கிய பின், எங்கே நாங்கள் அவர்களுக்கு தொற்றை பரப்பிவிடுவோமோ என எண்ணி ஊரிலுள்ள ஒருவரும் எங்களை நெருங்கக்கூடவில்லை.”

மையவாடிக்கு உடல்களை கொண்டு செல்லும் செலவு முழுவதும் இறந்தவர்களின் குடும்பத்தையே சாரும் என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பிமால் ரத்னாயக்க தெரிவித்திருந்தார். உதாரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து ஓட்டமாவடிக்கு உடலை கொண்டு செல்வதற்கான செலவு ரூபா 85,000. ஆனால் அவரது கூற்றுக்கு மாறாக, மருத்துவமனையிலிருந்து மையவாடிக்கான போக்குவரத்து செலவுகளை இலங்கை இராணுவமே பொறுப்பேற்றுக் கொண்டதாக மருத்துவர் அன்வர் ஹம்தானி எம்மிடம் தெரிவித்தார்.

“உறவினர்கள் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை நிறைவேற்ற மஜ்மா நகருக்கு வர முடியும், ஆனால் அவர்களுக்கான செலவுகளை அவர்களே பார்த்துக்கொள்ளவேண்டும். எது எவ்வாறாயினும் உடல்களை கொண்டு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் இராணுவமே ஏற்றுக்கொண்டது.” என அவர் மீண்டும் கூறினார்.

கொழும்பு மற்றும் கண்டி பள்ளிவாசல்களின் சம்மேளனங்களும் உடல்களை கொண்டு செல்வதற்குரிய பணிகளில் சுகாதர அமைச்சுடனும் இராணுவத்துடனும் இணைந்து  ஈடுபட்டதை நாம் அறிவோம். எனவே இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்புப் பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் அஸ்லம் ஒத்மான் அவர்களை தொடர்பு கொண்டோம்.

ஒத்மான் அவர்களின் கூற்றுப்படி, கிழக்கு மாகணத்தில் இறந்தவர்களின் உடல்கள் நேரடியாக மஜ்மா நகருக்கு கொண்டு செல்லப்பட்ட அதே வேளையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் கொழும்புக்கோ, குருணாகலுக்கோ அல்லது அனுராதபுரத்துக்கோ கொண்டு செல்லப்பட்டு பின்பு அங்கிருந்து இராணுவத்தினரால் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது இராணுவத்தினரால் வழங்கப்பட்ட சேவைகளுக்காக அவர்களை ஒத்மான் பாராட்டினார்.

‘‘அரசு பெருமளவில் பொருளாதார உதவிகளை நல்கவில்லை. இராணுவம் இறந்தோரின் உடல்களை கொண்டு செல்லும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதோடு அதற்கு தேவையான வாகனங்கள் மற்றும் ஆளணியையும் வழங்கியது. இதற்குத் தேவையான அனைத்து சவப்பெட்டிகளையும் முஸ்லிம் சமூகத்தின் தனவந்தர்கள் வழங்கினர். அந்நேரத்தில் ஒரு சவப்பெட்டியின் விலை 4,500 ரூபாய் அளவிலிருந்தது. நாங்கள் ஒரு 1000 சவப்பெட்டிகளையாவது இதுவரை வழங்கியிருப்போம்.’’

கொரோனா நிதியான ‘செய்கடமை’ (இட்டுகம) நிதியின் நிலை என்ன?

இட்டுகம என்பது ‘சுகாதார மற்றும் சமூகப்பாதுகாப்புக்கும்’ ‘கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நின்று போராடும் பணியாளர்களிற்கு ஆதரவு வழங்குவதற்கும்’ கோத்தபாய ராஜபக்சவினால் திரட்டப்பட்ட தேசிய நிதியாகும்.

இந்நிதி சேகரிப்பு முன்னாள் ஜனாதிபதியினால் பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டதன் விளைவாக இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட தொகை திரட்டப்பட்டது. துல்லியமாகச் சொல்லப்போனால் 2,024,953,352.70 ரூபாய் (எழுத்தில், இருநூற்றியிரண்டு கோடியே நான்பத்தொன்பது இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து முந்நூற்றி ஐம்பத்திரண்டு ரூபா எழுபத்திரண்டு சதம்)

இப்பணம் எதற்காக எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என அறிந்து கொள்வதற்காக நாங்கள் தகவல் அறியும் உரிமைக்கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தோம். இருநூறு கோடிக்கும் மேற்பட்ட பணத்திலிருந்து 197, 476, 824 ரூபா அதாவது பத்தொன்பது கோடியே நான்கு இலட்சத்து எழுப்பதாறாயிரத்து எண்ணூற்றி இருபத்து நான்கு ரூபா மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அரசினால் மத்திய அரச நிறுவனங்களுக்கு மாத்திரமே நிதி வழங்கப்பட்டுள்ளது, மாகணசபைகளுக்கோ, ஓட்டமாவடியில் செலவழிக்கப்பட்டதற்கோ ஒரு ரூபாவைக்கூட அரசு வழங்கவில்லை.

ஒவ்வொரு அமைச்சுகளும் செலவழித்த தொகை விபரங்கள் பின்வருமாறு:

செயற்பாடுசெலவு (ரூபா)ஈடுபட்ட நிறுவனம்
பிசிஆர் பரிசோதனை42,605,812சுகாதார அமைச்சு; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
தெளிவூட்டல் நிகழ்ச்சிகள்67,543,967சுகாதார அமைச்சு
தனிமைப்படுத்தல் சேவைகள்38,031,065சுகாதார அமைச்சு; பாதுகாப்பு அமைச்சு
தேசிய தடுப்பூசித்திட்டம்41,545,980சுகாதார அமைச்சு
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டில்கள் கொள்வனவு7,750,000பாதுகாப்பு அமைச்சு

அறுபத்தேழு மில்லியனுக்கும் அதிகமான பணம் ‘தெளிவூட்டல் நிகழ்ச்சிகளுக்காக’ செலவழிக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு சதம் கூட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்ட மையவாடியின் செலவுக்காய் வழங்கப்படவில்லை. எமது ஆய்வு நடத்தப்பட்ட காலத்தில் அண்ணளவாக 1,827,476,528 ரூபா பணம் ஒன்றில் பயன்படுத்தப்படவோ அல்லது கணக்குக்காட்டப்படவோ இல்லாமல் மீதியாக காணப்பட்டது.

இறுதிக்கணக்கு

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓட்டமாவடியை ஆய்வு செய்ய எமது குழு அங்கு புறப்பட்டு சென்றிருந்தோம். களப்பயணம் மற்றும் நேர்காணல்களுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு அடக்கங்கள் தொடர்பிலும் தன்னார்வலர்களால் பேணப்பட்ட குறிப்புகளையும் சேகரித்திருந்தோம். இந்தக்கட்டுரை முழுதும் நீங்கள் பார்த்திருந்த தரவுகளின் விபரங்கள் இதோ, இங்கு தொடர்புடைய நபர்களின் பெயர்கள் அவர்களது தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் மறைகுறியாக்கப்பட்டுள்ளது.

இத்தரவு வரைபடமாக பின்வருமாறு தோற்றமளிக்கிறது.

நாடு முழுதும் துயர் பரவியிருக்கிறது. இலங்கை முழுவதிலும் பச்சை நிறக்கோடுகளாய் காட்டப்படும் இடங்களில் இருந்து இறந்தவர்கள் அவர்களது உறவினர் சகிதம் சிவப்பு நிறத்தில் தோன்றும் கோடாகிய ஓட்டமாவடிக்கு, பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இறுதிக்கடன்களை நிறைவேற்றுவதற்காக ஒரு கொடூர இறுதி யாத்திரையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பெருந்தொற்று உச்சமடைந்திருந்த ஆகஸ்ட் 2021 காலகட்டத்தில், அண்ணளவாக 40-60 உடல்கள் நாளாந்தம் அடக்கஞ் செய்யப்பட்டிருக்கின்றன. நாட்டிலுள்ள ஒவ்வொரு சனத்திரளுக்கு மத்தியிலும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத இவ்வினவாதக் கொள்கையும் புறக்கணிப்பும் ஏற்படுத்திய துயரங்கள் இன்னும் மறையாது காணப்படுகிறது.

இங்கு முஸ்லிம்கள் மாத்திரம் அடக்கஞ் செய்யப்படவில்லை. இங்கு அடக்கஞ் செய்யப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பௌத்த மற்றும் இந்து மதத்தினர்கள் ஆவர். இத்தரவுகளை பார்த்துக்கொண்டிருக்கையில் இடைக்கிடை இவ்வாறான தரவு உள்ளீடுகளும் காணப்படுகின்றன.

இங்கு அடையாளங்காணப்படாது கைவிடப்பட்ட உடல்களும் அடக்கஞ் செய்யப்பட்டுள்ளன. பிறந்து ஏழு நாளேயான பிஞ்சுக்குழந்தை தொடங்கி நூற்றி மூன்று வயதான மூதாட்டி வரை அனைத்து வயதினரும் அடக்கஞ் செய்யப்பட்டிருக்கின்றனர். வெளிநாட்டவர் சிலர் கூட இங்கு அடக்கஞ் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரத்துக்கும் அறிக்கைகளுக்கும் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கின்ற சுத்த மடச்சிந்தனை இங்கே பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

மையவாடிக்குள்ளே ஒரு பயணம்

மஜ்மா நகரில் அடக்கஞ் செய்வது தற்போது நிறுத்தப்பட்டு விட்ட போதிலும், 2022 ஆகஸ்ட் நடுப்பகுதி வரையிலும் மையவாடி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இரண்டு இராணுவச் சோதனைச்சாவடிகள் இருந்தன. அனுமதியின்றி ஒருவராலும் உள்நுழைய முடியாது. சோதனைச்சாவடியில் உள்ள இரு அதிகாரிகள் உங்களது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை சேகரிப்பதுடன் அங்கு உங்களது உறவினர் அடக்கஞ் செய்யப்பட்டுள்ளார் என்பதை அறியத்தரும் சிறு சிட்டையில் உள்ள புகைப்படத்தையும் பரிசோதிப்பார்கள். வணிக நிறுவனங்களின் விபர அட்டையினளவிலிருக்கின்ற அச்சிறு வெள்ளைச்சிட்டையில் ‘Keep ourself from / අපව වළක්වන්න / எம்மை பாதுகாப்போம் COVID-19’ என அச்சிடப்பட்டுள்ளதுடன் அதில் இறந்தவரின் பெயரும் அவரது கல்லறை இலக்கமும் காணப்படுகிறது.

விபரங்கள் பதிவு செய்யப்பட்டு முடிந்தவுடன், குடும்பத்தினர் தற்போது மையவாடியைப் ‘பார்க்க’ முடியும் என அவ் அதிகாரிகள் சொல்வர். சிறிது சிறிதாக பிரிக்கப்பட்டுள்ள கல்லறைத் தொகுதிகளைச் சுற்றி ‘எல்லை’ வகுத்துக்கொண்டு படபடத்துக் கொண்டிருக்கும் மஞ்சள் நிற காவல்பட்டியடியில் நின்று கொண்டு அவர்களால் ‘பார்க்க’ மட்டுமே முடியும். தமது அன்புக்குரியவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்ற நம்பிக்கையில் வருகின்ற உறவினர்கள், தமது அஞ்சலிகளையும் கவலைகளையும் கல்லறைகளால் நிரம்பிக் கிடக்கின்ற ஒட்டுமொத்த மையவாடியையும் பார்த்து சொல்ல வேண்டியிருக்கிறது.

இது தொடர்பில் நாங்கள் மக்களை நேர்காணல் செய்யத்தொடங்கிய வேளையில், மையவாடியின் பொறுப்பை ஓட்டமாவடிப்பிரதேச சபையிடம் ஒப்படைக்குமாறும், மையவாடியில் தமது நேரத்தையும் உழைப்பையும் நல்கி தன்னார்வப்பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு கொடுப்பனவு ஏதாவது வழங்குமாறும் ஓட்டமாவடிப்பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்தீன் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வேண்டுகோள் ஏற்கப்பட்டு 2022 ஆகஸ்ட் 17 இல் மையவாடியின் பொறுப்பு இராணுவத்தால் பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது உறவினர்களால் முன்னனுமதி பெறாமலேயே மையவாடிக்கு செல்ல முடியும்.

உறவினர்கள் இறந்த தமது அன்புக்குரியவர்களை வந்து பார்த்து நடந்து செல்லும் வகையில் மையவாடியைப் பூங்கா போன்று மாற்றியமைப்பது, நடந்து செல்லப் பாதைகள் அமைப்பது, நீண்ட தூரப்பிரயாணம் செய்து வருபவர்கள் இளைப்பாறுவதற்கு ஏற்ற சிறு நிழல் தருமிடங்கள் அமைப்பது ஆகியன சிஹாப்தீனின் எதிர்காலத் திட்டங்களாக இருக்கிறது.

அரசிடமிருந்து இது வரை எதுவித ஆதரவும் கிடைக்காத போதிலும் இவற்றை செய்வதற்காவது அரசின் ஆதரவு கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.

முஹமட் சித்தீக் இறந்து கிட்டத்தட்ட இரு மாதங்கள் கழித்து 2021 மார்ச் மாதம் ஐந்தாந்திகதி அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். 63 வயதான அவரது உடலையும் சேர்த்து ஒன்பது பேரது உடல்கள் அடக்கத்திற்காக காத்திருக்க வைக்கப்பட்டு ஓட்டமாவடி மையவாடி உண்டாக்கப்பட்ட முதல் நாளே நல்லடக்கம் செய்யப்பட்டன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவரது உடல் குளிரூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த காலத்தில் அடிக்கடி பொலிஸார் வந்து அவரது சடலத்தை எரியூட்ட உறவினர்களின் ஒப்புதலை வற்புறுத்தி பெற முயற்சித்தனர். அவர்கள் சித்தீக்கை எரியூட்டாது தடுக்க தடை உத்தரவை பெறவேண்டியதாயிருந்தது.

‘‘மாமா இறந்த போது கட்டாய எரியூட்டல் கொள்கை நடைமுறையிலிருந்தது. அவர் இறந்து 70 நாட்களுக்கு பின்பே அவரை அடக்க முடிந்தது.’’ என அவரது மருமகன் மொஹமட் அம்ஜத் எம்மிடம் தெரிவித்தார். அதுவரை ஒவ்வொரு நாளும் அவரது குடும்பத்தினர் எங்கே அவரையும் கட்டாயப்படுத்தி எரியூட்டி விட்டுவிடுவார்களோ என்று எண்ணி எண்ணியே கவலைப்பட்டு காலங்கழிக்க வேண்டியிருந்தது.

முஸ்லிம்கள் பொதுவாக இறந்தவர்களை அடுத்த 24 மணிநேரத்துக்குள்ளேயே அடக்கஞ் செய்து விடும் வழக்கமுடையவர்கள் என்பதால், சித்தீக்கை அடக்கஞ் செய்ய காத்திருந்த அவ்விரு மாதங்கள் எந்தளவுக்கு மனஅழுத்தம் நிறைந்தவையாய் இருந்தன என்பதையும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வாறு ஒரு நாள் கூட நிம்மதியாய் உறங்காமல் தவித்தனர் என்பதையும் அம்ஜத் நினைவு கூர்ந்தார்.

‘‘அது மிகவும் கடுமையான மற்றும் கொடூரமான காலமாய் இருந்தது.’’

இவ்வாய்வு களத்தில் சென்று எடுக்கப்பட்ட படங்களையும் SentinelHub மற்றும் HERE வரைபடங்களிலிருந்து பெறப்பட்ட Copernicus Sentinel-2 செய்மதியின் திருத்தியமைக்கப்பட்ட தரவுகளையும் [2022] உள்ளடக்கியுள்ளது [imagery ©2022 DigitalGlobe or ©CNES 2015, Distribution Airbus DS; © 2015 DigitalGlobe]. இந்தப்படமானது 2022 மார்ச் ஒன்றுக்கும் ஆகஸ்ட் 28 க்கும் இடையில் பெறப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் HERE Technologies நிறுவனத்துக்கும் அவர்கள் வழங்கும் இலவச சேவைகளுக்காய் எமது நன்றிகள். மேலும் எமது களப்பயணத்தை ஒருங்கிணைத்த எச்.எம்.எம். பர்ஸான், தகவல்களை வழங்கிய ஓட்டமாவடிப்பிரதேச சபை, மையவாடியின் சில படங்களை தந்துதவிய அப்துல் பாஸீர் மற்றும் மொஹமட் பாரிஸ் ஆகியோருக்கும் எமது நன்றிகள்.