Analysis
சிலுவைகளும் சாபங்களும் — உயிர்த்த ஞாயிறு தாக்குதலி
Apr 28, 2022
இந்தக் கட்டுரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னரான நிகழ்வுகள் குறித்து பேசுகிறது.

குறிப்புகள்

கல்லடி

காத்தான்குடி

பயங்கரவாதத் தடைச் சட்டம் - திசை திருப்பலுக்காக அப்பாவிகளை கைது செய்தல்

உயிர்த்த ஞாயிறு - மறக்கப்பட்ட நீதிக்கான வாக்குறுதிகள்

மூன்று வருடங்களின் பின்

சிலுவைகளிலிருந்து இரத்தம் சிந்துவது போன்று வரையப்பட்ட, கருநீல நிற சுவரொட்டியொன்று ஜனாதிபதி செயலகத்தினை நோக்குமாறு, துறைமுக நகரின் ஓரமாகவுள்ள வேலியில் கட்டித்தொங்கவிடப்பட்டுள்ளது.

‘ஒவுன்கே லே சுவர்க்கய மொற தென்னேய - நும்ப பொலோதலய மத  சாப லத்தேக் வேவா’ — ‘அவர்களது இரத்தம் சுவர்க்கத்தில் வருந்திக் கொண்டிருக்கிறது - பூமியில் நீங்கள் சபிக்கப்படுவதாக.’

பொருளாதார நெருக்கடி, மின்சார நெருக்கடி மற்றும் சுகாதாரத்துறை நெருக்கடி போன்ற பல்வேறுபட்ட நெருக்கடிகளிலிருந்து நாட்டை பாதுகாக்கத் தவறியபின், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரை வீடு திரும்பச் சொல்கின்ற குரல்களில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பலியானவர்களிற்கான நீதி கோரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

மூன்று வருடங்களின் பின், இரு தரப்புகளினது இன்றைய நிலையை நாம் பார்க்கவுள்ளோம். முதலாவதாக, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்கு அரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட நீதியும். இரண்டாவதாக, தன் மக்களை காக்கத்தவறிய அரசின் பொறுப்பை அதனிடமிருந்து கைமாற்றுவதற்காக, பெரும்பாலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள்.

குறிப்புகள்

கல்லடி

படம்: அமலினி டி சாய்ரா

வீணாவின் வீட்டு முன்றலிலுள்ள சிறிய கடை மூடிக்கிடக்கிறது. அந்தக்கடை மூலம் அவர் உழைக்கும் வருமானம் மற்றும் அவரது கணவரின் அரச வேலை மூலம் கிடைக்கின்ற வருமானத்தினால் பொருளாதார ரீதியாக அவர்கள் ஓரளவு நல்ல நிலையிலுள்ளதாக அவர் கூறுகிறார்.

வீணா தனது எட்டு வயது நிரம்பிய இளைய மகனை குண்டு வெடிப்பில் பலிகொடுத்தவர். வீட்டின் நீண்ட தாழ்வாரத்தின் முடிவில் முழு நீள கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டியொன்று இன்னமும் மாட்டப்பட்டிருக்க, வீட்டிலுள்ள ஒவ்வொரு சுவரையும் அச்சிறுவனது முகமே அலங்கரிக்கின்றது.

குண்டுத்தாக்குதலின் தாக்கம், அவரது இரண்டாவது மகளின் கன்னத்தில்  சிறு உலோகத்துண்டாக மற்றுமொரு வடிவிலும் நீடிக்கிறது. ஆரம்ப கட்ட அறுவை சிகிச்சைகளில் ஓரளவு உலோகத்துண்டுகள் நீக்கப்பட்டு விட்டாலும், ‘சைக்கிள் குண்டு’ என்று அவளால் குறிப்பிடப்படுகின்ற, சிறு துண்டொன்று மேல்தாடையில் இன்னும் எஞ்சியிருக்கிறது. ஏற்கனவே பல்வேறுபட்ட அறுவை சிகிச்சைகளிற்கு அவள் உட்பட்டிருப்பினும், அதை முழுமையாக நீக்க மேலும் பல அறுவை சிகிச்சைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அவளது தாய்தான் இதற்கெல்லாம் பொறுப்பு என்று இந்தப்பதினாறு வயதுச்சிறுமி அவர் மீது மிகுந்த கோபம் கொண்டுள்ளாள். பல்வேறுபட்ட மருத்துவ நிபுணர்களை அவள் சந்திக்கச்செல்லும் போதெல்லாம் தனக்கு தேவை தன் தம்பிதான், அவனைத் திருப்பித்தர முடியுமா? என்று கேட்கிறாள். அன்றைய நாள் தம்பியை தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றது அவள்தான், காயங்களிற்கு சிகிச்சையளிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் தம்பியினது இறுதிச்சடங்குக்கு கூட அவளால் செல்ல முடியவில்லை.

வீணாவும் அவரது மூத்த மகனும் இப்போதெல்லாம் தேவாலயத்துக்கு செல்வதேயில்லை. ‘‘நான் உதவி கேட்டபோது ஒருவரும் வரவில்லை - என்னால் அங்கு செல்ல முடியாது’’ என்கிறான் அவன். அவர்கள் தேவாலயத்துக்கு தொடர்ந்து போகுமாறு ஊக்குவித்த தன் தந்தையோடு மூத்தமகன் இப்போது பேசுவதேயில்லை. அவன் இறைவன் மீதும், தேவாலயம் மீதும், சபை மீதும், தனது குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள கோபமும் இன்னும் குறைந்தபாடில்லை.

ஒரு மகனை இழந்தபோதும், அவருக்கு மற்றைய பிள்ளைகள் இருப்பதால் அவர் அதிஷ்டசாலி, இழந்த மகிழ்ச்சியைத் திருப்பித்தரக்கூடியதாக ஏதோ ஒன்று எஞ்சியுள்ளது என்று மக்கள் அவரிடம் கூறுவதுண்டு எனினும், உண்மை நிலையோ அதற்கு நேர்மாறாகவே உள்ளது. பெரும்பாலான நாட்களில், வீணாவினால் வேலையில் கவனம் செலுத்தவோ உறங்கவோ முடிவதில்லை. இதற்காக மருந்துகளை கூட அவர் எடுத்துக்கொண்ட போதிலும், அந்தநாள் நினைவுக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும், அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடிவதில்லை. ‘‘நான் ஒவ்வொருமுறை அழும்போதும் என்னுடைய பிள்ளைகள் என்னைத் திட்டுவார்கள், நான் ஏன் கவலைப்படுகின்றேன் என்று என்னை கேட்பார்கள். அது மேலும் மேலும் என்னை கவலையாக்கிவிடும், எனவே நான் அமைதியாக இருந்துவிடவே முயல்கிறேன்.’’

ஏப்ரல் 21, அன்றைய நாள் அவரது ஞாபகத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது. காலை ஏழு மணிக்கு முன்பு, அவரது நான்கு பிள்ளைகளிற்கும் உணவூட்டி, அவர்கள் திரும்பி வந்ததும் உண்பதற்காக மதிய உணவையும் சமைத்து விட்டிருந்தார். அவரது இளைய மகன் வயிறாற உண்ட போதும், அவனுக்கு மீண்டும் காலை 09.30 போல பசியெடுக்கும் என்பதால், சிறிய பழச்சாற்றுப் போத்தலொன்றை தனது கைப்பையில் வைத்து கொண்டு வந்திருந்தார். காலை உணவை விரும்பியுண்ட அவன் மதிய உணவாக சோறும், கோழிக்கறியும், பருப்பும், கரட் சம்பலும் செய்து தருமாறு அவரிடம் கேட்டிருந்தான். திருப்பலி மதியமாகியும் முடிவுக்கு வரவில்லை என்றால், அருட்தந்தையிடம் ஏதாவது கதை கூறிவிட்டு வீட்டுக்கு வந்து மதிய உணவை உண்ணப்போவதாக அவன் கூறியிருந்தான்.

குண்டுத்தாக்குதலுக்கு முதல் நாள் சனிக்கிழமையன்று வீணா அவனை குளிக்கச் சொன்னதற்கு கோபித்துக்கொண்டு, அவருக்கு அருகில் உறங்க மறுத்துவிட்டான். அடுத்த நாள் காலை அவன் தேவாலயத்துக்கு செல்ல முன், அவனுக்கு முத்தம் கொடுக்க அவர் மறந்து விட்டார். அவர் தேவாலயத்துக்கு திரும்பச் சென்றால், இவையெல்லாம் ஞாபகத்துக்கு வந்து அவரை கலங்கச்செய்து விடும் என்பது அவருக்கு தெரியும்.

தான் வளர்ந்து பெரிய ஆள் ஆகியவுடன், அவரை நன்றாகக் கவனித்துக்கொள்ளத் தேவையான அளவிற்கு உழைக்கப்போவதாகவும், பணத்தை எண்ணி அவர் கவலைப்பட வேண்டியதில்லை எனவும், அவரது மகன் அவரிடம் அடிக்கடி கூறுவதுண்டு.

வீணாவுக்கு முஸ்லிம்கள் மீது எந்தக் கோபமும் இல்லை. ஏனெனில், நடந்ததற்கு அவர்கள் பொறுப்பானவர்கள் இல்லை என்பது தனக்கு தெரியும் என்கிறார் அவர். அவரது கடைக்கு பொருட்கள் வழங்கும், காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் விநியோகஸ்தர்களுடன் அவருக்கு நீண்ட கால உறவு உள்ளது. அவர்கள் அவரை எப்போதும் மரியாதையுடனேயே நடத்தியுள்ளனர். அவரது கோபம் முழுவதும் இந்தக்குண்டுத்தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரி சஹ்ரான் மீதுதான்.

ஊடகச்சந்திப்புகள் அத்தனையிலும் குண்டுத்தாக்குதலில் பலியான அத்தனை மக்களுக்கும் நீதி வழங்கப்படும் என வாக்குறுதிகள் பல வழங்கப்பட்ட போதிலும், அவரது குடும்பத்தின் தேவைகளைப் பற்றி அறிய அரசாங்கத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை. ‘‘எனது பிள்ளை இறந்து விட்டது, இனி நீதி எங்கிருந்து கிடைக்கும்?’’ என்பதே அவரது கேள்வியாக இருக்கிறது.

காத்தான்குடி

படம்: அமலினி டி சாய்ரா

முக்கிய வணிகப்பகுதியின் நியோன் மற்றும் எல்.ஈ.டி விளக்குகளை தாண்டினால், மின்வெட்டால் இருளில் மூழ்கியிருக்கும் காத்தான்குடியின் சிறு தெருக்களை நாம் அடையலாம். அங்குதான் ரஷீதாவின் வீடு ஒற்றை மெழுகுவர்த்தியினால் ஒளியூட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து 150 km தூரத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (PTA) கீழ் அவரது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மொனராகல சிறைச்சாலைக்கு செல்வதிலேயே கடந்த மூன்றாண்டுகளின் பெரும்பாலான பகுதியை ரஷீதா தொலைத்துவிட்டார்.

ஒரே குற்றப்பத்திரத்தை வைத்து கைது செய்யப்பட்ட 60 க்கும் மேற்பட்டவர்களில் அவரும் ஒருவர். இந்தக்குழுவினர்க்கு இடங்களை சுற்றிப்பார்க்கவும் போதனைகளில் கலந்து கொள்ளவும் நுவரெலியாவிற்கு ஒரு இலவச பயணமொன்று மதகுரு ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சுற்றுலாவில் ஒருநாள் உணவுக்காக அவர்கள் ஒன்றுகூடிய வேளையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீர் என சஹ்ரான் ஹாசிம் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளான்.

அவனது வருகை பற்றி யாரிடமாவது கூறினால் அவர்களது குடும்பத்திற்கு ஆபத்து என அக்குழுவினருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. சஹ்ரான் ஏற்பாடு செய்த பயானில் (இஸ்லாமிய போதனை மற்றும் பயிற்சி) கலந்து கொண்டதற்காக அவர்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நேர்காணல் எடுக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு கிழமையின் பின் நீதிமன்றில் அவரது கணவரின் வழக்கு மீள விசாரிக்கப்பட இருக்கிறது. சிறையிலிருந்து அவரது கணவர் கொண்டுவரப்படுவதும், விடுபட்டு போன ஏதாவதொரு ஆவணம் அல்லது அனுமதி காரணமாக வழக்கு தாமதப்படுவதும், இன்னுமொரு ஆறு மாதங்கள் இதே போன்ற இன்னுமோர் உப்புச்சப்பற்ற மீள் விசாரணைக்காக மீண்டும் காத்திருப்பதுமாக அவருக்கு பழகிவிட்டது.

கடந்த மூன்றாண்டுகளில் பலமுறை அவரது கணவரின் கடந்த கால செயற்பாடுகள் பற்றி வாக்குமூலம் வழங்க வருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களமும் (CID) கொழும்பிலுள்ள பயங்கரவாதப் புலனாய்வு திணைக்களமும் (TID) அவருக்கு அழைப்புகள் விடுத்துள்ளன. “நான் உழைத்தால் மட்டுமே என் பிள்ளைகளுக்கு உணவு கிடைக்கும். நான் கொழும்புக்கு வர வேண்டு்மென்றால் என்னுடைய கடன்களை நீங்களா அடைப்பீர்கள்?” எனக்கேட்டு அவர் ஒவ்வொருமுறையும் பணிவாக மறுத்திருக்கிறார்.

இந்நேர்காணல் எடுத்த மறுநாள், அவரது நீதிமன்றத் தொடர்புகள் மூலம் நீதவானால் பிணை வழங்கப்படுவோர் பட்டியலில் தனது கணவரது பெயரும் இருந்ததை ரஷீதா அறிந்தார். ஆனால் அவ்வழக்கின் விசாரணையை முழுமையாக முடித்துவிட்டதாக பலமுறை அவரிடம் கூறியிருந்த பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களம் வழக்கு விசாரணையன்று அவரது கணவரின் விடுதலைக்குத் தேவையான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

பள்ளிக்குச் செல்லும் மூன்று பிள்ளைகளை ஒற்றையாளாக பராமரிக்கும் ரஷீதா, அவர்களின் பாடங்களுக்காக தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு பாடவேளைக்கு 500 ரூபா வரை செலவழிக்கின்றார். நல்ல வேளையாக அவர்களது குடும்ப நிலையை அறிந்த சில ஆசிரியர்கள் அவரது பிள்ளைகளை இலவசமாக கற்க அனுமதித்துள்ளனர்.

“பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்களை ISIS என்று எண்ணுகிறார்கள்,  எங்களுக்கு உதவினால் என் கணவர் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் தாங்களும் சம்பந்தப்படுத்தப்படுவோம் என அஞ்சுகிறார்கள்.” உன் கணவர் நிரபராதியென எங்களுக்கு தெரியும் என அவரிடம் அவர்கள் மெதுவாக கூறுவார்களாம். “அப்படியென்றால் நீங்கள் ஏன் எங்களுக்கு உதவ பயப்படுகிறீர்கள்?” என இவர் பதிலுக்கு அவர்களிடம் கேட்பாராம்.

ஒருநாள் அவர் கணவருடன் தொலைபேசி வழியே உரையாடிக்கொண்டிருக்கும் போது அவரது கணவர் ‘‘உங்களுக்கு அமைப்பில்ல’’ என்று அவரிடம் கூறியுள்ளார். ‘‘அமைப்பில்ல’’ என்றால் ‘‘இறைவனின் நாட்டம் இல்லை’’  என்று பொருள். இந்தச்சொல் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பொதுவாக பயன்படுத்தப்படுவது. இருப்பினும் ‘‘அமைப்பில்ல’’  என்ற சொல் தவறுலாக ‘‘அமைப்பு’’ (இயக்கம் என பொருள்பட) என அங்கிருந்த அலுவலரால் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. இது அவரது கணவர் மீதான சந்தேகத்தை அதிகரித்து அவரது அடுத்த விசாரணைக்கான திகதியை மேலும் பிந்த வைத்து விட்டது.

தவறான மொழிபெயர்ப்பு அவர்கள் மீதான பாகுபாட்டில் எவ்வாறு தாக்கஞ் செலுத்துகிறது என்பதையும் ரஷீதா குறிப்பிட்டார். அவரது கணவர் மீதான இரண்டாங்கட்ட அறிக்கையும் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது கணவரை கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்புணர்வுள்ளவர் என நீதிமன்றம் நம்பும்படி அம்மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததை அவரது வழக்கறிஞர்தான் அவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குடும்பங்களின் வீட்டிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக செல்வது வழமை. அவ்வாறு அவரது வீட்டிற்கு ஒருமுறை அவர்கள் சென்ற போது, அவர் ஆவணங்கள் சிலவற்றை எடுப்பதற்காக உள்ளே சென்றுள்ளார். அப்போது அவருக்கு சிங்களம் தெரியாதென்று எண்ணி ஒரு அலுவலர் மற்றவரிடம் ‘‘மேவா ஒக்கொம பொறு சேர், எகொல்லன்ர லொக்கு கெவல் தியெனவா, சஹ்ரான் தீப்பு சல்லி வலின் கத்தா’’ (இது அத்தனையும் பொய், இவர்களுக்கு சஹ்ரான் கொடுத்த பணத்தில் கட்டிய பெரிய வீடு உள்ளது) என்று கூறியுள்ளார்.

அவர் திரும்பி அந்த அலுவலரிடம் தெளிவான சிங்களத்தில், “நாங்கள் எவ்வளவு ஏழ்மையானவர்கள் என்று கிராம சேவகரிடம் சென்று கேளுங்கள் ; அவர் சொல்வார். இந்த சின்ன வீடு மட்டுந்தான் எங்களது ஒரே வீடு” என்று பதிலளித்துள்ளார்.

அவரது ஊரிலுள்ள வீடுகளில் பராமரிப்பு மற்றும் இதர பணிகளைச் செய்து கிழமைக்கு ஐந்தாயிரம் வரை ரஷீதா உழைக்கின்றார். இந்தப் பணத்தில் தான் அவர், தனது குழந்தைகளை தேவையான பாடங்களில் மேலதிக வகுப்புகளுக்கும் அனுப்பி படிப்பிக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே அநாதையாக வளர்ந்த ரஷீதா தனது குழந்தைகளும் தான் பட்ட அதே துன்பத்தைப்படக்கூடாது என்று விரும்புகிறார். அவரது கணவரின் சிறிய படமொன்று அடுத்த அறையின் நிலைக்கண்ணாடியில் ஒட்டியிருப்பது, எமக்கு இங்கிருந்தே மங்கலாகத் தெரிகிறது. அவரது மகள் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு செல்லு முன் அந்தப் படத்தை பார்த்துவிட்டுத்தான் பாடசாலைக்கு செல்வாராம்.

‘‘நீதிமன்று இவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கின்றதோ இல்லையோ, அந்தக் குடும்பங்கள் எம்மை மன்னிக்காவிடில், இறைவன் எங்களை மன்னிக்கப் போவதில்லை.’’ இவ்வாறு தாக்குதல்களில் இறந்தவர்களின் குடும்பத்திடம் அவர் மன்னிப்பை வேண்டி நிற்கிறார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் - திசை திருப்பலுக்காக அப்பாவிகளை கைது செய்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களின் முழுமையான எண்ணிக்கை தெரியவில்லை. செயற்பாட்டாளரும் மனித உரிமை காவலருமான ஷ்ரீன் சரூர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் சார்பாக வாதிடுவதற்காக வழக்கறிஞர்களை அனுப்பி வைத்ததை நினைவு கூருகிறார். அவ்வப்போது அரச தகவல் திணைக்களத்தில் நடக்கின்ற ஊடக சந்திப்புகளில் அரசு எழுமாறானதொரு எண்ணிக்கையை அறிவித்து வந்துள்ளது. ஏப்ரல் 12 அரசு அறிவித்தது:

‘2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கைது செய்யப்பட்ட 735 பேரில் 196 பேர் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்.

அவர்களில் 79 பேர் மீது 25,653 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 27 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

81 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 493 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.’

கடந்த சில மாதங்களாக முஸ்லிம்கள் குழுக்கள் குழுக்களாக பிணையில் விடுதலை செய்யப்படுவதாக சரூர் குறிப்பிடுகிறார். அவர்களில் பெரும்பாலானோர் தடுப்பில் இருந்தபோது குற்றசாட்டுகள் முன்வைக்கப்படாதவர்கள். அதிகாரிகள் பாகுபாடான இக்கையாளுகை காரணமாக தம்மீது வழக்கு பாயலாம் என்ற அச்சத்திலுள்ளனர். இவ்வழக்குகள் மற்றைய பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்குகள் ஆகியவற்றில் வழக்காடிய சரூரும் மற்றைய வழக்கறிஞர்களும் அரசால் வெளியிடப்படுகின்ற எண்ணிக்கைகள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

கைது செய்யப்படவர்கள் மீதான இக்கொடுமைகள் இச்சட்டத்திலேயே உட்பொதிந்துள்ளவை. சந்தேக நபர்களை எந்தவொரு சட்ட அமுலாக்கல் பிரிவோ பாதுகாப்பு அமைப்போ கைது செய்யலாம், எந்தவொரு இடமும் அவர்களை தடுத்து வைத்திருக்கும் இடமாகத் தெரிவு செய்யப்படலாம்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பிறகு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலருக்காக வாதாடியவர்களில் மனித உரிமை வழக்கறிஞராகிய எர்மிசா தேகலும் ஒருவர். அவர் ‘‘மிகச் சொற்பமானவர்களே எமக்குத் தெரிந்து இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். குறைவான ஆதாரங்களே உள்ள சில வழக்குகளிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள், மற்றவர்களுக்கு பிணை வழங்கப்படுள்ளது.’’ எனக்கூறுகிறார்.

நுவரெலியாவுக்கு பயணம் செய்த அறுபது பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள ஒற்றை குற்ற அறிக்கையால் தொடுக்கப்பட்டுள்ள ரஷீதாவின் கணவரின் வழக்கு தனித்துவமானது. இவ்வாறான குழு வழக்குகள் தொடுக்கப்படுவதற்கு இரு பிரதான காரணங்கள் உள்ளதாக தேகல் குறிப்பிடுகிறார். முதலாவதாக ஒரேயொருவரை விசாரணை செய்து கிடைத்த முடிவுகளை அனைவர் மீதும் சுமத்த முடியும். இது அறுபது பேரையும் விசாரிக்க எடுக்கும் நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்தும். இரண்டாவதாக இது தீவிரவாத எண்ணங்கொண்ட தனிநபர்களினை உள்ளடக்கிய குழுக்கள் செயற்படுகின்றன என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும். கைது செய்யப்பட்டவர்களில் உண்மையிலேயே ஒருவரோ இருவரோ சந்தேகத்துக்கிடமானவர்களாக இருந்திருக்கலாம். மற்றவர்கள் எல்லாம் இலவச இணைப்பாக சேர்க்கப்பட்டவர்களே.

கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்கான சட்டரீதியான நடவடிக்கைகளை அவர்களது  குடும்பத்தினர்கள் ஏற்கனவே எடுத்துள்ளனர். அவர்களால் ஆலோசனைக்குழுவிற்கு அடிப்படை உரிமை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு மக்கள் நலன்சார் வழக்கறிஞர்கள் அவர்கள் வழக்கில் உதவ முன்வந்துள்ளனர்.

2022 மார்ச் மாதம் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை பாராளுமன்றம் நிறைவேற்றியது. அடிப்படையிலேயே தவறாக உள்ள சட்டமொன்றினை சிறிதளவே இத்திருத்தங்கள் மேம்படுத்தியுள்ளன என இது வழக்கறிஞர்களாலும் செயற்பாட்டாளர்களாலும் விமர்சிக்கப்பட்டது. தீவிரவாதத்திற்கான வரைவிலக்கணம் முன்பிருந்தது போல மிகவிரிவானதாகவே தொடர்கிறது. நீதவான் முன்னால் நிறுத்தப்படாமல் சந்தேகநபரை தடுத்து வைத்திருக்கக் கூடிய கால அளவு 18 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துவிட்ட படியால் ஒரு வருடங் கடந்தும் எதுவித முன்னேற்றமுமின்றி உள்ள வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மேன்முறையீடுகளுக்கு முயற்சித்து வருகின்றனர்.

ரஷீதா போன்றோரின் குடும்பங்களுக்கு என்னவோ பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் நிச்சயமற்ற நீண்ட காத்திருப்புகளே. குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின் புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வழக்கை தேகல் நினைவு கூருகிறார். வழக்கறிஞர்கள் சந்தேகநபரின் உடல் நிலையை மேற்கோள் காட்டி நீதிபதிகளை வழக்கை முற்கூட்டியே விசாரிக்க வேண்டினர், அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு பின்னரான திகதியொன்று விசாரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இரு மாதங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் உயிரோடு இருப்பாரா என்பதே உறுதியில்லை. ‘‘இதுதான் நமது முறைமையின் நிலை, இவ்வாறான உடல் நிலை உள்ளவருக்கே இந்த நிலைமையென்றால் பொதுவான கைதிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள்.” என்கிறார் தேகல்.

வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞர் அஹ்னஃப் ஜசீம் ஆகியோரின் கைதுகள் மிகப் பிரபல்யமானவை. ஹிஸ்புல்லாவை பத்து மாதங்களுக்கு எதுவித குற்றச்சாட்டுகளுமின்றி தடுத்து வைத்திருந்த பின், அவர் தீவிரவாதத்தை போதித்தார் என சிறுவர் ஒருவரிடமிருந்து வற்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினை திட்டமிட்டதில் பங்கு வகித்தார் என்பதே அவர் மீது முன்வைக்கப்பட்ட மிக முக்கிய குற்றச்சாட்டு ஆகும். ஜசீமினது ‘நவரசம்’ எனும் படைப்பு அதிகாரிகளால் தமிழிலிருந்து தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால், அதில் தீவிரவாத உள்ளடக்கமிருப்பதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார். அதிகாரிகள் இவரை ஹிஸ்புல்லாவுடன் தொடர்புபடுத்தி இவரை பயன்படுத்தி அவரை சிக்கவைக்க முயற்சித்தனர்.

‘உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறலை தாமதித்து வருகின்ற அதேவேளை, ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மக்களை எதுவித உத்தரவாதங்களுமின்றி தண்டிக்கிறது அரசு’ என்கிறார் சரூர்.

உயிர்த்த ஞாயிறு - மறக்கப்பட்ட நீதிக்கான வாக்குறுதிகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான கதையாடல்கள் தற்போது ஓரளவு மாறிவிட்டன என்று கூறுவது அபத்தம்.

குண்டு வெடிப்புகள் அடிப்படைவாத இஸ்லாமியர்களால் நடத்தப்பட்டது, என்ற தகவல் தெரிய வந்த பின்பு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தில் வீரியமான வளர்ச்சியொன்று தென்படுகிறது.

தாக்குதல்கள் நடந்து ஒரு கிழமையின் பின் ஏப்ரல் 26, 2019 இல் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச அறிவித்தார்.

வாக்குப்பதிவின் போது கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களிலெல்லாம் ‘மதக்கத 21/4’ ( 21/4 நினைவிருக்கிறதா?) எனக்கூறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

வெள்ளைச் சுவரில் ஒட்டப்பட்ட ‘மதக்கத 21/4’ அல்லது ‘21/4 நினைவிருக்கிறதா?’ என எழுதப்பட்ட கறுப்பு நிறச்சுவரொட்டி கிழிந்த நிலையில் படம்: தியாகி ருவன்பத்திரன

அவரது தேர்தல் வெற்றிக்கு பிறகு சில மாதங்கள் கழித்து, சமூக வலைத்தளங்களில் இந்த தாக்குதல்களால் பலனடைந்தவர்கள் யார்? என்று மக்களை கேட்கும் படங்களும் பதிவுகளும் பகிரப்பட்டன.

பாராளுமன்றத் தெரிவுக்குழு 2019 ஒக்டோபரில் சபையில் தனது அறிக்கையை முன்வைத்தது. ‘இந்நிகழ்வுகளின் நோக்கங்கள், விளைவுகள் மற்றும் இறுதிப்பலன்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்.’ என அதில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளிவந்து ஒரு மாதத்திற்கு பின் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். தாக்குதல்களை தடுக்கத்தவறிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்புக் கூறல் உள்ளிட்ட அவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்ட எந்தவொரு பரிந்துரைகளும் இன்று வரை செயற்படுத்தப்படவில்லை.

அரசு மாறிய கையோடு சியோன் தேவாலயத்தின் மீள்கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டதும் இங்கு கவனிக்கத்தக்கது. கொச்சிக்கடை மற்றும் கட்டுவப்பிட்டியவில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் சில மாதங்களுக்குள் மீளக்கட்டப்பட்டுள்ள அதே வேளை, மட்டக்களப்பிலுள்ள சுவிஷேச தேவாலயத்தின் சிதைந்த கட்டுமானம் அப்படியே அங்கேயே எஞ்சி இருக்கிறது. இந்த வருடம் ஏப்ரல் 21 இல் சபை அங்கு ஒரு நினைவஞ்சலியைக் கூட நடாத்தியிருந்தது.

3 வருடங்களுக்கு முன்னர் - உயிர்த்த ஞாயிறு தினமன்று படுகொலை செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் (தாக்குதல் நடத்தப்பட்ட) நினைவுகூரப்பட்டனர்.#lka #SriLanka #EasterSundayAttacks pic.twitter.com/gGJZudVF1t

— Maatram (@MaatramSL) April 21, 2022

நன்கொடையாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளிடம் உதவி பெற்று சபை புதிய இடத்தில் தேவாலயத்தை கட்டமைத்துள்ளது.

‘தீவிரமயமற்றதாக்கல் வர்த்தமானி’ இத்தாக்குதலை நிகழ்த்த காரணமாயிருந்த தீவிரவாதத்தை அகற்றுவதற்கான முக்கிய செயன்முறையாகக் கூறப்படுகிறது. வன்முறையான தீவிர மதக்கொள்கையை கொண்டிருப்பதை நீக்கும் 2021 இன் சட்டஒழுங்கு இல. 01, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் புதிய சேர்க்கையாக மார்ச் 2021 இல் இணைக்கப்பட்டது. போர் முடிவடைந்தவுடன் LTTE போராளிகளுக்கு வழங்கப்பட்ட ‘மறுவாழ்வு’ தொடர்பான வரலாறு மேற்படி சட்டம் கவனத்தில் கொள்ளப்பட முக்கிய காரணமாயிருக்கும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கிறார். அவரும் மேலும் சிலரும் இது அரசியலமைப்புக்கு முரணானது என அடிப்படை உரிமை மனுக்களை முன்வைத்துள்ளனர். வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதிப்பதற்காக இச்சட்ட ஒழுங்கானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு சேவையும் (SIS) மற்றைய புலனாய்வு பிரிவுகளும் சஹ்ரான் ஹாசிமிற்கு பொருளாதார மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதாக, அருட்தந்தை சிரில் காமினி பெர்ணான்டோ ஒரு இணையத்தளத்திற்கு ஒக்டோபர் 2021 இல் கருத்து தெரிவித்திருந்தார். அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அறிக்கை, ஓராண்டிற்கு முன் சட்ட அமுலாக்கல் பிரிவு அலுவலர்கள் முன் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர்களை விசாரணை செய்வதில் தொய்வு காணப்படுவதாக கூறுவதில் இருந்து, இந்த குற்றச்சாட்டு வெறும் கண்மூடித்தனமானது எனக்கொள்ள நம்மால் முடியாது. எவ்வாறிருப்பினும் அரச புலனாய்வுப் பிரிவின்  பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, தனக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக, அருட்தந்தைக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எண்ணிலடங்காத நீண்ட விசாரணைகளிற்கு பின் தனது கைதை தடுப்பதற்காக அடிப்படை உரிமை மனுவொன்றை அருட்தந்தை தாக்கல் செய்துள்ளார்.

தகவல்களை வெளிப்படுத்துவோரை கைது செய்யும் இந்தப்போக்கு 2022 இலும் தொடர்ந்தது. செயற்பாட்டாளர் செஹான் மாலக்க கமகே தாக்குதல்களின் பின்னாலுள்ள அரசியல் உள்நோக்கங்களை கண்டித்தமைக்காக பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு வெள்ளைவானில் கொண்டு செல்லப்பட்டு பின்பு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிகழ்வு நடந்து சில நாட்களில் உயர் பதவியிலிருந்த இரு அதிகாரிகள் தங்கள் பதவிக்காலத்தில் கடமையை சரிவராது செய்யாமல் இத்தாக்குதல்கள் நடக்க காரணமாயிருந்ததாக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால், முன்னாள்  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகிய இருவர் மீதும் 'மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற்றங்களுக்காக' கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

அவ்விடுதலைகள் நடந்து ஒரு நாள் கழித்து, முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்கள ஆணையாளர் ஷானி அபேசேகர அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்தபோது அரசின் தோல்விகள் அப்பட்டமாய் வெளித்தெரிய ஆரம்பித்தன. அவர் ஜனாதிபதிக்கு நெருக்கமான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கில் ஆதாரங்களை புனைந்தமை மற்றும் மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு பத்து மாதங்கள் சிறையில் கழித்திருந்தார்.

சஹ்ரான் ஹாசிமை சரியாக விசாரிக்காமை என்ற குற்றச்சாட்டில் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட அறிக்கையை வைத்து தன்னை கைது செய்யவோ தடுத்து வைக்கவோ இடைக்காலத்தடை விதிக்குமாறு அவர் வேண்டியிருந்தார். உச்ச நீதிமன்றுக்கான அவரது மனுவில் சஹ்ரான் ஹாசிமையும் அவனது குழுவான தேசிய தௌஹீத் ஜமாஅத்தையும் (NTJ), அரச புலனாய்வுப் பிரிவும் (SIS) இராணுவ புலனாய்வு திணைக்களமும் (DMI) சேர்ந்து பாதுகாத்தன போன்ற உதிரி தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.

அபேசேகர தனது மனுவின் பல இடங்களில் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவ புலனாய்வு திணைக்கள மற்றும் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குண்டுதாரிகளின் தொடர்புகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தெரியப்படுத்த மறுத்ததாகவும்,  அவ்விரு முகாமைகளினதும் அதிகாரிகளை விசாரிக்க விடாது தடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

அபேசேகரவின் குற்றப்புலனாய்வுத் திணைக்கள வரலாறு ராஜபக்சக்களின் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பெரும் புள்ளிகளின் கொலைகள், காணமலாக்கப்படுதல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான பெரும்பட்டியலாக நீள்கிறது: திருகோணமலை பதினொருவர், பிரகீத் எக்னெலிகொட, லசந்த விக்ரமதுங்க, கீத் நோயர், போத்தல ஜயந்த, வசீம் தாஜூதீன், ரதுபஸ்வல போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் வெலிக்கடை சிறைப்படுகொலை.

பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் அவருடைய செயற்பாட்டால்தான் தங்களின் அன்பானவர்களுக்கு என்ன நடந்தது என்று ஓரளவாவது தெரியவந்தது என முன்வந்து கூறினர்.

Empathising with killers is a Gotabaya Rajapaksa trademark. He even rewarded the assasins who hunted journalists like my father and Prageeth Eknaligoda. With Duminda Silva back in power, I fear for those like Shani Abeysekara and the Premachandras who helped bring him to justice

— Ahimsa Wickrematunge (@awickrematunge) July 18, 2021

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் டுவீட்டின் படி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தாக்குதல் தொடர்பில் விசாரித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை 70,000 பக்கங்கள் கொண்டதொரு நீண்ட விரிவான அறிக்கையாகும். எவ்வாறாயினும் சில முக்கிய பரிந்துரைகளை மட்டும் உள்ளடக்கியதாக சுருக்கமான அறிக்கையாகவே அது வெளியிடப்பட்டுள்ளது.

Easter Attack Commission report : Over 70,000 pages. I requested the speaker to release a soft copy pic.twitter.com/NSau5r4yx1

— Harin Fernando (@fernandoharin) February 23, 2022

அந்தப் பரிந்துரைகளும் கூட நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரியவில்லை. உதாரணத்திற்கு கலகொட அத்தே ஞானசாரவின் பேச்சுக்கள் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதம் நோக்கித் தள்ளி சஹ்ரான் போன்றோருடன் இணைய வைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளதாக அறிக்கை பட்டியலிடுகிறது. பொது பல சேனா (BBS) தடைசெய்யப்படுமா எனக் கேட்கப்படுகிறது, ஆனால் ஞானசார தேரர் ராஜபக்ச அரசால் முன்னெடுக்கப்படுகின்ற சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்படுவதை நாம் காண்கின்றோம்.

மூன்று வருடங்களின் பின்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி நாட்டில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களின் மிக முக்கிய கோரிக்கையாக இருக்கின்றது. கோத்தபாய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு இப்பிரச்சினை எந்தளவிற்கு பயன்படுத்தப்பட்டதோ அதே அளவிற்கு தற்போது அவரை வீட்டுக்கு செல்ல வைக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரம் ஒன்றில், ‘லே விலக் மதின் பலயட்ட பமினி கோட்டா - பலய வெனவென் சிதுகல தாதனா ஹெலா தகிமு’ (இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள கோத்தாவே, இந்த ஆட்சியைப் பிடிக்க நீ செய்த கொலைகளை வெளிப்படுத்து) எனக்கோரும் பதாதை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பங்குபற்றிய, கட்டுவப்பிட்டியவிலிருந்து கொச்சிக்கடை வரையான நடைபயணத்தில்,  ‘அஹிங்சக ஜனதாவகே லே மதின் பலய கத்தனம், எய புக்தி விந்தின்ன லபென்னே நஹ’ (அப்பாவிப் பொதுமக்களின் இரத்தத்தை சிந்தவைத்து நீ ஆட்சியை அடைந்திருந்தால் அதை உன்னால் அனுபவிக்க முடியாமல் போவதாக), எனச் சபிக்கும் பதாதைகள் ஏந்திச் செல்லப்பட்டன.

ஏப்ரல் 9: ‘நீதிக்கான நீண்ட நடை’, தப்பிப்பிழைத்தோரும் குடும்பங்களும் கத்தோலிக்கர்கள் மற்றும் ஏனைய ஆதரவாளர்களுடன் இணைந்து கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை தேவாலயம் நோக்கி கிட்டத்தட்ட 40km தூர 12 மணிநேர நீண்ட நடை பயணம் மேற்கொண்டனர். . . . படம்: அமலினி டி சாய்ரா

ஏப்ரல் 17: தப்பிப்பிழைத்தோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் காலிமுகத்திடலில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு கூட்டத்தில் பங்குபற்றினர். . படம்: அமலினி டி சாய்ரா

ஏப்ரல் 20: 'பாதிக்கப்பட்டவர்களின் உயிர்த்தெழுதல்' செயல்திறன் கலை ஏப்ரல் 21: மதச்சார்பற்ற அல்லது பன்மத நினைவுச்சின்னம் ஒன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டதுடன் பல மௌனப் போராட்டங்களும் நடைபெற்றன. காத்தான்குடியிலிருந்து தங்கள் அன்புக்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் கோட்டாகோகமவிற்கு வருகை தந்து பயங்கரவாதத் தடைச்சட்டம் எனும் சட்டத்திலுள்ள ஓட்டையைப் பற்றி உரையாடினார்கள். . . . . படம்: அமலினி டி சாய்ரா

தாக்குதல்கள் தொடர்பில் இவ்வாண்டு நினைவுநாளில் இடம்பெற்ற பாராளுமன்ற சிறப்பு விவாதத்தில் அரசின் சார்பில் இரு உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டனர்.

ஏப்ரல் 22: நாடக மற்றும் திரைப்பட நடிகரான ஜேஹான் அப்புஹாமி ஆளுயர மரச்சிலுவையை கட்டுவப்பிட்டியவிலிருந்து கொச்சிக்கடை வரையிலும் பின்பு அங்கிருந்து காலி முகத்திடல் வரையிலும் கிட்டத்தட்ட 40km தூரம் மூன்று நாட்களாக சுமந்து வந்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதி கோரினார். படம்: அமலினி டி சாய்ரா

ஏப்ரல் 26, மூன்று வருடங்களுக்கு முன் ராஜபக்ச ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த அதே தினத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆராதனை ஒன்றில் பங்குகொண்டனர். அதில் ‘‘நீதியின் மீதுள்ள பற்றுக்காக, உங்கள் மக்கள் மீதுள்ள பற்றுக்காக தயவுசெய்து ஒரேயொருமுறை  இத்தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் யார் யாரென தெளிவுபடுத்துங்கள்’’ என போப் பிரான்சிஸ் நீதி கோரினார்.

தாக்குதல்கள் தொடர்பில் தொடர்ந்து நீண்ட காலம் கவனம் செலுத்தியதன் பலனாக அவர்கள் இத்தாக்குதல்கள் தொடர்பில் ராஜபக்சக்களின் பொறுப்புக்கூறலை எதிர்பார்ப்பது சற்று புதியதுதான். ஆமாம், அவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக இத்தாக்குதல்களை திட்டமிருக்கலாம் என்ற புரிதல் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. எப்படியிருப்பினும் தற்போது விரைவாக பெருகிவரும் பொருளாதார நெருக்கடியும் மிரிஹானை சம்பவத்திற்கு வித்திட்ட மாதக்கணக்கான போராட்டங்களும் நம்மிடையே புதிய சில கவலைகளை விதைத்துள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை குழப்பகரமானதாகவும் எதுவித முன்னேற்றமும் அற்று  நிச்சயமற்றதாகவும் தொடர் ஏமாற்றங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகிறது. இக்குடும்பத்தினர்கள் காலிமுகத்திடல் போராட்டங்களில் வெவ்வேறு நாட்களில் கலந்து கொள்கிறார்கள்.

காத்தான்குடியிலிருந்து ஒரு பெண் தனது ஐந்து வயது பேத்தியை கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அச்சிறுமியின் பெற்றோர் இருவரும், யாரோ ஒருவர் அவர்களுக்கு சஹ்ரானின் பேச்சுக்களின் இணைப்பை வட்சாப்பில் அனுப்பியதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

‘‘நாங்கள் இந்தப்போராட்டத்தில் பங்களிக்க விரும்புகிறோம். இதே போராட்டத்தை எங்களது ஊரில் செய்தால், சிலர் எங்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று பழிக்கக்கூடும். இனிமேலும் எங்களால் அந்த பழிச்சொல்லை தாங்கமுடியாது.’’

தாயையும் இளைய மகனையும் இழந்த நீர்கொழும்பைச் சேர்ந்த குடும்பமொன்றும் காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. அக்குடும்பத்தின் இளைய மகளுக்கு அவளது மண்டையோட்டை சரி செய்வதற்காக விரிவான அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளதுடன், மண்டையோட்டிற்குள்ளே இன்னும் சிறு உலோகத் துண்டுகள் எஞ்சியிருக்கின்றன.

‘‘என்னுடைய பிறப்புச் சான்றிதழில் நான் ஒரு ரோமன் கத்தோலிக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு இலங்கையில் நீதி கிடைக்கப் போவதில்லை. எனவே நீதிக்காக ரோமை நாடுகிறேன்.’’

மேலதிக வாசிப்பிற்கு**:**

  1. White Flags, the immediate aftermath of the attacks.

  2. Looking East, the situation in Batticaloa and Kattankudy three months after the attacks.

    \