Analysis
உரத்தடை இலங்கையின் துயரக்கதை
Mar 25, 2022
கேசவன் செல்வராஜா சுருக்கம்: பஞ்சம் தொடர்பான அச்சம், உரத்தின் கண்டுபிடிப்பு, உலக விவசாயத்தில் அதன் தாக்கம், குடியேற்ற நாடாகிய நமது குட்டித் தீவில் அதன் தாக்கம் எனப் பரந்துபட்ட விடயங்களை பார்க்கவுள்ளோம்.

உரத்தை நாம் ஏன் பயன்படுத்துகிறோம்?

வரலாற்றில் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் தற்சார்பாக இருந்தோம் அல்லவா?

பூகோளத்தின் தெற்கில்...

மல்துஸ் எனும் மாயமான்

தரவுகள்

அடிக்குறிப்புகள்

உங்களில் பலர் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க முற்பட்டு அரசு அடைந்த படுதோல்வியைப் பற்றியும், அரசு எவ்வாறு இரவோடிரவாக இரசாயன உரங்களைத் தடைசெய்தது என்பது பற்றியும் அறிந்திருப்பீர்கள். உள்ளூர் சிக்கல்களுக்கு அப்பால், ‘கண்மூடித்தனமாக இயற்கை விவசாயத்திற்கு மாற முற்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு’ எனவும் ‘இலங்கையில் பேரழிவை உண்டாக்கிய இயற்கை விவசாயம்’ எனவும் பன்னாட்டு தலைப்புச் செய்திகளிலும் பேசப்படும் அளவுக்கு நமது நிலை மோசமாகியுள்ளது.

எங்கு என்ன தவறு நடந்துள்ளது என முதலில் நினைவூட்டல் ஒன்றைச் செய்துவிட்டு முன் நகர்வோம்:

மோசமான பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு முகங்கொடுத்து கொண்டிருக்கும் அதே வேளையில், இம்மாரிகாலத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறுமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டதன் மூலம் இலங்கை அரசு தேசிய ரீதியில் மிகத்தவறான பரிசோதனை முயற்சியொன்றை முன்னெடுத்தது. 2019 தேர்தல் பரப்புரையில் கோத்தபாய ராஜபக்ச பத்து ஆண்டு காலத்தில் நாட்டின் விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவேன் எனத் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக ராஜபக்ச அரசாங்கம் நாடு முழுவதும் செயற்கை உரங்கள் மற்றும் களை/பூச்சி கொல்லிகளின் ஏற்றுமதி மற்றும் பயன்பாட்டினை தடை செய்து, நாட்டின் 2 மில்லியன் விவசாயிகளையும் இயற்கை விவசாயத்திற்கு மாற கட்டளையிட்டது.

இதன் விளைவுகள் உடனடியாகவும் மிகக் கொடூரமாகவும் தாக்கியது. இயற்கை விவசாய முறைகளும் வழமையான விவசாய முறைகளைப் போல் விளைச்சலைத் தரும் என்ற கூற்றுகளுக்கு மத்தியிலும், உள்நாட்டு அரிசி உற்பத்தி முதல் ஆறு மாதங்களிலேயே 20 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. அரிசி உற்பத்தியில் தற்சார்பாக விளங்கிய இலங்கையில், முதன்மையான தேசிய உணவான அரிசியின் விலை அண்ணளவாக 50 சதவீதத்தால் அதிகரித்த போதிலும், மேலும் 450 டொலர்கள் பெறுமதியான அரிசியினை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டது. நாட்டின் முதன்மையான ஏற்றுமதிப் பண்டமும், அந்நியச் செலவாணி ஈட்டித் தரும் மூலமுமாகிய தேயிலை உற்பத்தியையும் இத்தடை பெருமளவில் பாதித்துள்ளது.

‘மோசமாக அடிவாங்கிய, உலகின் முதலாவது 100% முழுமையான இயற்கை விவசாய நாட்டை உருவாக்குவதற்கான திட்டம்’ என அல்ஜசீரா விவரிப்பது போலவே, இத்திட்டம் பொருளாதார நெருக்கடி ஒன்றுக்கு மத்தியிலும், அரசினை விவசாயிகளுக்கு 200 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்த சிக்கலின் அடிப்படை என்னவென்று, நாம் கொஞ்சம் பின்சென்று பார்ப்போமா? முதலாவதாக:

உரத்தை நாம் ஏன் பயன்படுத்துகிறோம்?

உரத்தைப் பற்றி அறிந்துகொள்ள முதல், கொஞ்சம் வரலாற்றுப்புரிதல் எமக்கு இருக்க வேண்டும்.

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில், ஆங்கிலேய மதகுரு தோமஸ் ரொபட் மல்துஸ் சனத்தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரையொன்றை [1] எழுதியிருந்தார். அது முதன்மையாக இரு விடயங்களை ஊகமாக முன்வைத்தது : 1) பெருகும் சனத்தொகை கிடைக்கக்கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சம்பளத்தினை குறையச் செய்யும்.

  1. பெருகும் சனத்தொகையானது ஒரு கட்டத்தில் சமூகத்தால் அதற்கு தேவையான உணவுப்பொருட்களினை உற்பத்தி செய்ய முடியாத அளவுக்கு விஞ்சி நிற்கும். தொழிநுட்ப முன்னேற்றங்கள் சனத்தொகை பெருக்கத்துக்கு வழிவகுக்கும். சனத்தொகை பெருக்கம் உணவு வழங்கலில் மேலும் சுமையை கூட்டி அதனை நிலைகுலையச் செய்யும். அதன் தொடர்ச்சியாக பஞ்சம், போர் ஆகியன உண்டாகி, மக்கள் கொத்துக்கொத்தாக மடிவர். இதுவே மல்துசியன் பேரழிவு கோட்பாடு எனப்படுகிறது.

படம்: வரையறுத்த வள உற்பத்தியுடன் அதிவேக சனத்தொகை பெருக்கத்தை ஒப்பிட்டு மல்துசியன் பேரழிவொன்றை விளக்கும் வரைபு

இச்சிந்தனை எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்தியுள்ளது என மதிப்பிடுவது மிகச் சிரமமானது. மல்துசின் நூல் 1800 ஆம் ஆண்டு சனத்தொகை சட்டத்துக்கு வழி கோலியது, அச்சட்டத்திலிருந்தே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனத்தொகை மதிப்பெடுக்கும் இன்றைய வழக்கம் உண்டாகியது. இதுதான் நாம் அரச புள்ளிவிபரத்துறையைக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம். இச்சிந்தனை டார்வினின் பரிணாமக்கொள்கைக்கு கூட பங்களித்துள்ளது. குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான சிந்தனைகள் பெரும்பாலும் மல்துசியனை அடிப்படையாகக் கொண்டவையே. [2]

உணவை உற்பத்தி செய்யும் பழைய வழிமுறைகள் நிலைபேறானவை, ஆனால் கடின உழைப்பு தேவைப்படுபவை, ஆனால் உலக சனத்தொகையோ அதிகரித்து வந்தது. அதனால் மல்துசியன் பேரழிவு தவிர்க்க முடியாததாகவே தோற்றியிருக்க வேண்டும். பருப்பு வகைகளால் மண்ணுக்கு நைதரசன் ஊட்டத்தை அளிக்க முடியும், ஆனால் இந்த உலகு ஒன்றும் கடலைகளாலும் பருப்புகளாலு்ம் நிறைந்து வழிந்து விடவில்லை. மக்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழில்கள் தேடிச் சென்று கொண்டிருந்த அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டும் பயிர்களின் தேவையும் அதிகரித்து கொண்டிருக்கும் போது, மண்ணுக்கு நைதரசனூட்டும் இச்செயற்பாடு இயற்கையாக நடப்பதை பார்த்து கொண்டிருக்க பொறுமையிருந்திருக்காது.

அந்நிலையில்தான் உலகப்போர் தொடங்கியது. குறிப்பாக ஹாபர்-போஷ் செயன்முறை ஜெர்மானிய யூத விஞ்ஞானி பிரிட்ஸ் ஹாபரால் கண்டறியப்பட்டு கார்ல் போஷ்ஷால் விரிவாக்கப்பட்டது. இச்செயன்முறை காற்றிலுள்ள நைதரசனைப் பயன்படுத்தி அமோனியாவை உற்பத்தி செய்யக்கூடியது. வெடிபொருட்கள் தயாரிப்புக்கு இது முக்கியமானதொரு நிகழ்வு, அத்துடன் இவ்வாறுதான் எமக்கு நைதரசனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை உரங்களும் கிடைக்கப்பெற்றன.

இதன் விளைவாக பல தசாப்தங்களாக உற்பத்தி செய்யப்பட்ட வெடிபொருட்கள் விவசாயத்தில் புரட்சியை உண்டாக்கும் உரங்களாக மாற்றியமைக்கப்பட்டன. மல்துசியன் சிந்தனைக்கு பெரும் அடியாக இது இருந்தது.

Civilisation.com இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட சிட் மெயரின் நான்காம் நாகரிக படம்

இதை ஒரு நாட்டை உருவாக்கி நிர்வகிக்கும் கணினி விளையாட்டாக கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் காட்டை அழித்து நாட்டை உருவாக்கி நிர்வகித்து வருகையில் ஒரு கட்டத்துக்கு மேல் விவசாய பண்ணைகளை உருவாக்க குறைந்தளவு நிலங்களே எஞ்சியிருக்கும். அதே நேரம், மக்களுக்கு உணவிடவும் வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யவும் நீங்கள் பயிரிடவேண்டும்.

இவ்வாறான கட்டத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏக்கர் ஒன்றுக்கு கிடைக்கும் விளைச்சலை அதிகரிக்கும் வழிமுறைகளைத் தேடுவீர்கள். உரங்களை கொள்வனவு செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சலை அதிகரிக்கும் இவ்வுரங்களை அறிமுகப்படுத்துவீர்கள். அவற்றை மலிவாக பெறுவதற்கான மானியங்களை வழங்குவீர்கள். அவ்வளவுதான்! தற்போது உங்கள் உற்பத்தி அதிகரித்திருக்கும்.

Our World in Data அமைப்பின் தரவுகள் பின்வருமாறு கூறுகின்றன, “இக்குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கும் இரண்டில் ஒரு நபரின் இருப்புக்கு, இருபதாம் நூற்றாண்டின் உன்னத கண்டுபிடிப்பான உரங்களே காரணமாக இருக்கும்.’’ 2017 ஐச் சேர்ந்த இவ்வரைபும் எந்தளவுக்கு இந்த உலகம் இவ்வுரங்களில் தங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

உலகளவில் ஹெக்டயர் ஒன்றுக்கு பயன்படுத்தப்படும் நைதரசன் உரத்தின் அளவு பற்றி விவரிக்கும் Our World in Data அமைப்பின் வரைபொன்றின் படம்

தற்போது சனத்தொகை அதிகரிக்கிறது. ஏற்றுமதிக்கான விளைச்சல்கள் அதிகரிக்கின்றன. நமது இருப்பின் முக்கிய அங்கமாக உரம் மாறிவிட்டது.

வரலாற்றில் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் தற்சார்பாக இருந்தோம் அல்லவா?

அரசியல்வாதிகள் இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவாக இருந்த காலத்தைப் பற்றி அடிக்கடி பேசுவது உண்டு. மேலே குறிப்பிட்ட கட்டுரைகளில் ஒன்று கூட இதே கருத்தை முன்வைக்கிறது.

உண்மையில் இலங்கை நீண்ட காலமாக விவசாயத்தில் தற்சார்பாக இருக்கவில்லை. இலங்கைக்கான குத்தரிசி இறக்குமதி தொடர்பான ஐக்கிய அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் தரவுகள் இதோ [5].

உரத்தை பயன்படுத்திக் கூட புராண-வரலாற்று காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் தற்சார்பு நிலையை நம்மால் அடைய முடியவில்லை.

மகா பராக்கிரமபாகு காலத்தில் 21 மில்லியன் இலங்கை மக்களின் உணவுத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது என்பது, இவ்வாறாக பேசப்பட்டு வருகின்ற கட்டுக்கதைகளில் முக்கியமானதொன்று.

இலங்கை விவசாயரீதியாக தன்னிறைவை அடைந்திருந்தது எனும் கட்டுக்கதையை விமர்சன ரீதியாக ஆராய்ந்த எமது விவசாய நாடு என்ற மாயை எனும் கட்டுரையில் நாம் கூறியுள்ளது போல இக்கதை புதிர்கள் நிறைந்ததாய் உள்ளது. பொலநறுவை இராசதானியின் மக்கள் தொகையை கணிக்க நாங்கள் அக்காலத்து நூல்களில் கூறப்பட்டுள்ள பொலநறுவை படை வீரர்களின் எண்ணிக்கையை தலைகீழ் பொறியியல் செய்த போது கிடைத்த மறுமொழி நாம் அறிந்த உலக வரலாற்றுடன் ஒத்துப்போகவில்லை. நவீன பூகோள பொருளாதாரத்துடன் எதுவித தொடர்பாடுமின்றி சடுதியாக பாரம்பரிய முறைகளுக்குத் திரும்பி அவற்றை மட்டும் பயன்படுத்தி தற்காலத்து இலங்கை சனத்தொகையின் பசியினை ஆற்றிவிடலாம் என்பதை நிரூபிக்க எதுவித ஆதாரங்களும் நம்மிடையே இல்லை.

பூகோளத்தின் தெற்கில்...

இலங்கை போன்ற நாடுகளில் காலனித்துவமும் அதன் பெருந்தோட்ட பயிர்ச்செய்கையும் மேலும் மேலும் சுமையை ஏற்றியுள்ளன. இவ்வமைப்பிலுள்ள நாடுகளனைத்தும் பேரரசின் பெருவலையமைப்பிலுள்ள வளவேட்டைக்காடுகளே. வாழ்வாதாரமாக விளங்கும் நிலைபேறான ஆனால் மிக மெதுவான பாரம்பரிய விவசாயம் ஏற்றுமதி நோக்கிலான வர்த்தக பெருந்தோட்ட விவசாயமாக மாறிவருவதுடன் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் அதற்கு பெருமளவு மானியங்களும் வழங்கப்படுகின்றன. கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான நன்மைகளால் தூண்டப்பட்டு, இவ்விரசாயனங்கள் பூகோள தெற்குக்கு ‘பசுமைப்புரட்சி’ எனும் பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டன [3].

இதன் விளைவுகள் தொடர்பில் மேலும் சற்று ஆராய்வோம். ஏக்கர் ஒன்றுக்கான விளைச்சலை அதிகரிக்க ஏற்கனவே உள்ள முறைகளுடன் உரத்தையும் சேர்ப்பதை விடுத்து, இலங்கை போன்ற நாடுகள் ஓரினப்பயிர்ச்செய்கையை நோக்கி பெருமளவில் நகரத்தொடங்கின. பாரிய காடுகள் அழிக்கப்பட்டு அவை சிறப்பான ஓரினப்பயிர்ச்செய்கை நடைபெறும் பெருந்தோட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டன. [4]

இதன் விளைவாக தேயிலைத்தோட்டங்களில் தேயிலை மட்டுமே வளர்க்கப்பட்டன, நெல் வயல்களில் நெல் மட்டுமே பயிரிடப்பட்டன. பயிர்ச்சுழற்சி இடம்பெறவேயில்லை, இதனால் இயற்கையாக மண்ணில் ஊட்டம் ஏறும் நிகழ்வுகள் இடம்பெற வாய்ப்பேயில்லாது போனது. அதற்கு பதிலாக களைகொல்லிகள், பூச்சிகொல்லிகள் மற்றும் இரசாயன உரங்கள் எனும் திரிசூல வியூகத்தில் நாம் மாட்டுப்பட்டுக் கொண்டுள்ளோம்.

கண்டி அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தினைக் காட்டும் Flickr வலைத்தளத்திலுள்ள பி.மல்லின் படம். https://www.flickr.com/photos/mal-b/6919097078

இது மண்ணின் இயற்கையான வளத்தை குறைவடையச் செய்வதுடன் மண்ணை மீளத்திருத்த வேண்டிய நிலைக்கும் தள்ளும். மண்ணரிப்பு ஏற்பட்டு இயற்கையாக கிடைக்கும் விளைச்சல் குறைவடைந்தால் உற்பத்தியை தக்கவைக்க என்ன செய்வது? பெருமளவான செயற்கை உரங்களை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

‘இராணுவமயப்படுத்தப்பட்ட விவசாய முறை’ அடிப்படையிலேயே நிலைபேறற்றது என சூழலியலாளரும் கல்வியலாளருமான முனைவர் வந்தனா சிவா அவர்கள் குறிப்பிடுகிறார். உரங்கள் எந்தளவுக்கு நன்மை பயப்பவை என்பதற்கான கணிதரீதியான ஆதாரங்கள், பிறந்துள்ள எந்த இரு நபர்களிலும் ஒருவரின் பிறப்புக்கு எவ்வாறு உரம் காரணமாயுள்ளது போன்ற Our World in Data அமைப்பின் வாதங்களுக்கு இது நேர் எதிராக உள்ளது.

எவ்வாறாயினும் இந்த இரண்டில் ஏதாவதொன்றே உண்மையாக இருக்க வேண்டும். உரங்கள் விவசாயத்தில் புரட்சியை உண்டாக்கி மனித இனத்தின் உணவு உற்பத்தி தகைமைகளை வானளாவ உயர்த்தின. வாழ்வதற்கு தேவையான அளவைத்தாண்டி எமது முன்னோர்கள் எம்மைத் தேவர் என்று எண்ணும்படி எம்மை தோற்ற வைக்குமளவுக்கு மேலதிகமான உணவுற்பத்தியை அடையச்செய்தன.

இக்கொள்கைகள் பூகோளத்தெற்குக்கு காலனியாதிக்கத்தின் நலனையும்  வளச்சுரண்டலையும் கருத்தில் கொண்டு நம்மை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே நடைமுறைப்படுத்தப்பட்டன. இலங்கையில் தற்போது அண்ணளவாக 22 மில்லியன் மக்கள் உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் உணவு வேண்டும். அத்துடன் நமது பொருளாதாரத்தினை தாங்குகின்ற தேயிலை போன்ற உரமில்லாது உற்பத்தி தராத, மண்ணை அழிக்கும் ஓரினப்பயிர்களான தேயிலை போன்ற காலனியாதிக்கத்தின் வடுக்களையும் துடைத்தெறிய வேண்டிய தேவையும் உள்ளது.

மல்துஸ் எனும் மாயமான்

நாம் இந்நிலையிலிருந்து எவ்வாறு மீள்வது?

இதுவரை நாம் பார்த்ததிலிருந்து நாம் உணர்ந்தது ஒன்றேயொன்றுதான், உரங்களை குறை சொல்லிப் பயனில்லை. Our World in Data அமைப்பு சொல்வது போல அது பெருமளவில் நமது உலகுக்கு வரமாகவே அமைந்துள்ளது.

மாறாக நாம் கட்டியெழுப்பியுள்ள அல்லது மீளக்கட்டுமானம் செய்ய முடியாது போயுள்ள எமது விவசாய அமைப்பு முறைதான் நமது சிக்கல். சுற்றுச்சூழலை அழிப்பதிலும் ஓரினப்பயிர்ச்செய்கையிலும் மக்களுக்கு நியாயமான விலையில் உணவை வழங்க உரங்களையும் உணவுகளையும் இறக்குமதி செய்வதிலும் தங்கியுள்ள அமைப்பு முறையே நம்மிடமுள்ளது. காலனித்துவ இலங்கையின் பிணத்தின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ள இன்றைய விவசாயமுறை, பேரரசின் பங்கின்றி செயற்படமுடியாதவாறு உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும்.

நம்மிடையே இரு தெரிவுகள் உள்ளன.

ஒருவழி உள்ளூரில் நிலைபேறான விவசாயத்தை உருவாக்குவது. தற்போதைய விவசாய முறையில் முற்றிலும் தங்கியிருப்பதை தவிர்ப்பதற்காக நிலைபேறான பாரம்பரிய முறைகளுக்கு திரும்புவது தொடர்பில் பலர், பல காலமாக பேசிவருகின்றனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதர நெருக்கடி மற்றும் வெளிநாட்டு கடன் சிக்கல்கள் என அனைத்தும், இவ்வமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதையே எமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இவ்வமைப்பு நிலைபேறற்றது என்பது கடந்த பல தசாப்தங்களாக நாமறிந்த ஒன்றே.

ஆனால் இம்மாற்றம் கவனமாகக் கையாளப்பட வேண்டியது அவசியம். மல்துஸ் Our World in Data அமைப்பின் தரவுகளின்படி ஒரு மாயத்தோற்றமாக இருக்கலாம், ஆனால் அது உண்மையானதாக ஆகவிடாமல் பார்த்துக்கொள்வது நம் கைகளில்தான் உள்ளது.

1980 களில், மண்ணுக்குள் செயற்கை உரங்களை செலுத்துவதைத் தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணை வளப்படுத்த ஒருங்கிணைந்த மண் வள மேலாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இது கூட்டுப்பசளை தயாரிப்பு முறைகள், பசளை தெளிப்பு விகிதங்கள் மற்றும் பசளை தெளிப்பின் பயன்கள் ஆகியனவற்றில் பெரும் வளர்ச்சியை கொடுத்ததாக, தன்தெனியவும் காக்கியும் இலங்கையில் கூட்டுப்பசளை தயாரிப்பு பற்றிய தமது ஆய்வில் கூறியுள்ளனர். இருப்பினும், பசளைக்கான மூலப்பொருட்களை பெறுவதிலுள்ள சிரமங்கள், தேவையான நேரத்தில் கிடைக்கக்கூடியவாறு பசளையை உற்பத்தி செய்ய முடியாமை போன்ற காரணங்களால் இயற்கை உரங்கள் விவசாயிகளிடையே பெருமளவில் சென்றடையவில்லை. [5]

இவ்வழிமுறைகளை ஏற்க வரலாற்று கூற்றுகள் மாத்திரம் போதாது, விரிவான கள சோதனைகளும் முக்கியம். ஒரு ஏக்கர் நெல் பயிரிட தேவையான உரத்தை உற்பத்தி செய்ய ஒரு ஏக்கர் காடு தேவைப்படுமென்றால் என்ன செய்வது? பயிர்ச்சுழற்சிக்காக ஒரு ஆண்டில் நெல் பயிரிட்டு அடுத்த ஆண்டில் இன்னொரு பயிர் பயிரிடுவதென்றால் எந்தப் பயிரை நாம் முன்னிலைப்படுத்துவது? எதை நாம் இறக்குமதி செய்வது? எவ்வளவுக்கு இறக்குமதி செய்வது? இப்புதிய திட்டத்தின் கீழ் எதை நாம் பசளையாக வழங்குவது? இம்மாற்றங்கள் நடக்கையில் எவ்வாறு எம் மக்கள் பசியை ஆற்றுவது? தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யாது போயின் எதை நம்பி எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது? மாற்றத்தை எவ்வாறு நாம் நிகழ்த்துவது? மாற்றத்தின் போது எவ்வுணவுகளினை நாம் சேமித்து வைப்பது?

21.9 மில்லியன் மக்களுக்கும் உணவிடலாம் எனச் சொல்வது எளிது செய்வது கடினம்.

மற்றைய வழி செயற்கை உரங்களை மென்மேலும் பயன்படுத்துவது. 2016 இல் வெளியான இவ்வாய்வு, அரிசி உற்பத்தியில் மேம்பாடுகள் 2050 இல் 25.3 மில்லியன் இலங்கை மக்களுக்கு உணவிடப் போதுமானதாக இருக்கும் எனக்கூறுகிறது. (2050 இல் எதிர்பார்க்கப்படும் இலங்கை மக்கள் தொகை 23.8 மில்லியன்) ஆனால் இவ்வளர்ச்சியை அடைய, நீர் நுகர்வு 69% வரையும் உரப்பயன்பாடு 23% வரையும் அதிகரிக்கப்பட வேண்டும். தன்னிறைவைப் பேணுவதற்கு வளப்பயன்பாட்டினை திறமையாகச் செய்யும் வழிமுறைகளை கண்டறிவதே தீர்வு, என்பதையே இவ்வாய்வு நமக்கு உணர்த்துகிறது.

மற்றைய வழி, எரிகிற நெருப்பில் இன்னும் எண்ணெயை ஊற்றுவது. இதுதான் நம் நாடு நீண்ட காலமாக பின்பற்றி வருவது, மேற்படி தகவல்கள் அரிசி இறக்குமதியில் சிறிய வீழ்ச்சியை காட்டுவதும் இவ்வழி பலனளிப்பதையே உணர்த்துகிறது.

எதுவாயினும் இவ்வழி நம்மண்ணுக்கு ஏற்படுத்திய சேதத்தை எதனாலும் மாற்ற முடியாது. ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படும் மேற்படி தீங்கிழைக்கும் வழிமுறைகள் மாற்றப்பட்டு, தேயிலை போன்ற வர்த்தக நோக்கிலான பயிர்ச்செய்கைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு, தேயிலை மற்றும் தேங்காய் ஏற்றுமதி செய்யாமல் நம்மால் முன்செல்ல முடியுமா அவ்வாறெனில் நமக்கு தேவையான உணவை நம்மால் உற்பத்தி செய்து கொள்ள முடியுமா? போன்ற மிகவும் கடினமான சில முடிகளை எடுக்க வேண்டி வரும்.

இந்நெருக்கடிக்கு தீர்வாய் நம்மிடமுள்ள அறிவார்ந்த தெரிவுகள் இவை இரண்டு மட்டுமே.

இது தீர்வின் மிக எளிய வரைபு மட்டுமே. உண்மையான தீர்வு மிகவும் சிக்கலானது. இங்கு எம்மால் ஓரிரு வசனங்களில் விவரிக்க முடியாதது. எந்தத் தெரிவை நாம் தேர்ந்தெடுத்தாலும் இரவோடிரவாக அதை நிறைவேற்றிவிட முடியாது; இம்மீளக்கட்டமைப்புக்கு குறைந்தது ஒரு பத்தாண்டுகளாவது எடுக்கும், இவ்வாறான மாற்றங்கள், தீவிரமான நீண்டகால நிலைத்தன்மையான தீர்வுக்கான அர்ப்பணிப்பும் நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகள் நோக்கிய படிப்படியான மாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய அரசியல் ரீதியான பொறுமையும் இருந்தால் மாத்திரமே சாத்தியம் ஆகும்.

இத்தொடரின் அடுத்த பகுதியில், இதுவரை காலமும் வெவ்வேறான அரசுகள் எவ்வாறு மாற்றங்களை முன்னெடுத்தன - மிக சமீபத்திய முன்னெடுப்பான சடுதியான, யாரும் எதிர்பார்த்திராத, நாடு தழுவிய சேதன விவசாயத்தை நோக்கிய திருப்பத்தின் விளைவுகள் தொடர்பில் ஆராய்வோம்.

தரவுகள்

Sri Lanka labor force survey.pdf 5060255

அடிக்குறிப்புகள்

[1] தோ.ரொ. மல்துஸ், (1872). சனத்தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை

[2] மல்துசியன் சிந்தனை ஒன்றும் அப்படியே மடிந்து போய்விடவில்லை. இருபதாம் நூற்றாண்டு வரை அது நீடித்திருந்தது. 1968 ஆம் ஆண்டில், ஸ்ரான்போர்டு உயிரியலாளரான பவுல் எயலிஸ் எழுதிய சனத்தொகைக்குண்டு அதிகம் விற்பனையான நூல்களில் இடம்பிடித்திருந்தது. அந்நூல் மனிதர்களின் சனத்தொகை அனைவருக்கும் உணவளிக்க முடியாத அளவுக்கு பெருகிவருகிறது எனும், மல்துசியன் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருந்தது. பின்வரும் TED - ED காணொளியில் காட்டப்படுவது போல இந்நூல் மிகுந்த செல்வாக்குப் பெற்றது.

பொருளியலாளர் ஜூலியன் சைமன் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர் சனத்தொகைக்குண்டு நூலை விமர்ச்சித்ததோடு, நடைமுறை தரவுகளை விளங்கிக்கொள்ளாது கற்பனை எண்ணிக்கைகளை வைத்து கனவு காண்பதாக எயலிஸ் மீதும் அவருக்கு முன்னவரான மல்துஸ் மீதும் குற்றஞ்சாட்டினார். இம்மோதல் மிகப்பெரிய கல்விசார் பகையாகி, இரு எதிராளிகளும் மனிதர்களின் விதி மீது 1000 டொலர்கள் பந்தயம் வைப்பதில் கொண்டு போய் விட்டது. பந்தயத்தில் எயிலிஸ் தோற்றதோடு, மல்துசியன் சிந்தனையின் கடைசி அத்தியாயமும் எழுதி முடிக்கப்பட்டது.

[3] மாப்பா. (2003). இருபத்தோராம் நூற்றாண்டில் நிலைபேறான மண் முகாமை. வெப்பமண்டல வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம், 6, 44-48.

[4] செயற்கை உரப்பயன்பாடும் ஏற்றுமதி நோக்கில் ஒரேயொரு வர்த்தகப்பயிரினை மட்டும் வளர்க்கும் முறையும் சேர்ந்து மண் வளத்தை மேலும் குன்றச்செய்து கொண்டிருக்கின்றன. முக்கோபதயாய் மற்றும் மொண்டல் ஆகியோர் தேயிலை பற்றி செய்த ஒக்ஸ்போர்ட் ஆய்வுக்களஞ்சியத்தில் உள்ள ஆய்வு பின்வருமாறு கூறுகிறது:

உலகின் அனைத்து கண்டங்களிலும் தேயிலை பயிரிடப்படுவதுடன், அதனைப் பயிரிடும் நிலத்தின் மொத்தப் பரப்பு இன்னும் அதிகரித்தும் வருகிறது. எனவே தேயிலை பயிரிடத் தேவையான நிலத்தை பெற்றுக்கொள்ள, பெருமளவு காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்நடவடிக்கை நேரடியாக சுற்றுச்சூழலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். தேயிலை உற்பத்தியின் மிக மோசமான விளைவு விலங்குகளின் வாழ்விடங்கள் மாற்றியமைக்கப்படுவதேயாகும்  (கிளே, 2003). பல்வேறுபட்ட அறிக்கைகளின் படி கிழக்கு ஆபிரிக்காவில் இன்னமும் புதுப்புது தேயிலைத் தோட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன (மக்லெனன், 2011). காடழிப்புக்கு தேயிலைப் பயிர்ச்செய்கை மட்டுமே காரணமில்லை. கிட்டத்தட்ட 70% ஆன தாவரங்களும் விலங்குகளும் காடுகளிலேயே காணப்படுகின்றன, எனவே இயற்கை வாழிடங்களில் ஏற்படுத்தப்படும் பெருமெடுப்பிலான மாற்றங்கள் தாவரங்களும் விலங்குகளும் வாழக்கடினமான தன்மையை ஏற்படுத்துகின்றன, இதனால் அவை அழிய நேரிட்டால் உயிர்ப்பல்லினத்தன்மையில் பாதிப்பு ஏற்படும். அதேபோல் பச்சைவீட்டு வாயுக்களை உள்ளெடுத்து புவிவெப்பமயமாதலை தடுக்கும் முக்கிய பணிகளை மரங்கள் ஆற்றுகின்றன. எனவே தேயிலைப்பயிர்ச்செய்கைக்காக பெரும் எண்ணிக்கையிலான மரங்கள் அழிக்கப்படுவது சூழல் தாக்கங்களை ஏற்படுத்தும். இதற்கப்பால் மரங்கள் அழிக்கப்படுவது மண்ணில் விழும் சருகுகளின் எண்ணிக்கையக் குறைத்து மண்ணில் உள்ள சேதனப்பொருட்களின் எண்ணிக்கையைக் குறைத்து அதன் நீரைத் தேக்கிவைக்கும் தன்மையையும் தடுத்துவிடும். பெருமழைகளின் போது மண் அரிப்புக்குள்ளாவதுடன் அருகிலுள்ள ஆற்றுப்படுக்கைகள் மற்றும் வடிகால்களில் வண்டல் படிந்து நீர்ப்பாசனத்தையும் கேள்விக்குள்ளாக்கும்.

உயர் உற்பத்தித்திறனை அடைவைதற்காக தேயிலைத் தோட்டங்கள் களையெடுத்தும் பொறிகள் மூலம் மண்ணை சுரண்டியும் களைகளில்லாது பராமரிக்கப்படும். இலங்கையில் பொறிகள் மூலம் செய்யப்படு்ம களையெடுப்புகளால் ஹெக்டயர் ஒன்றுக்கு மண்ணின் 30 சென்ரிமீற்றர் உயர மேலடுக்கு அரிப்புக்குள்ளாகிறது (ஏக்கநாயக்க, 1994). இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஹெக்டயருக்கு 40 மெற்றிக்தொன் மண்ணரிப்புக்குள்ளவதாக தெரிய வருகிறது (கிருஷ்ணராஜா, 1985).

[5] ஐக்கிய அமெரிக்க விவசாயத்திணைக்களத்தின் (USDA) தரவுகளை நாம் இங்கு பயன்படுத்தக் காரணம், இவை இலங்கை அரச அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட அதேவேளை, இவற்றின் முதன்மையான மூலங்கள் PDF கோப்புகளாகவே கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை அட்டவணை வடிவில் பயன்படுத்தக்கூடிய தரவுகளாக மாற்றுவதற்கான வேலைகள் அதிகம். மாறாக ஐ.அ.வி.தி இன் தரவுகளோ இவ்வாறான சுருக்கமான மேலோட்டத்தை வழங்கப் பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியானவை. இலங்கை சனத்தொகை மற்றும் புள்ளிவிவரவியற்துறை, இலங்கை விவசாயத்திணைக்களம், மற்றும் புதுடில்லியிலிருந்து தொழிற்படும் ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு விவசாய சேவைகளின் (FAS) கொழும்புப் பிரிவு ஆகியவற்றின் தொகுப்புகள் மற்றும் அறிக்கைகளில், ஐ.அ.வி.தி இன் தரவுகள் தங்கியுள்ளதை அவற்றை பார்க்கும் போது விளங்குகிறது.

[6] தன்தெனிய, காக்கி (2020). இலங்கையில் கூட்டுப்பசளை: கூட்டுச் சிந்தனை மூலம் சேதனக்கழிவுகளை பசளையாக்குதல் தொடர்பான கொள்கைகள், நடைமுறைகள், சவால்கள், அது தொடர்பில் எழும் கவலைகள் (பக்கங்கள் 61-89) ஸ்பிரிங்கர், சாம்.