Analysis
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் எதிர்காலம்
May 18, 2022
இலங்கை பொருளாதார நெருக்கடி தொடர்பான எமது தொடரில், சர்வதேச நாணய நிதியத்தால் எவ்வாறு எமக்கு உதவ முடியும், அவ்வுதவிக்கு தகுதி பெற நாம் எவ்வாறு வரிகள், பாராளுமன்றம் மற்றும் கொள்கைகளில் மாற்றஞ் செய்ய வேண்டும் எனப்பார்க்க உள்ளோம்.

படம்: அமலினி டி சாய்ரா

  • இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது
  • சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வர குறைந்தது ஆறு மாதங்கள் எடுக்கும் - மத்திய வங்கி ஆளுநர்
  • பணத்தை பெறுவதற்காக அன்றி இழந்துவிட்ட நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கிலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வர முயற்சிக்கப்படுகிறது
  • மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை தடுக்க கடன்களைப் பெறவும் கடனுக்கு இறக்குமதிகளை மேற்கொள்ளவும் நம்பகத்தன்மை முக்கியம்
  • சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அனேகமாக பொருளாதார மறுகட்டமைப்புக்கான நிபந்தனைகளுடனேயே வழங்கப்படும்

குழப்பங்களுக்கும் அரசியல் கொந்தளிப்புகளுக்கும் மத்தியில் இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடனான நம் நாட்டின் பதினேழாவது உடன்பாட்டை இறுதி செய்வதற்காக சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறான உதவிகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கும்?

எமது முன்னைய ஆய்வுக்கட்டுரையில், இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் மூலகாரணங்களையும், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது ஏன் தவிர்க்கமுடியாதது என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். நாடானது கடன்களை மீளக்கட்டமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தும் சுமையுடன் சேர்த்து அத்தியாவசியங்களை இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலவாணியை வழங்க முடியாமல் போராடிவருகிறது.

இந்த நிலையில் சர்வதேச நாணயத்தின் உதவி பல்வேறு காரணங்களுக்காக மிகவும் முக்கியம். சர்வதேச நாணய நிதியம் மிகவும் பெரிய அளவிலான வெளிநாட்டு நாணய நிதி (அமெரிக்க டொலர்) அளித்து டொலர் பற்றாக்குறையை தீர்த்து வைத்து விடும் என பலராலும் தவறாக எண்ணப்படுகிறது.

கடன் மீளக்கட்டமைப்பதற்கான கலந்துரையாடல்களுக்கு வழங்கும் உதவியும் நம்பகத்தன்மையும் மாத்திரமே இந்த நிலையில் சர்வதேச நாணயம் வழங்கக்கூடிய மிக முக்கிய உதவிகளாகும். இது பிற கடன் வழங்குநர்களிடமிருந்து நாம் கடன் பெற உதவும்.

சர்வதேச நாணயத்தின் ஆதரவைப் பெறுவது இலங்கையின் கடனைத் திருப்பித்தரும் உறுதிமொழிகள் மீதும் சீரான பொருளாதாரம் நோக்கிய அதன் பயணம் மீதும் நம்பகத்தன்மையைத் தரும். இது இலங்கை கடன்களை மீளக்கட்டமைப்பு செய்வதினை விரைவாக முடித்து பிற நாடுகளிடமிருந்தும் சர்வதேச நிறுவனங்களான உலக வங்கி போன்ற தரப்புகளிடமிருந்தும் பொருளாதார உதவிகளைப் பெற உதவும்.

இம்முறை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு டொலர் கிடைக்காதென்பதா இதன் பொருள்?

இல்லை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின் ஒரு பகுதியாக டொலர் கடனொன்றை இலங்கை பெறும், வித்தியாசம் என்னவென்றால் அது தருகின்ற டொலர் கடன் நாட்டின் சீர்குலைந்த பொருளாதரத்தை மீளக்கட்டியெழுப்ப போதுமானதாக இருக்காது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை விரிவான நிதி உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இந்நிதி வசதியானது ஒரு சில வருடங்களுக்கு தவணை தவணையாக வழங்கப்படும். உதாரணமாக இலங்கை 2016 இல் பெற்ற 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விரிவான நிதி உதவி மொத்தமாக ஐந்து தவணைகளாக பிரித்து பிரித்து வழங்கப்பட்டிருந்தது.

எது எவ்வாறாயினும் இவ்விரிவான நிதி உதவி மாத்திரமே அத்தியாவசியங்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு நாணயங்களின்மைக்கு ஒட்டுமொத்த தீர்வாகிவிடாது. அடுத்த மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான டொலர்களை எவ்வாறாவது கடனாகப் பெற்றுக்கொள்ளும் வழியொன்றை கண்டுபிடிப்பதுதான இலங்கைக்கு தற்போதிருக்கும் முக்கிய தலையிடி. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள குறைந்தது இன்னும் சில மாதங்களாவது தேவைப்படும், அதுவும் மூன்று வருடங்களில் தவணை தவணையாகவே பிரித்து வழங்கப்படும். எனவே விரிவான நிதி உதவி தற்போது நாட்டுக்கு இருக்கின்ற மிக முக்கிய தேவையான உடனடிப்பணத்திற்கு எவ்வகையிலும் உதவாது.

சர்வதேச நாணய நிதியம் எவ்வகையிலாவது உடனடிப்பண உதவியை வழங்கமுடியுமா?

வரவுச்செலவு சமநிலை சிக்கலை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உடனடி பொருளாதார உதவியை நல்கக்கூடிய விரைவான நிதியளிப்பு பொறிமுறை எனும் கடன் பொறிமுறை ஒன்றை சர்வதேச நாணய நிதியம் கொண்டுள்ளது. இயற்கை பேரழிவுகள், உலக நெருக்கடிகள், அல்லது போர்களால் பெரிய பொருளாதா நெருக்கடிகளை சந்தித்த நாடுகளுக்கு இப்பொறிமுறையின் கீழ் கடனுதவி வழங்கப்படும். இப்பொறிமுறையில் சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து விதிமுறைகளையும் நிறைவேற்றாமலேயே ஒரு நாடு உதவியினைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே இவ்வுதவி குறுகிய காலத்துக்குள்ளேயே (ஓரிரு மாதங்கள்) பெற்றுக்கொள்ளக்கூடியது. கொரோனாவினால் பங்களாதேசின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதகமான விளைவுகளை கருத்தில் கொண்டு, 2020 மே மாதம் விரைவான நிதியளிப்பு பொறிமுறையின் கீழ் 488 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவியினை சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்தது. பெருந்தொற்றின் பலனாக இவ்வாறு மொத்தமாக 12 நாடுகள் விரைவான நிதியளிப்பு பொறிமுறையின் கீழ் கடனுதவிகளைப் பெற்றிருந்தன.

எவ்வாறாயினும் இலங்கை பெருந்தொற்று பரவத்தொடங்கிய 2020 தொடக்கம் 2021 காலப்பகுதியில் விரைவான நிதியளிப்பு பொறிமுறையின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெறமாட்டோம் என பிடிவாதமான நிலைப்பாட்டுடன் இருந்தது. நாடு கடன்களை மீளச்செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு சென்று, வெளிநாட்டு நாணயக்கையிருப்பு முற்றாகத் தீர்ந்த பின், விரைவான நிதியளிப்பு பொறிமுறையின் கீழ் கடனுதவியை அரசு கோருகையில் நிலைமை கையை மீறிச்சென்றிருந்தது. இலங்கையின் கடன் நிலை கையை மீறிச்சென்றுவிட்டதாலும், விரிவான நிதித்திட்டமொன்று அதனிடம் இல்லாதபடியாலும், இலங்கையின் கடனுதவிக் கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடனுதவி கிடைக்க இன்னும் எவ்வளவு காலம் செல்லும்?

விரைவான நிதியளிப்பு பொறிமுறை இலங்கைக்கு சாத்தியமில்லை என்றபடியால், தற்போதைக்கு உடனடிப்பண உதவி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்க வாய்ப்பில்லை. அதாவது இலங்கைக்கு விரிவான நிதி உதவி வடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெறும். இலங்கை 2016 ஆம் ஆண்டு 1.5 பில்லியன் பெறுமதியான கடனை விரிவான நிதி உதவிப்பொறிமுறையின் கீழ் ஏழு தவணைகளில் பெற்றுகொண்டது. சர்வதேச நாணய நிதியம் வழங்கக்கூடிய நிதியுதவியின் சரியான பெறுமானத்தை தற்போது கணிக்க முடியாத போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி உதவி ஒதுக்கீட்டின் 400% பெறுமதியான 3 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுக் கொள்ளுமளவுக்கு இலங்கைக்கு தகுதி உள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் உறுதித்தன்மை நிலைநிறுத்தப்பட்டபின், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்க குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும்.

சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தும் ‘நிபந்தனைகள் மற்றும் சீர்திருத்தங்கள்’ என்னென்ன?

ஒரு நாடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள, தமது பொருளாதாரக் கொள்கைகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள ஒத்துக்கொள்ள வேண்டும். வரவுச்செலவு சமநிலை சிக்கலை சீர்படுத்தல், நாட்டின் பொருளாதார சிக்கலுக்கான மூலகாரணங்களை களைதல் போன்றவற்றை இலக்காகக் கொண்டே மேற்படி நிபந்தனைகள் விதிக்ககப்படுகின்றன. இந்நிபந்தனைகள் உதவியைப் பெறும் நாடு தனது பொருளாதாரத்தை சீராக பேணுவதையும், கடன்களை குறித்த கெடுவுக்குள் மீளச்செலுத்துவதையும் உறுதிப்படுத்துகின்றன.

சட்டங்கள், நிறுவனங்கள், மற்றும் சட்டமன்றத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் ஆகிய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் வளர்முக நாடுகளின் கட்டமைப்பு பிரச்சினைகளான குறைவான வரி வருமானம், கூடிய பாதீட்டு பற்றாக்குறை, குறைவான ஏற்றுமதி செயல்திறன், மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஏற்படும் பாரிய இழப்புகள் ஆகியவற்றை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் நீண்ட கால உதவியைப் பெற முயற்சிக்கும் எந்தவொரு நாடும், அதற்குரிய கோரிக்கை கடிதத்தை அனுப்புகின்ற வேளையில், தாம் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள முனைவதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் சேர்த்து இடம்பெறக்கூடிய கொள்கை மாற்றங்கள் என்னென்ன?

முன்பு இலங்கைக்கு நிதியுதவி வழங்கப்பட்ட போது  நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாலும், 2022 இல் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான ஊழியர் அறிக்கையும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியுடன் சேர்த்து கட்டமைப்பு சீர்திருத்தங்களும் இடம்பெறப்போவதை எமக்கு உணர்த்துகின்றன. சர்வதேச நாணய நிதிய ஊழியர் அறிக்கை, வரி வருமானத்தை அதிகரிக்கவும், கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைய மூலோபாயத் திட்டமிடலை மேற்கொள்ளவும், நாணயவியல் கொள்கையில் இறுக்கத்தை ஏற்படுத்தவும், நெகிழ்வான நாணய மாற்றுக்கு வழியேற்படுத்தவும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீர்திருத்தவும், சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தவும், விலை கட்டுப்பாடுகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளினால் ஏற்படக்கூடிய விளைவுகள்

பரிந்துரைக்கப்பட்ட கொள்கைஏற்படக்கூடிய விளைவுகள்
வரி வருமான அதிகரிப்புவருமான வரிவீதம் அதிகரிப்பு, வருமான வரி எல்லைகள் குறைப்பு, பெறுமதி சேர் வரிவீதம் அதிகரிப்பும் பெறுமதி சேர் வரி எல்லைகள் குறைப்பும்
கடன் நிலைபேற்றுத்தன்மைக்கான மூலோபாயம்சுதந்திரமாக தனித்தியங்கும் கடன் பணிமனை ஒன்றை அமைத்தல்
இறுக்கமான நாணயவியல் கொள்கைஉயர் வட்டி வீதத்தை தொடர்தல்
நெகிழ்வான நாணய மாற்றுநிலையான நாணய மாற்று இன்மை
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் சீர்திருத்தம்பங்குச்சந்தையில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் சிறுபான்மை பங்குகளை பட்டியலிடல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மேலும் வெளிப்படையாதல், ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மீளக்கட்டமைக்கப்படல்
சமூக பாதுகாப்பு வலையமைப்பு வலுவூட்டல்அதிகம் இலக்கு வைக்கப்படும் மக்கள் நல திட்டமாக சமுர்தி உருப்பெறும்
விலை கட்டுப்பாடுகளில் சீர்திருத்தம்செலவு அடிப்படையிலான எரிபொருள் மற்றும் மின் விலை சூத்திரம், மின் பட்டியல் கட்டண அதிகரிப்பு
சுதந்திரமாக தனித்தியங்கும் மத்திய வங்கிநாணயவியல் சட்டம் திரும்பப்பெறப்படலும், மத்திய வங்கி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இலங்கை மத்திய வங்கியில் அரசியல் தலையீடு குறைக்கப்படலும்
வர்த்தக தாராளமயமாக்கம்இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தம்

மூலம்: சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகள் மற்றும் ஊடக அறிக்கைகள் அடிப்படையில் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது

வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப் பெறுகையில் உடனடியாக முன்னெடுக்கப்படும் முதன்மையான கொள்கை மறுசீரமைப்பாக விளங்குகிறது. வரி அடிப்படையையும் வரி விகிதத்தையும் அதிகரிப்பதன் மூலம் வரி வருமானம் அதிகரிக்கப்படும். இதனால் தற்போதுள்ள வருமான வரி செலுத்துனர்களோடு சேர்த்து மேலும் பலர் வருமான வரி செலுத்த நேரிடும். இது உழைக்கும் போது செலுத்தும் வரியின் (PAYE) மறு அறிமுகத்துக்கு வழிவகுப்பதுடன், வாடகை வருமானம், வட்டி வருமானம், மற்றும் பிற வருமானங்களான ஆலோசனை வழங்குவதால் கிடைக்கப்பெறும் 50,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானங்கள் போன்றனவற்றுக்கு நிறுத்தி வைக்கப்படும் வரியையும் (WHT) மீளச்சுமத்த வழி வகுக்கும். சுருங்கச் சொன்னால், போதுமான அளவுக்கு உழைக்கின்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டும். சமூகத்தின் ஏழை மக்களை இது பாதிக்காது.

இலங்கையின் மிகக்குறைந்த வரி விகிதங்களை எண்ணிப் பார்க்கையில் வரப்போகின்ற மாதங்களில் பெறுமதி சேர் வரியில் (VAT) மாற்றங்கள் வரவாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. பெறுமதி சேர் வரியின் வரி விகிதம் அதிகரிக்கப்பட்டு வரி எல்லை கணிசமான அளவு குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

பெறுமதி சேர் வரி விகிதம் தற்போது 08% ஆகவுள்ளதுடன் அது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரி எல்லையானது எத்தனை நிறுவனங்கள்/வணிகங்கள் அவ்வரியை செலுத்துகின்றன என்பதை தீர்மானிக்கும். எடுத்துக்காட்டாக வரி எல்லையானது 05 மில்லியன் ரூபாவாக இருந்தால், ஆண்டொன்றுக்கு 05 மில்லியனுக்கு மேல் வருமானம் ஈட்டும் அனைத்து வணிகங்களும் வரி செலுத்தும், 05 மில்லியனுக்கு குறைவாக வருமானம் ஈட்டுவன கட்டமாட்டா. இவ்வரி எல்லையின் பெறுமதியை குறைப்பதன் மூலம், அதிகளவான வணிகங்களை பெறுமதி சேர் வரியினை செலுத்த வைக்கலாம்.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மற்றும் வரி எல்லை குறைப்புடன் சேர்ந்து, துறைமுக மற்றும் விமான நிலைய வரி  (PAL) போன்ற எல்லை வரிகளும் சுங்க கட்டணங்களும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. பெறுமதி சேர் வரிகளில் அதிக கவனம் செலுத்தி எல்லை வரிகளை குறைப்பது சர்வதேச நாணய நிதியத்தின் வழமையான அணுகுமுறையாய் இருப்பதை வரலாற்று ஆதாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பெறுமதி சேர் வரி அதிகரிப்பால், மிக வெளிப்படையாகக் புலனாகக்கூடியவாறு விலைகள் அதிகரிப்பதை இந்நடவடிக்கை மூலம் தவிர்த்துக்கொள்ள முடியும்.

செலவு அடிப்படையிலான எரிபொருள், மின் மற்றும் நீர் விலை சூத்திரங்களை அறிமுகப்படுத்துவது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் ஒன்றாகும். இதனால் பெரும்பாலானோருக்கு மின் கட்டணங்கள் அதிகரிக்கும். இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கூட இலங்கை மின்சார சபையின் இழப்புகளை குறைக்க மின்கட்டணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை பற்றி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதே நிலை நீர் வழங்கலுக்கும் பொருந்துமென்றபடியால் நீர் கட்டணங்களும் அதிகரிக்கும்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த உயர்வான வட்டி விகிதத்தை வழங்குமாறு, சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது. இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே கொள்கை விகிதத்தை இரு மடங்காக்கி விட்டது. இதனால் கணிசமான அளவுக்கு வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. சில வணிக வங்கிகளின் கடன் விகிதங்கள் 20% க்கும் மேல் அதிகரித்துவிட்டன. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி வழங்கப்படவுள்ள இக்காலகட்டத்தில், பணவீக்கம் தொடர்ந்தும் உயர்வாக காணப்படுவதால், தற்போதைக்கு வட்டி விகிதங்கள் குறைவடைவதற்கு வாய்ப்பில்லை.

இலவச சுகாதாரம் மற்றும் கல்வியில் பாதிப்புகள் ஏற்படுமா?

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றால் இலங்கையின் கல்வி மற்றும் சுகாதார துறைகளிற்குரிய ஒதுக்கீட்டில் குறைப்புகள் முன்னெடுக்கப்படும் என தவறான எண்ணமொன்று பரவலாக காணப்படுகிறது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியம் உதவி செய்த கடந்த இரு சந்தர்ப்பங்களிலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட அறிக்கைகளிலும் கூட இவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை. மிக அண்மையில் 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூட, சர்வதேச நாணய நிதியம் கல்வி, சுகாதாரம், மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்புகளிற்கு பணம் ஒதுக்கிடுவதற்கு, அதுவும் முக்கியமாக பெருந்தொற்றுக்காலத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தது.

இலங்கை பாதீட்டிலுள்ள பற்றாக்குறைக்கு காரணம் வருமானம் குறைவாக உள்ளமையே ஆகும். இதனடிப்படையில் பார்த்தால் சர்வதேச நாணய நிதியத்தின் அனேகமான பரிந்துரைகள் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பாதீட்டிலுள்ள பற்றாக்குறையை குறைப்பதையே நோக்காக கொண்டுள்ளன. இம்முறை பொதுவாக வருமானத்தின் மூலமான வலுவூட்டல் எனப்படும். எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு கல்வி மற்றும் சுகாதார ஒதுக்கீடுகளில் குறைப்பை ஏற்படுத்த வழிவகுப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே.

முன்னோக்கிய பயணம்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, சுதந்திரத்துக்கு பின்னான மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கான நெடுந்தூர பயணத்தில் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு அடி மாத்திரமே, இது மாத்திரமே இப்பொருளாதார நெருக்கடிக்கான முழுமையான தீர்வாகி விடாது.

சர்வதேச நாணய நிதியத்தினால் பரிந்துரைக்கப்படும் பல சீர்திருத்தங்கள் இலங்கை தனது பொருளாதாரத்தை காப்பாற்ற முன்னெடுக்க வேண்டியவை ஆகும். நம் நாட்டினால் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவோ சீர்திருத்த முயற்சிகளை தொடரவோ முடியாமல் போனதால் தான் இத்தகைய பொருளாதார நெருக்கடியில் நாம் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்ட பின், நீண்ட கால கொள்கை திட்டங்கள் தொடர்பில் நாம் கவலைப்படலாம். ஆனால் அதற்கு நாம் முதலில் இந்நெருக்கடியிலிருந்து தப்பி பிழைக்க வேண்டும்.

பின்னிணைப்பு

மீண்டும் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய 2019 ஆம் ஆண்டு வரி மாற்றங்கள்

வரி வகைவரி மாற்றங்கள்
தனிநபர் வருமான வரிஉயர்ந்தபட்ச வரி விகிதம் 24% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 4,8,12,16,20 மற்றும் 24 % ஆறு படி வரிக்கட்டமைப்பு 6,12,18 % மூன்று படி வரிக்கட்டமைப்பாக மாற்றியமைக்கப்படுள்ளது. விவசாயம், தகவல் தொழிநுட்பம் மற்றும் சில மூலங்கள் மூலம் பெறப்படும் வருமானம் அல்லது இலாபத்திற்கு மாத்திரம் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பெருநிறுவன வருமான வரிபொதுவான வரி விகிதம் 28% இலிருந்து 24% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி தொழிற்துறைக்குரிய வருமான வரி விகிதம் 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரிஇவ்வரி நீக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட தனிநபர் வருமான வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
நிறுத்தி வைக்கப்படும் (WHT) வரிவட்டி, வாடகை மற்றும் பிற சேவைகளிலிருந்து பெறப்படும் வருமானத்திற்கு இவ்வரி நீக்கப்பட்டது.
பொருளாதார சேவைக்கட்டணம் (ESC)நீக்கப்பட்டது.
பெறுமதி சேர் வரி (VAT)பெறுமதி சேர் வரி விகிதம் 15% இலிருந்து 8% ஆக குறைக்கப்பட்டது.
பெறுமதி சேர் வரிப்பதிவிற்கான எல்லையை ஆண்டொன்றுக்கு 12 மில்லியன் ரூபாவிலிருந்து 300 மில்லியன் ரூபாவாக அதிகரித்தல்.
துறைமுக மற்றும் விமான நிலைய வரி (PAL)பொதுவான விகிதம் 7.5% இலிருந்து 10% ஆக உயர்த்தப்பட்டது.