Analysis
சர்வதேச நாணய நிதியம் நோக்கிய இலங்கையின் பயணம்
Apr 15, 2022
பொருளாதார நெருக்கடி ஏன் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு மோசமானது என்றும், கடன்களை மீளச்செலுத்தும் இயலுமையை நாம் இழந்ததை அறிவிக்கும் நிலைக்கு நாம் எவ்வாறு இட்டுச்செல்லப்பட்டோம் என்றும், இவற்றுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் என்ன தொடர்பு என்றும் இந்தக்கட்டுரையில் நாம் பார்க்கவுள்ளோம்.

எமது அண்மைய பொருளாதார நெருக்கடி ஏன் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு மோசமானது என்றும், கடன்களை மீளச்செலுத்தும் இயலுமையை நாம் இழந்ததை அறிவிக்கும் நிலைக்கு நாம் எவ்வாறு இட்டுச்செல்லப்பட்டோம் என்றும், இவற்றுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் என்ன தொடர்பு என்றும் இந்தக்கட்டுரையில் நாம் பார்க்கவுள்ளோம்.

“வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தும் இயலுமையை நாங்கள் இழந்துவிட்டோம். கடன் கொடுப்பனவுகளை செலுத்துவது சவாலானதாகவும் சாத்தியமில்லாததாகவும் ஆகிவிட்டது.” - மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

ஏன் இந்நெருக்கடி வரலாறு காணாதது?

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடி கடன்களை மறுசீரமைப்பது ஏன் ஒரேயொரு புத்திசாலித்தனமான தெரிவாகும்?

இறக்குமதி கட்டுப்பாடுகள்

அடுத்து என்ன?

ஏப்ரல் 12, சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு இரண்டு நாட்கள் முன்பு, இலங்கை அரசு வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை நிறுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் கடன்களை மறுசீரமைக்க போவதாக அறிவித்தது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட திறைசேரி செயலாளர் கே.எம்.எம் சிறிவர்தன ஆகியோர் இதை, சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுடனான ‘கடன் செலுத்தும் இயலுமையை உறுதி செய்யும் கடன் மறுசீரமைப்பு முற்காப்பு  நடவடிக்கை பேரம்’ என குறிப்பிட்டனர். எளிய மொழியில் சொல்வதானால், இலங்கை தனது வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை தற்போதைக்கு நிறுத்தி விட்டது, கொடுப்பனவுகளை முழுமையாக வழங்க அதற்கு மேலும் கால அவகாசம் தேவை.

சுதந்திரத்திற்கு பின் இலங்கை கடன்களை மீளச்செலுத்த முடியாமல் போன முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எமது நாடு இவ்வாறான ஒரு இடியப்பச்சிக்கலில் சிக்கியதேயில்லை, இச்சிக்கலிலிருந்து வெளிவருவதும் ஒன்றும் இலகுவானதில்லை.

எமக்கு இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது? சர்வதேச நாணய நிதியத்தை விட்டால் நமக்கு வேறு வழிகளே கிடையாதா?

எமது முன்னைய ஆய்வுக்கட்டுரைகளில், எமது பொருளாதார கட்டமைப்பின் பலவீனங்களையும், எமது வெளிநாட்டுக்கடன்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அதிகரித்து வருவதையும் குறிப்பிட்டிருந்தோம். பல பொருளாதர நிபுணர்கள், கடன்களை மீளச்செலுத்தும் இயலுமையை இலங்கை இழக்கும் என்பதையும், கடன்கள் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரல் ஆகியன விரைவிலேயே நடக்கும் என்பதையும், நாடு இன்னும் பல ஆண்டுகளுக்கு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும், முற்கூட்டியே கணித்திருந்தனர்.

வெளிநாட்டுக்கடன்கள் யாவும் வெளிநாட்டு நாணயங்களிலேயே (பொதுவாக அமெரிக்க டொலர்களில்) மீளச்செலுத்தப்பட வேண்டும் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இவற்றை மீளச்செலுத்தும் எமது இயலுமை வெளிநாட்டு நாணயங்களை ஈட்டிக்கொள்ளும் எமது இயலுமையிலேயே பெருமளவில் தங்கியுள்ளது. குறைவான ஏற்றுமதிகள் காரணமாக இவ் இயலுமையில் எமக்கு குறைபாடே காணப்படுகிறது. எந்தளவுக்கு எமது வெளிநாட்டு நாணய ஈட்டம் குறைகிறதோ அந்தளவுக்கு வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்துவதும் கடினமானதாகும்.

இலங்கை தற்போது பெருமளவான வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை நிறுத்திவிட்டதன் காரணமாக, எமது வெளிநாட்டு நாணயக்கையிருப்பை எமக்குத்தேவையான அடிப்படை பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாத்திரம் பயன்படுத்த முடியும். வெளிநாட்டு நாணயக்கையிருப்பு மிகவும் குறைவாக உள்ள சமயத்தில் வெளிநாட்டுக்கடன் கொடுப்பனவுகளையும் செலுத்திக்கொண்டு அடிப்படை பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றோமானால், இறக்குமதிக்கு பணமே மிஞ்சாது. இதனால், நாடுகள் எமது இறக்குமதிகளை நிறுத்தி விடவும் கூடும்.

ஏன் இந்நெருக்கடி வரலாறு காணாதது?

இப்பொருளாதார நெருக்கடி ஒரு சில காரணங்கள் காரணமாக வரலாறு காணாததாக காணப்படுகிறது.

எமது நாடு கடன் செலுத்தும் இயலுமையை இழக்கும் என்பது, நாட்டின் நட்சத்திரத்தினை பார்த்தபோது தனக்கு தெரியவில்லை என ஜனாதிபதியின் சோதிடர் ஞானாக்கா கூறியுள்ளார். பட மூலம்: News Curry.

முதலாவது காரணம், இலங்கையினது கடன் மதிப்பீடுகள் தொடர்ச்சியாக குறைந்து வந்ததனால், ஏப்ரல் 2019 இன் பின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களினை (ISBs) வழங்கி சர்வதேச மூலதன சந்தைகளிலிருந்து கடன்களினை பெற அதனால் முடியாமல் போனது. இதனால், 2020-2022 இல் முதிர்வடைந்த சர்வதேச இறையாண்மை பத்திரங்களுக்குரிய தொகையை மீளச்செலுத்துவது கடினமாகியது. 2019 இல் புதிதாக பதவியேற்றிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் காரணமாக ஏற்பட்ட இலங்கையின் கடன் மதிப்பீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியைத்தொடர்ந்து, புதிய சர்வதேச இறையாண்மை பத்திரங்களினை வழங்குவது கடினமாகியது. இக்கடன் மதிப்பீட்டு வீழ்ச்சியினைத் தொடர்ந்து பெருந்தொற்றினால் ஏற்பட்ட பருப்பொருளியல் எதிர்விளைவுகள் காரணமாக மேலும் தொடர்ச்சியான வீழ்ச்சிகள் உண்டாகி சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வழங்குவதை சாத்தியமற்றதாக்கியது. இது இலங்கையின் வெளிநாட்டு நாணயக்கடன் (முக்கியமாக இலங்கைக்கு அதிகம் தேவைப்படும் அமெரிக்க டொலர்கள்) பெறும் இயலுமையை குன்றச்செய்தது.

சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் என்பவை, கடனாக வழங்கப்படும் பணம் குறித்த திட்டத்தில்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எதுவித கட்டுப்பாடுகளுமில்லாத வணிக கடன்களாகும். இதனால், அரசு பணத்தினை தான் எவ்வாறு செலவழிக்க எண்ணுகிறதோ அவ்வாறு செலவழிக்கும் சுதந்திரம் அதற்கு உண்டு. அரசு கோரிய தொகை முழுமையும் ஒரே தவணையில் அதற்கு கடனாக வழங்கப்படும். திட்ட கடன்களை விடவும் இவை விலை கூடியவையுமாகும்.

ஏன் இந்த கடன் மதிப்பீடுகள் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன?

ஒரு நாட்டின் கடன் மதிப்பீடுகளே அந்த நாடு தான் பெற்ற கடனை திருப்பியளிக்கும் இயலுமையை கொண்டதா இல்லையா என்பதை காட்டும் குறிகாட்டிகளாகும். எனவே இம்மதிப்பீட்டில் ஏற்படும் வீழ்ச்சி நேரடியாக, அந்த நாட்டின் பெற்ற கடன்களை திருப்பியளிக்கும் இயலுமையில் ஏற்பட்ட வீழ்ச்சியை குறிக்கும். எந்தளவுக்கு கடன் மதிப்பீடுகள் குறைகின்றனவோ, அந்தளவுக்கு கடனை திருப்பி செலுத்தும் இயலுமையும் குறைவடையும்.

இலங்கையை பொறுத்தவரையில், 2019 இல் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்தும், அதனால் இலங்கையின் வெளிநாட்டு கடன்களை திருப்பிச்செலுத்தும் இயலுமை வீழ்ச்சியடையும் என இம்மதிப்பீடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் எச்சரித்திருந்தன. 2020 அளவில், இலங்கை ஏற்கனவே பாரிய பாதீட்டு பற்றாக்குறையை (அரசின் வருமானத்தை விடவும் செலவு அதிகம்) கொண்டிருந்தது, அது போதாதென்று மென்மேலும் வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு, அதனால் வரிவருவாய் இழப்பு மேலும் அதிகரித்து முன்னிலும் அதிகமான பாதீட்டு பற்றாக்குறை ஏற்பட்டது. இது எதுவித கணிசமான வருமான அதிகரிப்பும் இல்லாத சூழ்நிலையிலும் மென்மேலும் கடன்களை வாங்கி குவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு அரசினை தள்ளியது.

இது கடன் மதிப்பீட்டினை வீழ்ச்சிக்குட்படுத்திய மிக பாரியதொரு பருப்பொருளியல் சிக்கலாகும்.

நாடு ஏற்கனவே உயர் வெளிக்கடன் செலுத்தல் விகிதத்தினை (ஏற்றுமதி வருமானத்தில் பெரும்பங்கு வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதில் செலவாகுதல்) கொண்டிருக்கும் நிலையில், மேற்படி கடன் மதிப்பீடுக்குறைவு கவலை தருவதாகும். 2020 தொடக்கம், இலங்கை ஒவ்வொரு ஆண்டும் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடன் மீளச்செலுத்தலை செய்ய வேண்டியேற்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, 2020 இலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டொலர் பெறுமதிக்கும் மேற்பட்ட சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் முதிர்வடையும் நிலையிலுள்ளன. இச்சர்வதேச இறையாண்மை பத்திர கடன்களை அடைப்பதற்கு முதலினை ஒரே தடவையில் வழங்க வேண்டும், அதாவது இவற்றுக்கு வழங்குமளவுக்கு சர்வதேச நாணயங்கள் இலங்கையிடம் இருக்க வேண்டும். வெளிநாட்டு நாணயக்கையிருப்பை புதிய சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வழங்குவதன் மூலம் அதிகரித்துக்கொள்வதுதான் வழமையாக சர்வதேச இறையாண்மை பத்திரக்கடன்களை அடைக்கும் வழியாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், மேற்படி சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மற்றைய கடன்கள் போலன்றி, வழங்கப்படும் பணம் குறித்த திட்டத்தில்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எதுவித கட்டுப்பாடுகளும் இல்லாதவை, அரசு பணத்தினை தான் எவ்வாறு செலவழிக்க எண்ணுகிறதோ அவ்வாறு செலவழிக்கும் சுதந்திரம் அதற்கு உண்டு. இவ்வாறு பழைய சர்வதேச இறையாண்மை பத்திர கடன்களை புதிய சர்வதேச இறையாண்மை பத்திர கடன்களை பயன்படுத்தி அடைக்கும் முறைக்கு மறுநிதியளிப்பு அல்லது கடன் புதிப்பிப்பு என்று பெயர். இது உங்களுக்கு, கடன் வாங்கி கடன் அடைப்பது போல தோன்றுகிறதா? ஆமாம் உங்கள் ஊகம் சரியானதே. இவ்வாறுதான் மூலதன சந்தைகள் செயற்படுகின்றன. திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களும் இவ்வாறே தொழிற்படுகின்றன.

இலங்கையின் கடன் மதிப்பீடுகள் குறைவடைந்து, 2020 இலிருந்து புதிய சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வழங்க முடியாமல் (இலங்கை இறுதியாக 2019 ஏப்ரலில் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வழங்கியிருந்தது) போனதன் காரணமாக, மறுநிதியளிப்பு இலங்கைக்கு ஒரு தெரிவாக இருக்கவில்லை. 2030 வரைக்கும் முதிர்வடையக்கூடிய சர்வதேச இறையாண்மை பத்திரங்களை இலங்கை கொண்டிருக்கின்ற இந்நிலையில், சர்வதேச இறையாண்மை பத்திரக்கடனை அடைக்கும் வழமையான முறை இலங்கைக்கு சாத்தியமில்லாமல் போனதுதான் இலங்கையின் மிகப்பெரிய பிரச்சினை. இக்கடன்களை அடைக்கமுடியாமல் போனதால், எமது பொருளாதாரம் மேலும் ஆழமான சிக்கல்களுக்குள் சிக்குண்டது.

2007 க்கு முன்னர் இலங்கை எதுவித சர்வதேச இறையாண்மை பத்திரக் கடன்களையும் கொண்டிருக்கவில்லை என்பதனால், இவ்வாறான பாரிய வெளிநாட்டுக்கடன் சவால்களை இலங்கை எதிர்கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2020 தொடக்கம் 2025 வரை, சர்வதேச இறையாண்மை பத்திரக்கடன் கொடுப்பனவுகள், அரசின் மொத்த வெளிநாட்டுக்கடன் கொடுப்பனவுகளின் 50% ஆக்கிரமித்திருக்கும் என தரவுகள் கூறுகின்றன.

இலங்கை அரசின் வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகள் - தொகை மில்லியன் டொலர்களில்

202020212022202320242025
மீளச்செலுத்தப்பட்டுவிட்ட கடன் நிலுவை36,76035,76735,64733,18430,62126,782
மீள்செலுத்தல்கள்2,2542,3943,4241,3701,077520
மூலதன கொடுப்பனவுகள்2,8272,7733,4053,3103,6404,359
வட்டி கொடுப்பனவுகள்1,4641,3191,2671,1361,031934
மொத்த கடன் மீள்கொடுப்பனவுகள்4,2914,0924,6724,4474,6715,292
சர்வதேச இறையாண்மை பத்திர மீள்கொடுப்பனவுகள்2,0241,9342,3571,9982,1622,741
மொத்தக்கடன் மீள்கொடுப்பனவுகளில் சர்வதேச இறையாண்மை பத்திர மீள்கொடுப்பனவுகளின் %47.2%47.3%50.4%44.9%46.3%51.8%
Untitled

குறிப்பு: 2022 தொடக்கம் 2025 வரையான தொகைகள் அண்ணளவானவை மூலங்கள்: வெளிவளத்துறையிடம் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்டவை - அரசுக்குச்சொந்தமான நிறுவனங்களுக்காக திறைசேரியால் பெறப்பட்ட கடன்களும் தரவில் உள்ளடக்கப்பட்டுள்ளன, இலங்கை அபிவிருத்தி முறிகள் (SLDBs) தரவில் உள்ளடக்கப்படவில்லை.

இரண்டாவது காரணம், பெருந்தொற்று காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை முற்றாக சரிவடைந்தது. சுற்றுலாப்பயணிகள் வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வந்து வங்கிகளினூடு அவற்றை பரிமாற்றுவர். அவர்களது வரவின்மை காரணமாக ஆண்டொன்றுக்கு அண்ணளவாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணய வரத்து குறைவடைந்தது. 2019 இல் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாயிருந்த சுற்றுலாத்துறை வருமானம் 2020 இல் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களாய் சரிவடைந்தது. 2021 இல் அது 260 மில்லியன் அமெரிக்க டொலர்களாய் மேலும் சரிவடைந்தது. 2017-2020 காலப்பகுதியில் நாட்டின் மொத்த வெளிநாட்டு நாணய வருவாயில் சுற்றுலா வருமானம் அண்ணளவாக 15% ஆகவிருந்தது. வெளிநாட்டு நாணய வருவாயின் மூன்றாவது மிகப்பெரிய பங்காக இலங்கை சுற்றுலாத்துறை காணப்பட்டது. 2017-2019 காலப்பகுதியில், பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி மொத்த வெளிநாட்டு நாணய வருவாயின் 60% ஆகவும், வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் அண்ணளவாக 35% ஆகவுமிருந்தது.

இந்த இரண்டையும் சேர்த்து பார்க்கின், சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வழங்கி வெளிநாட்டு நாணயக்கடன்களை பெறும் இயலுமையை இழந்தமையும், சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக வெளிநாட்டு நாணங்களின் வரத்து குறைவடைந்தமையும் பொருளாதாரத்தில் அடிமேல் அடியாக விழுந்தன. 2020 இல் வெளிநாட்டு நாணய வருவாய் 30% ஆல் குறைவடைந்த (2019 உடன் ஒப்பிடுகையில்) அதே வேளை, இலங்கை அமெரிக்க டொலர்களை கடனாக பெற்று வெளிநாட்டு நிதி இடைவெளியை இட்டு நிரப்பக்கூடிய மிக இலகுவான வழிமுறையினை அணுக முடியாமலும் போனது.

2017 தொடக்கம் 2020 காலப்பகுதியில் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பத்திரங்களை இலங்கை வழங்கியிருந்தது. இலங்கையின் கடன் மீள்கொடுப்பனவு தேவைகளை நாம் கூர்ந்து நோக்கின், ஒவ்வொரு ஆண்டும் 1.5 தொடக்கம் 2 பில்லியன் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வழங்கினால் மாத்திரமே கடன் மீள்கொடுப்பனவு தேவைகளை இலங்கையினால் பூர்த்தி செய்ய முடியும். முன்பே குறிப்பிட்டது போல, சுற்றுலாத்துறையினால் பெறப்படும் வெளிநாட்டு நாணய வரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, இலங்கை ஆண்டொன்றுக்கு 3.5 தொடக்கம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயினை இழந்துள்ளது. இதனால் இலங்கையின் வெளிநாட்டு நாணய மொத்த ஆண்டு வருமானம் 5 தொடக்கம் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது. இத்தொகை பெரும் பொருளாதாரங்களான அமெரிக்கா அல்லது சீனா போன்ற நாடுகளுக்கு வேண்டுமென்றால் சிறியதொரு தொகையாக இருக்கலாம் ஆனால், இலங்கைக்கோ அது மிகப்பெரியதொரு தொகையாகும்.

2020 க்கு பிறகு, இலங்கையின் வெளிநாட்டு நாணய நிதி இடைவெளி, சர்வதேச மூலதன சந்தைகளிலிருந்து கடன் பெறக்கூடிய எதுவித சாத்தியங்களுமில்லாதபடியால், கணிசமான அளவுக்கு அதிகரித்து வந்துள்ளது. இவ்வாறான சந்தரப்பங்களில், நாட்டினால் வெளிநாட்டு கடன்களை அடைக்க முடியாதென்பதை ஏற்றுக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடி கடன்களை மறுசீரமைப்பதே ஒரேயொரு புத்திசாலித்தனமான தெரிவாகும். நமது அரசு அதனை செய்ய மறுத்துவிட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடி கடன்களை மறுசீரமைப்பது ஏன் ஒரேயொரு புத்திசாலித்தனமான தெரிவாகும்?

கடன் மீள்கொடுப்பனவு காலஅட்டவணையை மாற்றுவது மற்றும் மீள்கொடுப்பனவை சில ஆண்டுகளுக்கு பிற்போடுவது ஆகியன கடன் மறுசீரமைப்புக்குள் உள்ளடங்கும். இவற்றுடன் கடன் தொகையின் அளவு குறைக்கப்படுவதும் நடைபெறும் (100 மில்லியன் டொலர் கடனில் 10% கழிவுக்கு கடன்வழங்குனர் சம்மதிப்பாராயின் நாம் 90 மில்லியன் டொலர் கடனை மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்). இந்நடவடிக்கைகள் மூலம் கடன் மீள்கொடுப்பனவு சுமையை நாடொன்று குறைப்பதோடு சேர்த்து அரச செலவீனங்களையும் வெளிநாட்டு நாணய வெளிப்போக்கையும் குறைக்க முடியும்.

இலங்கைக்கு கடன்வழங்கிய தரப்புகள் அக்கடனை மறுசீரமைப்பு செய்ய சம்மதிப்பது இழப்புகளை ஏற்படுத்தும். இலங்கையுடன் கடன் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள சம்மதிக்க, அவர்களுடைய கடன் ஒரே தடவையில் மீளச்செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை அவர்கள் எதிர்பார்ப்பர். இவ்வாறான உத்தரவாதம் இலங்கை போன்ற பொது நிதியை சரியாக கையாளாத நாடொன்றிடமிருந்து கிடைப்பது அரிதிலும் அரிது. எவ்வாறாயினும், நாடொன்று சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வருவது, அது தனது பொது நிதியை கவனத்துடன் கையாளும், தனது கடன்களை மீளச்செலுத்தும், எனும் நம்பிக்கையை அதன் மீது அதிகரிக்கும். சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் ஒரு உடன்பாட்டுக்கு வந்த பின், அது எமது பொது நிதி முகாமைத்துவத்தை தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யும். வேறு வகையில் சொல்வதானால், சர்வதேச நாணய நிதியமானது, நாட்டை வரி வருமானம், பாதீட்டு பற்றாக்குறை, மற்றும் பல பருப்பொருளாதார சுட்டிகளில் குறித்ததொரு இலக்கினை அடைய வலியுறுத்துவதோடு அதற்கான சீர்திருத்த முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளும். பொதுவாக இச்சீர்திருத்தங்களுள், வரி மாற்றங்கள், அத்தியாவசியமற்ற அரச செலவீனங்களை குறைத்தல், எரிபொருள் விலை மதிப்பீட்டு சூத்திர அறிமுகம் போன்றன உள்ளடங்கும். இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேச கடன் வழங்குநர்களிடையே (இலங்கைக்கு கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள்) இலங்கையின் கடன் மீள்செலுத்தும் வல்லமை மீதான நம்பிக்கையை அதிகரிக்கச்செய்யும். இவ்வாறு நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம், இலங்கையினால் மேலும் கடன்களை பெற முடிவதோடு, இலங்கையின் கடனை மீளச்செலுத்த இயலாத நிலைமையும் மாற்றமடையும்.

மேலும், ஒரு நாடு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வந்தவுடன், அதன் வெளிநாட்டு நாணய கையிருப்பை வலுப்படுத்த, குறுகிய காலக்கடன் ஒன்று குறித்த நாட்டுக்கு வழங்கப்படும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப்பெறும் இவ்வாறான கடன் நாட்டுக்கு அதிகம் தேவைப்படுகின்ற வெளிநாட்டு நாணய வரத்தை தரும். இது எமது வெளிநாட்டு நாணய பற்றாக்குறையினை குறைத்து, எதுவித தடங்கல்களுமின்றி இறக்குமதிகளுக்குரிய பணத்தினை செலுத்த நம்மை அனுமதிக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வருவது ஒரு பலபடிகளை கொண்ட செயற்பாடு. இலங்கையை பொறுத்த வரை ஏப்ரல் 18 ஆரம்பகட்ட சுற்றுப்பேச்சுவார்த்தைகள் தொடங்கியதைத் தொடர்ந்து, இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை பேணுவதில் தான் கொண்டுள்ள உறுதிப்பாடுகளை குறிப்பிட்டு சர்வதேச நாணய நிதியத்துக்கு கோரிக்கை கடிதமொன்றை எழுத வேண்டும். இதற்கு முன்பாக 2009 மற்றும் 2016 இல் இவ்வாறு எழுதப்பட்ட கோரிக்கை கடிதங்களில், வரிவருமானத்தை அதிகரித்தல், வரிச்சலுகைகளை குறைத்தல், அத்தியாவசியமற்ற அரச செலவீனங்களை குறைத்தல் மற்றும் எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கு விலைச்சூத்திரங்களை அறிமுகப்படுத்தல் போன்ற சீர்திருத்தங்களை  மேற்கொள்ளவிருப்பதாக இலங்கையரசு தெரிவித்திருந்தது. இச்சீர்திருத்தங்களுள் 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் மற்றும் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தம் போன்ற சில சீர்திருத்தங்களே நடைமுறைப்படுத்தப்பட்ட போதும், ஆட்சி மாற்றம் நிகழந்த கையோடு, அவை செயலிழந்து போயின.  ஏனையவை புறக்கணிக்கப்பட்டன; மறக்கப்பட்டன. அரசு 2009 இல் வரிச்சலுகைகளை குறைப்போம் எனக்கொடுத்த வாக்குறுதிக்கு நேர்எதிராக, மூலோபாய அபிவிருத்தி திட்டங்கள் சட்டத்தினடிப்படையில் கணிசமான வரிச்சலுகைகளை வழங்கியது. இவ்வாறு சில சீர்திருத்தங்களுக்கு நேர் எதிரான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறான சர்வதேச நாணய நிதியத்தினால் பரிந்துரைக்கப்படும் சீர்திருத்தங்கள் யாவும் ‘அமைப்பு சீர்திருத்தங்கள்’ எனப்படும். இவை அரசு தொழிற்படும் விதத்தை மாற்றியமைப்பவையாகும். முன்பு குறிப்பிட்டது போல, அச்சீர்திருத்தங்களுள் வரி மாற்றங்கள், வணிக கட்டுப்பாடுகள் தளர்த்தம், நாணயமாற்று தீர்மான வழிமுறைகளில் மாற்றம், எரிபொருள் மற்றும் மின்சார விலைச்சூத்திர பயன்பாடு, மற்றும் பல மாற்றங்கள் உள்ளடங்கும். இவ்வாறான சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி அநேகமாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய ஊழியர் மட்ட அறிக்கையிலும், இலங்கையுடனான உடன்பாடுகள் தொடர்பான சர்வதேச நாணய நிதிய மீளாய்வுகளிலும் வலியுறுத்தப்படும். சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்புரிமை பெற்ற 1950 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. இம்முறை 17 வது தடவையாக உதவியை நாடியுள்ள அதே வேளையில், கடன்களை மறுசீரமைக்க கோருவது இதுவே முதல் தடவையாகும்.

இறக்குமதி கட்டுப்பாடுகள்

2020 மற்றும் 2021 இல் அரசு ஏதேதோ காரணங்களால், கடன்களை மறுசீரமைத்து சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதை தவிர்த்துவிட்டிருந்தது. கடன் மறுசீரமைப்பின் மூலம் வெளிநாட்டு நாணய போக்கினை குறைப்பதற்கு பதில் அரசு, இறக்குமதியை குறைத்து வெளிநாட்டு நாணய போக்கை குறைக்க முனைந்தது.

ஆட்சியின் இடைப்பகுதியில் இவ்வாறான பாதையை தேர்ந்தெடுப்பது மிகவும் ஆபத்தானது. 50% இற்கும் அதிகமான இலங்கையின் இறக்குமதியாக இருப்பவை இடை-மூலப்பொருட்கள், அதாவது எமது உற்பத்திக்கு தேவையான இப்பொருட்களிலேயே எமது உற்பத்தி அதிகளவில் தங்கியுள்ளது. இவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்துவது எமது உற்பத்தித்திறனை குறைத்து ஏற்றுமதியின் அளவை குறைத்து விடும். மீதி இறக்குமதி பொருட்களாக விளங்குபவை பால்மா போன்ற உணவுப்பொருட்கள், கணினிகள் போன்ற இலத்திரனியல் கருவிகள் ஆகும்.எமது அன்றாட பாவனையை கருத்தில் கொண்டால் இவற்றின் இறக்குமதியை நிறுத்துவதும் சாத்தியமற்றதே.

இறக்குமதியை குறைத்து வெளிநாட்டு நாணய பற்றாக்குறையை குறைப்பது கடினமாயிருக்க வேறொரு காரணமும் உள்ளது. 2020 இன் இறுதியிலிருந்து பல பொருட்களின் உலகளாவிய விலைகள் கணிசமான அளவுக்கு அதிகரிக்க தொடங்கின. இந்நிலை சடுதியான கப்பல் கட்டண அதிகரிப்புகளோடு மேலும் மோசமாகியது. இறக்குமதியின் அளவு குறைந்த போதிலும் இறக்குமதி செலவீனங்கள் தொடர்ச்சியாக 2021 இலும் அதிகரித்தது. இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும், இலங்கையின் மிகக்குறைவான வட்டி வீதங்கள் காரணமாக, வணிகங்கள் தேவையான பணத்தினை கடனாகப்பெற்று இறக்குமதியை தொடர்ந்து மேற்கொள்ள கூடியதாயிருந்தது. மேலும் மத்திய வங்கி தொடர்ச்சியாக அரசுக்கு கடன்களை வழங்கி வந்ததால் பணக்கையிருப்பை அது அதிகரித்தது. அதிக பணம் சுற்றோட்டத்தில் விடப்பட்டதால் கொள்வனவும் உற்பத்தியும் பல மடங்காக அதிகரித்தது. முன்பே குறிப்பிட்டது போல, அதிகளவு கொள்வனவு மற்றும் உற்பத்தி செயற்பாடுகள் இறக்குமதியிலேயே தங்கியிருந்தன. இது அரசின் இறக்குமதி செலவீனங்களை குறைக்கும் முயற்சியினை கடினமாக்கி வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தை குறைக்கும் அரசின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

2020 இல் இறக்குமதி விலைப்பட்டியல் குறைப்பிலிருந்தே அரசின் இறக்குமதி விலைப்பட்டியல் குறைப்புக்கான எதிர்பார்ப்பு கிளைத்திருக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இறக்குமதி விலைபட்டியலில் 20% குறைவு, அதாவது 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் குறைவு 2021 இல் ஏற்பட்டிருந்தது.

அரசு இப்போக்கு தொடரும் என எண்ணி, இறக்குமதி விலைப்பட்டியலை குறைப்பதன் மூலம் வெளிநாட்டு நாணய பற்றாக்குறையை கட்டுப்படுத்திவிட முடியும் என மனக்கணக்கு போட்டிருந்தது. இறக்குமதி விலைப்பட்டியலில் ஏற்பட்ட குறைவில் மூன்றில் ஒரு பங்கு குறைவுக்கு காரணம், 2020 இல் எரிபொருள் இறக்குமதி செலவீனங்கள் 1.35 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைவடைந்தமையே ஆகும். இக்குறைவுக்கு காரணம் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைந்தமையும் பெருந்தொற்றினால் நீண்ட காலம் நீடித்திருந்த பொது முடக்கங்களுமே ஆகும். 2021 இல் எரிபொருள் இறக்குமதியில் இலங்கை வெளிநாட்டு நாணயங்களினை சேமிக்க முடியும் என எண்ணுவது முட்டாள்த்தனமாகும். 2019 ஆம் ஆண்டினளவுக்கு கிட்டத்தட்ட நெருங்கியதாக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு எரிபொருள் இறக்குமதி செலவு 2021 இல் அதிகரித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், 2021 இல் அண்ணளவாக 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களால், இறக்குமதிகள் அதிகரித்துள்ளன. இதற்கு உலகளாவிய விலை அதிகரிப்புகள், கப்பல் கட்டண அதிகரிப்புகள், மற்றும் திறன்பேசிகள் மற்றும் கணினி போன்ற நுகர்வோர் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்தமை போன்றவை காரணங்களாய் அமைந்தன. மறுபக்கம் ஏற்றுமதிகள் 2021 இல் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களால் மாத்திரமே அதிகரித்மையால், வெளிநாட்டு நாணய வரத்திலும் பார்க்க வெளியேற்றம் அதிகளவில் நடக்கிறது. முன்பே பார்த்தது போல, எம்மால் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் வெளிநாட்டு நாணய பற்றாக்குறையை நிரப்ப முடியாது.

இது நாட்டுக்கு ஒரேயொரு ஆபத்தான இறுதித்தெரிவையே விட்டு வைத்தது. அதுதான் மீதியுள்ள நாணய கையிருப்பு முற்றாக தீர்ந்து விடும் ஆபத்து காணப்படுகின்ற போதும், அதனை இறக்குமதிக்கும், வெளிநாட்டு கடன் மீள்கொடுப்பனவுக்கும் பயன்படுத்துவது. இலங்கை மத்திய வங்கி அத்தெரிவை கையில் எடுத்தது.

இதன் பலனாக, 2020 ஜனவரியில் 6.5 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இலங்கையின் பயன்படுத்தத்தகு வெளிநாட்டு நாணய கையிருப்பு 2022 மார்ச் மாத இறுதியில், 150 மில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்திருந்தது.

இலங்கையின் பாரிய வெளிநாட்டு கடன்களை கவனத்தில் கொண்டால், எமது வெளிநாட்டு நாணய கையிருப்பை அவற்றின் மீள்கொடுப்பனவுக்கு பயன்படுத்துவது நிச்சயமாக நிலைபேறான தெரிவில்லை. இம்முறை குறுகிய காலத்துக்காவது சரியான விளைவுகளை ஏற்படுத்த, அரசு பாரிய கொள்கை மாற்றங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும்.

இக்கொள்கை மாற்றங்களில் மிகமுக்கிய இரு கொள்கை மாற்றங்கள், உர இறக்குமதித்தடையும் நாணய மாற்று விகிதத்தை மாறாமல் பேணியதும் ஆகும். இந்த இரண்டுமே நிலைமையை இன்னும் மோசமாகவே ஆக்கியது.

உரத்தடை இலங்கையின் உணவு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உணவு பற்றாக்குறைக்கும், விலை அதிகரிப்புக்கும் காரணமாகியது. நிலையான நாணய மாற்று விகிதத்தை பேணியதன் விளைவாக வங்கிகள் டொலருக்கு குறைவான இலங்கை ரூபாவை வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதால் சட்டத்துக்கு புறம்பான வழிகளில் நாணய மாற்றல் நிகழ்வது அதிகரித்தது. மக்கள் அதியுயர் நாணய மாற்று விகிதத்தை வழங்கிய அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகளை தேர்ந்தெடுத்தனர். இதன் காரணமாக வெளிநாடு வாழ் இலங்கையரின் பணங்கள் இலங்கை வங்கி முறைமையினூடு இலங்கைக்கு அனுப்பப்படவில்லை. 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட வெளிநாடு வாழ் இலங்கையரின் பணம் அண்ணளவாக 2 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது. இது வெளிநாட்டு நாணய கையிருப்பின் தேய்வுக்கு மேலும் வழிவகுத்தது.

2022 இன் ஆரம்பத்தில் இலங்கை அரசும் இலங்கை மத்திய வங்கியும் எஞ்சியுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பை வைத்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதா இல்லை வெளிநாட்டு கடன்களை மீளச்செலுத்துவதா என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலையிலிருந்தன. ஐனவரியில் இலங்கை மத்திய வங்கி நம்மால் தொடர்ந்து வெளிநாட்டு கடன்களை மீளச்செலுத்த முடியுமென பிடிவாதம் பிடித்து, 500 மில்லியன் அமெரிக்கடொலர்கள் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பத்திரக்கடன்களை மீளச்செலுத்த முனைந்தது.

“இன்று முதிர்வடைந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பத்திரக்கடனை இலங்கை மீளச்செலுத்தியது.” முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால், 2022 ஜனவரி 18 அன்று

@an_cabraal should be arrested & held accountable for this mess.#lka #SriLankaCrisis #GoHomeRajapakshas #GoHomeGota2022 #SriLankaEconomicCrisis pic.twitter.com/lOBM4Azr57

— Seelan (@Seelan92) April 14, 2022

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்புகள் மற்றும் வெளிநாட்டு கடன் மீள்கொடுப்பனவுகள்

மாதம்பயன்படுத்தத்தகு வெளிநாட்டு நாணயக்கையிருப்புஅரச வெளிநாட்டு கடன் மீள்கொடுப்பனவுகள்
2019 டிசம்பர்6616.4 மில்லியன் அமெரிக்க டொலர்4290.7 மில்லியன் அமெரிக்க டொலர்
2020 டிசம்பர்5185.1 மில்லியன் அமெரிக்க டொலர்4091.8 மில்லியன் அமெரிக்க டொலர்
2021 டிசம்பர்1203.0 மில்லியன் அமெரிக்க டொலர்4671.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு நாணயக்கையிருப்புகள் தீர்ந்துவிட, எரிபொருள் இறக்குமதிக்கு பணம் கொடுப்பனவு செய்யமுடியாது அரசு போராடியதால், எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இலங்கையின் மின் வழங்கலில் கணிசமான அளவு எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், எரிபொருள் பற்றாக்குறை மோசமாக, இலங்கை மின்சார சபை தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மூலம்: இலங்கை மத்தியவங்கி மற்றும் இலங்கை வெளிவளத்துறை திணைக்களம் போன்றவற்றிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆசிரியரால் தொகுக்கப்பட்டது.

அடுத்து என்ன?

வெளிநாட்டு நாணயக்கையிருப்பு கிட்டத்தட்ட பூச்சியமாகிய பின் இலங்கை வெளிநாட்டு நாணயக்கடன்களை தன்னால் தற்போதைக்கு மீளச்செலுத்த முடியாது என அறிவித்தது. இவ்வறிவிப்பு தற்போதுள்ள நிலையை மோசமாக்க போவதும் இல்லை, முன்னேற்றப்போவதும் இல்லை. வரலாறு காணாத இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நீண்ட செயல்முறையில் இது ஒரு முக்கியமான முதல் அடி மாத்திரமே. பற்றாக்குறைகள் சிலகாலத்துக்கு தொடரும். விலைகள் உச்சத்திலேயே இருக்கும். இம்முற்கூட்டிய அறிவிப்பு எமது பொருளாதாரத்தை முற்றாக அதளபாதாளத்துக்கு செல்லவிடாது காப்பதுடன், இடைப்பட்ட காலத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான பணம் கையில் இருப்பதையும் உறுதி செய்து இறுதியில் முழுமையான இருளில் நாம் மூழ்கவிடாது தடுக்கும்.

ஏப்ரல் 18 ஆந்திகதி இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும், இதனால் இலங்கைக்கு அநேகமாக விரிவான நிதி உதவி (EFF) மூலம் நிதி ஆதரவு கிடைக்கப்பெறும். இது இடைப்பட்ட காலத்தில் இறக்குமதிக்கு தேவையான வெளிநாட்டு பணத்தினை எமக்கு வழங்கும். கடன்களை மறுசீரமைத்தல், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தல், மற்றும் அரச செலவீனங்களை குறைத்தல் ஆகியவை தொடர்பில் உறுதிமொழிகளை வழங்குவதின் மூலம் இலங்கையினால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யவும் சமூக நலன்களை வழங்கவும் தேவையான வெளிநாட்டு கடன்களை உலக வங்கி மற்றும் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள கூடியதாய் இருக்கும். எவ்வாறாயினும் இதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதுவும் இப்போது எம்மிடமுள்ள மிகக்குறைவான வெளிநாட்டு நாணய கையிருப்பின் காரணமாக பற்றாக்குறைகள் சில காலத்திற்கு தொடரவே வாய்ப்புள்ளது. எனவே இடைவெளிநிரப்பும் இந்நிதி வழங்கலை விரைவுபடுத்துவது ஒன்றே பற்றாக்குறைகளை தவிர்க்கவும் வலிவு குன்றிய மக்களுக்கு ஆதரவு வழங்கவும் உள்ள ஒரேயொரு வழி.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு என்றால் என்ன?, அது எவ்வாறு செயற்படுத்தப்படும் என்பது நீண்ட கதை. அவை எமது அடுத்த ஆய்வுக்கட்டுரையில் விளக்கப்படும்.

இந்தக் கட்டுரைக்கான தரவு

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்புகள் மற்றும் வெளிநாட்டு கடன் மீள்கொடுப்பனவுகள்

மாதம்பயன்படுத்தத்தகு வெளிநாட்டு நாணயக்கையிருப்புஅரச வெளிநாட்டு கடன் மீள்கொடுப்பனவுகள்
2019 டிசம்பர்6616.4 மில்லியன் அமெரிக்க டொலர்4290.7 மில்லியன் அமெரிக்க டொலர்
2020 டிசம்பர்5185.1 மில்லியன் அமெரிக்க டொலர்4091.8 மில்லியன் அமெரிக்க டொலர்
2021 டிசம்பர்1203.0 மில்லியன் அமெரிக்க டொலர்4671.5 மில்லியன் அமெரிக்க டொலர்