Analysis
கோட்டாகோகமவின் மீதான தாக்குதலும் பின்விளைவும்
May 12, 2022
தீமூட்டுதல்கள், மத்திய வங்கி ஆளுநரின் பதவி விலகல் மிரட்டல்கள், பிரதமர் பதவி விலகல், குழப்பங்களுக்கு மத்தியில் புதிய பிரதமர் பதவியேற்பு என இந்த கிழமை முழுவதும் நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லை.

மே 9 திங்கள் ராஜபக்ச ஆதரவாளர்கள் அலரி மாளிகையில் ஒன்று கூடுவதுடன் இந்த கிழமை தொடங்கியது. ஒன்றுகூடிய இவ் ஆதரவாளர்கள் முதலில் மைனாகோகம போராட்டதளத்தை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து கோட்டகோகம தளத்தில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

எமது முன்னைய கட்டுரையில், இந்நிகழ்வின் ஒட்டுமொத்த காலவரிசையினையும் அதில் தொடர்புபட்ட பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்களை பற்றியும் பொலிசார் எவ்வாறு செயற்பட்டனர் என்பதை பற்றியும் பார்த்திருந்தோம்.

இந்த கட்டுரை தாக்குதல்களின் பின்னரான விளைவுகளை பற்றி ஆராய்கிறது. ஒரே நேரத்தில் பல நிகழ்வுகள் நடந்தேறியிருந்தபடியால், இலகுவாக விளங்கிக்கொள்ள பல நிகழ்வுகளை ஒன்றிணைத்து இங்கு குறிப்பிட்டுள்ளோம். இங்குள்ள ஒவ்வொரு தலைப்புகளையும் விரிவாக்கி அவற்றினை பாருங்கள்.

மாலை 2 மணி: நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் கோட்டாகோகம மீளுருவாக்கம்

பி.ப 1.50 மணியளவில், கோட்டாகோகம போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் ஒரு மனித சங்கிலியை வழக்கறிஞர்கள் உண்டாக்கி விட்டிருந்தனர். 2 மணியளவில், மேற்கு மாகாணம் முழுமைக்கும் ஊரடங்கொன்று பிறப்பிக்கப்பட்டது. 2.36 மணியளவில் இவ்வூரடங்கு நாடு முழுமைக்கும் விரிவாக்கப்பட்டது.

ஊரடங்குக்கு மத்தியிலும் கோட்டாகோகமவில் மக்கள் கூட்டம் சீராக அதிகரிக்க தொடங்கியது. போராட்டக்காரர்கள் போராட்டத்தளத்தினை விரைவாக மீளக்கட்டமைக்க உதவியிருந்தனர்.

ராஜபக்ச ஆதரவு கும்பலால் அழிக்கப்பட்டிருந்த கூடாரங்களை மீளக்கட்டமைக்க போராட்டக்காரர்கள் உதவுகின்றனர். படம்: ஆயிஷா நாஸீம்

அங்கு பிற்பகல் 4 மணிவரை போராட்டக்காரர்களுக்கும் அலரி மாளிகைக்கும் இடையான பகுதியை தடுத்து வைத்திருக்கும் விதமாக சிறப்பு அதிரடிப்படையினரின் நடமாட்டம் அதிகமாய் இருந்தது. பிரதமரின் பதவி விலகல் செய்தி வந்து சிறிது நேரத்தில், அவர்கள் கடற்கரையினை நோக்கி கலைந்து விட்டிருந்தனர்.

கோட்டாகோகமவில் கூட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டிருருந்தது. தாதியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் என அனைவரும் தமது வேலைத்தளங்களில் இருந்து நேரடியாக சீருடையுடன் வந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நின்றனர்.

அன்றைய நாளின் தொடக்கத்தில் நடந்த அரச ஆதரவு வன்முறையின் காரணமாக, மக்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கினர் . வீதியில் பயணிக்கும் வாகனங்களில் அலரி மாளிகைக்கு காலை கொண்டு வரப்பட்டிருந்த ‘பேபி மைனாக்கள்’ - ராஜபக்ச ஆதரவு குழுவினர் யாராவது உள்ளனரா என குழுக்குழுவாக தேடத்தொடங்கினர்.

ராஜபக்ச ஆதரவாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டனர், சில நேரங்களில் ஆடைகள் களையப்பட்டு உள்ளாடையுடன் அலைய விடப்பட்டனர். இவ்வாறு அரை நிர்வாணப்படுத்தப்பட்டவர்களுள் பொதுஜன பெரமுண சார்பு கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் சபையின் தலைவர் மகிந்த கஹந்தகமவும் ஒருவர்.

ராஜபக்ச ஆதரவாளர்கள் மத்திய கொழும்பிலுள்ள பெய்ரா ஏரியிலும் தூக்கி வீசப்பட்டனர்.

மேற்படி காணொளி பல தடவைகள் பகிரப்பட்டிருந்தது, இது வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட ஏனைய காணொளிகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது, இருப்பினும் இதன் மூலத்தை அறிய முடியவில்லை. மேற்படி நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் பெய்ரா ஏரியானது கூகிள் வரைபடத்தில் ‘பையா நாப்பு வெவ’ என மறுபெயரிடப்பட்டது. (ராஜபக்ச ஆதரவாளர்களை குறிக்க பயன்படுத்தப்பட்ட பையா எனும் சொல் ஒரு இழிவான சொல்லாகும்)

கூகிள் வரைபடத்தில் பையா நாப்பு வெவ (பையாக்கள் குளிப்பாட்டப்பட்ட ஏரி)

வட்டரெக்க திறந்தவெளி சிறை முகாமில் இருந்து கொண்டு வரப்பட்டு தாம் தாக்குதல்களில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறும் சிலரது காணொளிகள் பரவத்தொடங்கின. அவர்கள் தாம் ‘ராமநாயக்கா’ எனும் சிறை கண்காணிப்பாளரால் கூட்டி வரப்பட்டதாக கூறினர். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனிய மேற்படி குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவர்கள் கட்டட பணிகளினை முடித்துவிட்டு திரும்பி அழைத்து வரப்படும் போது மாலபே பகுதியில் வைத்து தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

வாகனங்கள் மீதான தாக்குதல்கள்

மேற்படி ஆதரவாளர்களை ஏற்றி வந்ததாக கூறப்பட்ட சில வாகனங்களும் பெய்ரா ஏரியினுள் கவிழ்க்கப்பட்டன.

மேற்படி வாகனங்களுள் சில ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு சொந்தமானவையென போராட்டக்காரர்கள் நம்பினர். எஸ்யூவி ஒன்றினை மக்கள் திரள் பெய்ரா ஏரியினுள் கவிழ்ப்பதை டெய்லி மிரர் நிருபர் இவ்வாறு படம் பிடித்திருந்தார்:

A vehicle allegedly belonging to former Minister Johnston Fernando has been pushed in to the Beira lake. pic.twitter.com/q2FHMYfdXQ

— DailyMirror (@Dailymirror_SL) May 9, 2022

மக்கள் குழுக்கள் விரைவாக கொழும்பிலிருந்து வெளிச்செல்லும் பிரதான வீதிகளில் தம்மை நிலைநிறுத்தி கொண்டு ராஜபக்ச ஆதரவாளர்கள் ஒருத்தரும் கொழும்பிலிருந்து திரும்பி செல்லாதவாறு பேரூந்துகளை சோதனை செய்யத்தொடங்கினர். (இக்கட்டுரையினை எழுதும் ஊடகவியலாளர்களில் இருவர் கோட்டையிலிருந்து தமது வீட்டுக்கு செல்லவதற்கிடையில் ஆறு தடவைகள் நிறுத்தி சோதனை செய்யப்பட்டனர்.) எடுத்துக்காட்டாக மஹரகமவில் நடந்த நிகழ்வு (இப்படம் நியூஸ் வயரினால் உறுதிப்படுத்தப்பட்டது, இருப்பினும் இதன் மூலத்தினை உறுதியாக கண்டறிய முடியவில்லை):

மேற்படி படத்தினை டுவிட் செய்திருந்த ஒருவர் மேற்படி சனத்திரள் இரும்பு கம்பிகளையும் ஹொக்கி மட்டைகளையும் வைத்திருந்ததாக குறிப்பிட்டார்.

கொழும்பிலும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் பல பேரூந்துகளும் பிற வாகனங்களும் அடித்து உடைத்து தீக்கிரையாக்கப்பட்டன.

பக்ஹோ பொறி பேரூந்தொன்றை சிதைக்கும் இந்த காணொளி கடவத்தையில் (பான் ஏசியா வங்கி மற்றும் லக்கி சைக்கிள் சென்ரர் அருகே) எடுக்கப்பட்டது.

இக்குழுக்களில் ஏனையோர் அதிவேக நெடுஞ்சாலை வாயில்களிலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி செல்லும் வீதிகளிலும் காணப்பட்டனர். அவர்களை காணொளியில் பதிவு செய்பவர்கள் அனைவரும் மிரட்டப்பட்டனர்.

படம்: @kavinthans, via Twitter

பாராளுமன்ற உறுப்பினரின் மரணம்

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் வாகனம் நிட்டம்புவவில் சுற்றி வளைக்கப்பட்டது. பாரளுமன்ற உறுப்பினரோ அல்லது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரோ போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது, இச்சம்பவத்தில் ஒரு போராட்டக்காரர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர், அதன் பிறகு அத்துக்கோரளவும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவரது மரணம் பற்றி பல்வேறு வதந்திகள் உலாவருகின்றன. அவர் போராட்டக்காரர்களை சுட்டுவிட்டு பின்பு அங்கிருந்து தப்பிச்சென்று  தன்னைதானே சுட்டக்கொண்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். வேறு சிலரோ கோபமுற்ற போராட்டக்காரர்களிடம் அடிவாங்கி அதனால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிர் இழந்ததாக தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாவலரின் உடல்களின் தணிக்கை செய்யப்படாத காணொளிகளை பார்த்ததில், பலராலும் கூறப்பட்ட அவர்களது பரபரப்பான தற்கொலை கதை தவறானதென தெரிகிறது.

வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற அவர்களது உடற்கூறாய்வு அறிக்கை இன்றைய (13) லங்காதீப பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி அமரகீர்த்தி அத்துக்கோரள தாக்குதல்களினாலேயே இறந்ததாகவும் அவரது உடலில் குண்டுதுளைத்த காயங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் எமக்கு தெரியவருகிறது.

வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையினை நாம் தொடர்பு கொண்டு இச்செய்தியின் உண்மை தன்மையை பற்றி வினாவிய போது அவர்கள் அது உண்மையே என உறுதிப்படுத்தியிருந்தனர்.

மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான  குமார வெல்கமவும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்படிருந்தார். அவரது வாகனம் மாகும்புரவில் வைத்து எவரையோ தவறுதலாக மோதியிருக்கின்றது, அதில் கோபமடைந்த கும்பல் அவர் யாரென தெரியாமல் அவரை தாக்கிவிட்டதாக அவரது சகோதரர் நளின் வெல்கம தெரிவித்தார்.

தீக்கிரையாக்கப்பட்ட மாளிகைகளும் விடுதிகளும்

இச்சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த அதேவேளையில், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களது வீடுகளும் ஏனைய உடைமைகளும் நாள் முழுதும் (இரவில் மிக அதிகமாய்) தீக்கிரையாக்கப்பட்டு வந்தன. இந்த தாக்குதல்கள் யாவும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளையும் ஏனைய ராஜபக்ச ஆதரவாளர்களையும் முதன்மை இலக்காக கொண்டு நாடு முழுமைக்கும் பரவலாக இடம்பெற்றன. எமது பட்டியல்களில் குறைந்தது இவ்வாறான 75 உடைமைகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் முக்கியமானவை சில இதோ:

 1. ராஜபக்சவின் முன்னோடியான டி.ஏ.ராஜபக்சவின் சிலை தங்காலையில் உடைத்து நொறுக்கப்பட்டது.
 2. மெதமுலானவில் உள்ள டி.ஏ.ராஜபக்சவின் நினைவகம்
 3. குருணாகல் மற்றும் மெதமுலானவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் வீடுகள்
 4. மல்வானயில் உள்ள பசில் ராஜபக்சவின் வீடு
 5. சமல் ராஜபக்சவின் வீடு
 6. கண்டியில் உள்ள கெஹெலிய ரம்புக்வெலவின் வீடு
 7. குருணாகல் மற்றும் விக்ரமசிங்கபுரவில் உள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீடுகள்
 8. நீர்கொழும்பில் உள்ள நிமல் லன்சாவின் வீடு
 9. நீர்கொழும்பில் உள்ள அவென்றா கார்டன் விடுதி மற்றும் கிராண்டீசா விடுதி: இவையிரண்டிலும் நிமல் லன்சா பங்குதாரர் எனக்கூறப்படுகிறது.
 10. ஏறாவூரில் உள்ள இலங்கை முஸ்லீம் காங்கிரசின் பாரளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் அலுவலகம் [1]
 11. புத்தளத்தில் உள்ள அலி சப்ரி ரஹீமின் வீடு [1]
 12. இவற்றை எமது போராட்ட கண்காணிப்பியில் நாம் இணைக்கவுள்ளோம், அதற்கு முன்பே நீங்கள் மூல தரவினை பார்க்க விரும்பின், தரவுகள் இதோ.

அலரி மாளிகை மீதான தாக்குதலும் மகிந்த ராஜபக்ச பதவி விலகலும்

எமது முந்தைய கட்டுரையில் ராஜபக்ச ஆதரவு தாக்குதல்தாரிகள் எவ்வாறு அலரி மாளிகையில் வைத்து அணி திரட்டப்பட்டனர் என பார்த்திருந்தோம்.

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் திகதியிடப்படாத பதவி விலகல் கடிதத்தின் பலனாக மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பான வதந்திகள் இவ்வேளையில் அனைவருக்கும் தெரிந்த விடயமாகிவிட்டது.

மகிந்த ராஜபக்சவின் திகதியிடப்படாத பதவி விலகல் கடிதம். படம்: Newswire.lk

Roar.lk பஞ்சிகாவத்தையில் மக்கள் பாற்சோறு பொங்கும் படங்களை எடுத்திருந்தது.

மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையிலிருந்து திருகோணமலை கடற்படைத்தளத்துக்கு வான் வழியாக கொண்டு வரப்பட்டதாக வதந்திகள் பரவியவுடன், அர்ஜூன் ரவியினது காணொளியில் உள்ளது போன்று போராட்டக்காரர்கள் படைத்தளத்துக்கு வெளியே கூடிவிட்டனர்.

திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

VIDEO - @ArjunRavi96 pic.twitter.com/zhu1crH7MK

— Vithushan Jeyachandran (@imjvithu) May 10, 2022

இதே நேரத்தில், பெய்ரா ஏரியில் குறிப்பாக அலரி மாளிகையின் பின்புற வாயிலுக்கு அண்மையில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு தள்ளிவிடப்பட்டன. இந்தியாவிலிருந்து செயற்படும் வியோன் செய்தி நிறுவனத்தின் சர்வதேச நிருபர் தசுனி அத்தவுதா மேற்படி நிகழ்வின் காணொளியினை (அவரது தனிப்பட்ட மற்றும் நியூஸ் வயரின் டுவிட்டர் கணக்கில்) பதிவிட்டிருந்தார்.

#SriLankaInChaos - Monks watch on as unrest erupts at the Beire Lake entrance to Temple Trees.

About three vehicles set ablaze and pushed to the Beire Lake.

Protests continue despite an islandwide curfew. #SriLankaProtests #SriLankaEconomicCrisis pic.twitter.com/elzInd6iY3

— Dasuni Athauda (@AthaudaDasuni) May 9, 2022

நியூஸ் வயரின் காணொளியில் அலரி மாளிகையின் பிற்புறத்தே நெருப்புக்கு அருகே நிற்பது தெரிகிறது. அது முன்பு எரிக்கப்பட்ட வாகனங்களில் ஒன்றா இல்லாவிடின் அலரி மாளிகைக்குள் இருந்த வேறொரு வாகனமா என்று எம்மால் உறுதியாக கூறமுடியவில்லை; வேறொரு வாகனம் போன்றே தெரிகிறது. ஆனால் ஒன்று, யாரோ அலரி மாளிகையின் பின்புற வாயிலுக்குள்ளே பேரூந்தொன்றை நுழைக்க முற்பட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் எம்மால் உறுதியாக கூறமுடியும்.

Tense situation near Temple Trees : Police fire tear gas to disperse protestors pic.twitter.com/8wPhER5TFP

— NewsWire 🇱🇰 (@NewsWireLK) May 9, 2022

பல்வேறு நிகழ்வுகள் நடந்ததால் கால ஒழுங்கு இங்கு சற்று தெளிவற்று இருக்கிறது. போராட்டக்காரர்கள் அலரி மாளிகையினை முன் மற்றும் பின்புறமென இருபுறமும் இருந்து தாக்கியுள்ளனர். யாரோ ஒருவர் அலரி மாளிகையின் உள்ளிருந்த வாகனமொன்றுக்கு தீ வைத்துள்ளனர். அங்கிருந்த கும்பல்கள் மீது பல தடவைகள் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

மாலை 6.30 மணிக்கு அலரி மாளிகையின் பின்புறம் கும்பல்கள் இருந்தது எமக்கு தெரியும். இரவு 8 மணியளவில் பாரிய மக்கள் கூட்டம் அலரி மாளிகையின் வெளியே இரு புறமும் கூடி, இரு புற வாயில்களையும் தாக்கத்தொடங்கியது. போராட்டக்காரர்கள் வீதி தடுப்புகளையும் பயன்படுத்தி வாயில்களை தகர்க்க முற்பட்டனர் என்பது காணொளியில் தெரிகிறது.

இரவு 8.25 மணிக்கு எடுக்கப்பட்ட காணொளியில் மக்கள் கூட்டம் அதே வாயில்களை தகர்த்து உள்ளே செல்வதை காண முடிகிறது.

Watch : Protestors break into Temple Trees by ramming into the gate. #lka #SriLanka pic.twitter.com/adP3m91vVV

— MDWLive! SriLanka 🇱🇰 (@MDWLiveSriLanka) May 9, 2022

அந்நேரத்தில் களத்திலிருந்து நிலவரங்களை பதிவிட்டுக் கொண்டிருந்த டெய்லி மிரரின் நிருபர் களனி குமாரசிங்கவே மேற்படி நிகழ்வுகள் நடந்த நம்பகமான நேரங்களை உறுதிப்படுத்தியவர் ஆவார்.

Seeing very very disturbing scenes here at the Temple Trees protest. Young men are equipped with makeshift batons, steel rods, sharpening various objects things against walls. This is their response to reports that an STF attack is imminent. If you are coming out here, take care

— Kalani Kumarasinghe (@KalaniWrites) May 9, 2022

அலரிமாளிகையின் காலி வீதியிலமைந்த வாயிலினை நோக்கி மற்றொரு வாகனம் தீயிலிடப்பட்டது.

A vehicle inside the Temple Trees compound has been set on fire. Some protestors here say that a truck was set alight by persons inside the compound #SriLanka #lka pic.twitter.com/gTh0k6HLGO

— Kalani Kumarasinghe (@KalaniWrites) May 9, 2022

இரவு 11.30 மணியளவில், பிரதமரின் பதவி விலகலை உறுதிப்படுத்தும் அரசாணையை செய்தித்தளங்கள் வெளியிட்டன.

மே 10: சுடும் அதிகாரமும், ஜனாதிபதி உரையும்

திங்கட்கிழமை நடந்த கலவரங்களின் போது ‘சட்ட ஒழுங்கை’ ஏன் பேண முடியாமல் போனது என்பது தொடர்பில் விளக்கமளிக்க இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வரவழைக்கப்பட்டனர்.

மேற்கு மாகண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பட்டப்பகலில் தாக்கப்பட்டார். இதன் விளைவாக இரண்டு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முதல் நாள் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு கோட்டை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

“... மேற்படி சந்தேகநபர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடியமை, அரச அதிகாரியொருவரை கலவரமொன்றை அடக்கும் போது தாக்கவோ தடுக்கவோ செய்தல், பொதுமக்களை கலவரம் செய்ய தூண்டுதல், சட்ட விரோத ஒன்றுகூட ஆட்களுக்கு இடமளித்தல், வேண்டுமென்றே நபர்களை காயப்படுத்தல், ஆபத்தான ஆயுத பயன்பாடு, உடலில் கடுமையான தீங்கை ஏற்ப்டுத்தல், உள்நோக்கத்துடன் தீவிர காயங்களை உண்டாக்கல், முறையற்ற தடங்கலை உண்டாக்கல், சித்திரவதை, பெண்கள் மீதான தாக்குதல், குற்றஞ்செய்ய தூண்டல், தவறான நடத்தை, மற்றும் மிரட்டல் போன்ற குற்றங்களை புரிந்ததற்காக தண்டிக்கத்தக்கவர்கள்.”

இரவு 7 மணியளவில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமால் குணரத்ன, பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் மற்றும் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நிகழ்த்துமாறு இராணுவத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

பிரதமர் பதவி விலகியதன் காரணமாக அமைச்சரவை (மற்றும் அமைச்சின் செயலாளர்கள்) கலைக்கப்பட்டுவிட்டதை பல வழக்கறிஞர்கள் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

When PM resigns, the Cabinet is dissolved.

There are no Ministries.

The sole executive now is the President.

The commander of the armed forces is the President.

So, if at all, it is the President who can order the armed forces.

— 𝗡.𝗞.𝗔𝘀𝗵𝗼𝗸𝗯𝗵𝗮𝗿𝗮𝗻 (@nkashokbharan) May 10, 2022

சட்ட நிபுணரான தினேஷா சமரரத்ன இதுவரை நடந்திராத நிகழ்வாக மேற்படி நிகழ்வை குறிப்பிட்டதுடன், பிரதமர் ஒருவர் பதவி விலகும் போதே அமைச்சரவையும் கலைக்கப்பட்டு விடும் அத்துடன் அதன் பிறகு  அமைச்சரவை செயலாளர்கள் தொடர்ந்தும் செயற்பட அரசியலமைப்பில் எதுவித ஏற்பாடுகளும் இல்லை என்பதையும் குறிப்பிட்டார். அத்துடன் செயலாளர்களால் பிறப்பிக்கப்படும் எதுவித ஆணைகளுக்கோ மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கோ எதுவித சட்ட அடிப்படையும் இல்லை எனவும் எம்முடன் உரையாடுகையில் அவர் குறிப்பிட்டார்.

அதே வேளை கடந்த சில நாட்களாக இராணுவ வாகனங்கள் கொழும்பு முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த இராணுவ வாகன அணி தியத்த உயன சந்திக்கு அண்மையில் பதிவு செய்யப்பட்டது.

மே 11: இரண்டு உரைகள்

புதன்கிழமை மாலை 3.30 மணியளவில், மூன்று அமைச்சுகளின் (பாதுகாப்பு, பொதுப்பாதுகாப்பு, மற்றும் நிதி) செயலாளர்கள் மீள பணியமர்த்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தது.

மாலை 4 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இலங்கை இரண்டு கிழமைகளுக்குள் அரசியல் நிலைத்தன்மையை அடையாவிடின் தனது பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்தார். அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் இன்றி கடன் மறுசீரமைப்புகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளை [2] மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மே 9 தாக்குதலில் காயமடைந்த போராட்டக்காரர்கள் மீண்டும் காலி முகத்திடலுக்கு வருகை தந்து தடுப்புகளுக்கருகில் இருந்த மேடையில் நிற்றல். படம்: அமலினி டி சாய்ரா

மாலை 6 மணிக்கு வன்முறைகளை தடுக்க துப்பாக்கிச்சூடு நிகழ்த்தவும் தேவையான பலத்தை பயன்படுத்தவும் முப்படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு ஆணை வழங்கியது.

இரவு 9 மணியளவில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச 10 நிமிட உரையொன்றை நிகழ்த்தினார். அவ்வுரையில் போராட்டக்காரர்களை கலகக்காரர்கள் மற்றும் பிரச்சனை செய்பவர்கள் என குறிப்பிட்டார். கோட்டாகோகம மற்றும் மைனாகோம ஆகியவற்றின் மீதான தாக்குதல்களை கண்டித்த ஜனாதிபதி அவர்களது பெயர்களை அதன் பிறகு குறிப்பிடாது தவிர்த்தார்.

ஒரு கிழமைக்குள் புதிய பிரதமரையும் அமைச்சரவையும் நியமிப்பதாகவும், பொருளாதார நிலைத்தன்மை வந்தவுடன் பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தசட்டத்தை மீள செயல்படுத்துவதாகவும், நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி பதவியினை நீக்குவதற்கான பேச்சுக்களை தொடங்குவதாகவும் மேலும் அவர் வாக்களித்தார்.

பிரச்சினை விளைவிப்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு முப்படைகளுக்கும் பொலிசாருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததன் மூலம் முன்பு பொதுச்சொத்துக்களை திருடுவதில் அல்லது பிறருக்கு தீங்கு விளைவிப்பதில் தொடர்புடையவர்கள் மீது துப்பாக்கச்சூடு நடாத்த வழங்கப்பட்ட ஆணைகளை இப்பேச்சில் உறுதிப்படுத்தினார்.

மே 12: உடைந்த நாற்காலிக்காய் உருவான சண்டை

காலை 9.18: ‘மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்’ புதிய அரசு மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ச டுவிட்டுக்களை இட்டிருந்தார்.

1/4
Steps will be taken to form a new gov to prevent the country falling into anarchy & to maintain the affairs of the state that have come to a halt.

A PM who commands majority in Parliament & is able to secure the confidence of the people will be appointed within this week.

— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 12, 2022

மாலை 2 மணியளவில், 13 இலங்கை பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் மீது வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது. இத்தடை விதிக்கப்பட்டவர்களுள் மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மற்றும் மேல்மாகண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரும் உள்ளடங்குவர்.

மாலை 3 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நான்கு முன்னிபந்தனைகளை விதித்து அவற்றை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால் தான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளதாக ஒரு வெளிப்படையான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். அம் முன்னிபந்தனைகள் பின்வருமாறு, ஜனாதிபதி பதவியிலிருந்து கோத்தபாய ராஜபக்ச பதவி விலக ஒரு காலக்கெடுவினை ஒத்துக்கொள்ளுதல், பத்தொன்பதாம் அரசியலமைப்பு திருத்தத்தினை உடனடியாக மீள செயற்படுத்தல், இருப்பதோராவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை கொண்டு வந்து நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி பதவியினை ஒழித்தல், பாராளுமன்ற தேர்தலை வைப்பதற்கான திகதியொன்றுக்கு ஒத்துக்கொள்ளல்.

மாலை 6.30: ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இலங்கை வரலாற்றில் அதிக தடவைகள் (இற்றை வரை ஆறு தடவைகள்) பிரதமராக பதவியேற்றவர் என்ற சாதனையை அவர் தொடர்ந்தும் தக்க வைத்து கொண்டுள்ளார். [3]

படம்_:_ ஷாதியா ஜமால்தீன்

பலிகள்

மைனாகோகம மற்றும் கோட்டாகோகமவில் போராடிய பல போராட்டக்காரர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தனர். இலங்கை தேசிய வைத்தியசாலையின் (NHSL) மருத்துவர் ஒருவரும் பயிற்சி மருத்துவர் ஒருவரும் போரட்டகளத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தடுப்பதற்காக வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவின் வாயில் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின் காரணமாக மூடப்பட்டதாக எம்மிடம் தெரிவித்தனர். அதன் பின் வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சையளிக்க போராட்டம் நடந்த இடத்துக்கே சென்றனர், இறுதியில் போராட்டக்காரர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்படனர்.

தாக்குதல்களின் பின் மொத்தமாக 232 பேர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர், அவர்களில் 217 பேர் இலங்கை தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

 • பிடரியில் பலத்த அடி வாங்கிய அனுரங்க அறுவைசிகிச்சைக்கு உட்பட்டு தேறி வருகிறார், இருப்பினும் அவரது இடது கை தொடர்ந்தும் செயலிழந்தே காணப்படுகிறது.
 • ராஜபக்ச ஆதரவாளர்களால் தெருவில் இழுத்து செல்லப்பட்ட விஷ்வ சிகிச்சைக்குட்பட்டு மீண்டும் போராட்டக்களத்துக்கு திரும்பியுள்ளார்.
 • தாக்குதலுக்குள்ளாகி தனது படக்கருவியை இழந்த படக்காரர் அகில இயன்மருத்துவ சிகிச்சை மூலம் தேறி வருகிறார்.

இவர்கள் நாம் அறிந்த சில போராட்டக்காரர்கள் மாத்திரமே, மேலும் பலரும் சிகிச்சை பெற்று மீண்டும் காலி முகத்திடலுக்கு திரும்பியுள்ளனர்.

மே 10 வழங்கப்பட்ட பொலிஸ் அறிக்கையின்படி 88 வாகனங்களும் 103 வீடுகளும் சேதமடைந்தோ தீக்கிரையாகியோ உள்ளன.

எட்டு பேர் தமது உயிரை இழந்தனர்:

 1. அமரகீர்த்தி அத்துக்கோரள - நிட்டம்புவவில் தனது மகிழுந்தை வழிமறித்த மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரை படுகாயத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த பொலநறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர் தஞ்சம் புகுந்த அருகிலுள்ள கட்டிடமொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
 2. அமரகீர்த்தி அத்துக்கோரளவின் பாதுகாவலர் போலீஸ் சார்ஜென்ட் அஹனகம விதாரணலாகே ஜயட்ட குணவர்தன
 3. ஹர்ச நதீசான் ஜயவீர - நிட்டம்புவ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.
 4. ஏ.வி சரத் குமார - இமடுவ பிரதேச சபையின் தலைவர் அவரது வீட்டில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தார்.
 5. மொஹமட் நஃப்ரிஸ் - வீரகெட்டிய பிரதேச சபைத்தலைவர் வீட்டுக்கருகில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
 6. சுகத் ஜானக்க - வீரகெட்டிய பிரதேச சபைத்தலைவர் வீட்டுக்கருகில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
 7. அலரி மாளிகையின் முன் கூடிய மக்கள் கூட்டத்தை கலைக்க வீசப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுகள் வெடிப்பின் போது மாரடைப்பால் துணை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார்.
 8. பிரியந்த குமார - நீர்கொழும்பில் உள்ள ஒரு முன்னணி விடுதியின் மீதான தாக்குதலின் போது உயிரிழந்தார்.

இக்கட்டுரையின் ஆக்கத்துக்கு பங்களித்த காணொளிகள் மற்றும் தகவல்களை வழங்கிய நிருபர்கள் (மிக முக்கியமாக டெய்லி மிரர் மற்றும் நியூஸ் வயர்), காணொளிகளை பதிவு செய்தவர்கள், எம்மை தொடர்பு கொண்டு தகவலளித்தோர், #AttackonGGG கொத்துக்குறி மூலம் டுவிட்டரில் தகவல்களை தந்துதவியோர் என அனைவருக்கும் எமது நன்றிகள். உடனடி தகவல் பதிவுகள் இப்பதிவுக்கு மிக முக்கியமானவை, அரசியல்வாதிகளை அடையாளம் காட்டிய மக்களின் உதவி பேருதவியாக இருந்தது.

நாங்கள் பயன்படுத்திய தரவுகளின் மூலங்களினை முடிந்தளவு பெயரிட்டுள்ளோம். சில காணொளிகளின் மூலங்களை அறியமுடியாதுள்ளது அவர்களுக்கும் நாங்கள் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு தடவையும் நாங்கள் காணொளிகளை பிற மூலங்களிலிருந்து கிடைத்த காணொளிகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்துள்ளோம். அவற்றில் மிகத்தெளிவான காணொளிகளை பயன்படுத்தியுள்ளோம். எப்போதும் போல, எம்மை அப்படியே நம்ப வேண்டியதில்லை, தரப்பட்டுள்ள ஆதாரங்களை நீங்களே சரியானவையா காலவரிசை பொருந்தி வருகிறதா என சரிபாருங்கள்.

போராட்டக்களத்தின் தெளிவான படங்களை காண, தினுக்க லியனவத்தவின் இன்ஸ்ராகிராம் பக்கத்தை பின்தொடருமாறு பரிந்துரைக்கின்றோம்.

அடிக்குறிப்புகள்

[1] நஸீர் அஹமட் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் உண்மையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள்; இருப்பினும் பொதுஜன பெரமுன பாராளுமன்றில் இருபதாவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்ற முக்கிய பங்காற்றியிருந்தனர்.

[2] அனைவரும் இந்த ஊடக சந்திப்பினை பார்க்க நாங்கள் பரிந்துரைக்கின்றோம். இன்றைய நிலையினை தெளிவாக எடுத்துக்காட்டும் அச்சந்திப்பு இதோ:

[3] 2020 பொதுத்தேர்தலில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதும் 249,435 வாக்குகளை (2.15%) மாத்திரமே பெற்றிருந்தது. ரணில் போட்டியிட்ட கொழும்பு மாவட்டத்தில் 30,875 வாக்குகளை (2.61%) மாத்திரமே பெற்று, முதல்முறையாக அம்மாவட்டத்தில் ஒரு இடத்தினை கூட பெறமுடியாத நிலைக்கு அக்கட்சி ஆளாகியிருந்தது.

தேர்தல் முடிந்து ஒரு வருடம் கழித்து ஜூன் 2021 இல் அக்கட்சி தனக்கு கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு தேர்தலில் தோல்வியுற்ற ரணிலினை தெரிவு செய்தது.

சுருங்கச் சொன்னால், மக்களின் ஆணையோ ஆதரவோ ரணிலுக்கு இல்லை. கடந்த ஒரு மாத காலமாக ஆயிரக்கணக்கான மக்கள் காலிமுகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கோத்தபாய பதவி விலக வேண்டும் என போராடி வருகின்ற இவ்வேளையில், கோத்தபாய ஜனதிபதியாக தொடரும் வண்ணம் ரணில் பிரதமராக பதவியேற்றுள்ளார். ஒருவரியில் சொல்வதானால் மக்கள் ஆதரவில்லாத ஒருவர் மக்கள் ஆதரவில்லாத இன்னொருவருக்கு ஆதரவு.